Sri LankaWorld

ஊடகவியலாளர் நிமலராஜனின் கொலையாளி எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் லண்டன் பொலிசாரால் கைது

போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் விசேட பொலிஸ் பிரிவின் முதல் இலங்கைப் போர்க்குற்ற விசாரணை நடவடிக்கை

20 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் கொலை தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் லண்டன் மெற்றோபொலிட்டன் பொலிசாரின் போர்குற்ற விசாரணைப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான கண்காணிப்புகள் தொடருமென பொலிசார் அறிவித்துள்ளனர்.

சென்ற வருடம் வவுனியாவில் இடம்பெற்ற காணாமலாக்கப்பட்டவர்களின் நினைவுநாளான்று

பெப்ரவரி 22 ம் திகதி (செவ்வாய்) நோதாம்ப்டன்ஷயர் என்னுமிடத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட இச் சந்தேகநபர் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இக் கைது ஒரு முன்னேற்பாடான நடவடிக்கை மட்டுமே என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றச் சடாம் 2001 இன் 51 ஆவது பிரிவின்படி போர்க்குற்றங்கள் இழைத்தவர்களெனச் சந்தேகிக்கப்படுபவர்கள் கைதுசெய்யப்படலாம். “மிகவும் சிக்கலான இவ்வழக்கின் விசாரணையில் இது ஒரு முக்கியமான படி” என இவ்வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியும், மெற்றோபொலிட்டன் பொலிஸாரின் பயங்கரவாதப் பிரிவின் பொறுப்பாளருமான கொமாண்டர் றிச்சார்ட் சிமித் தெரிவித்துள்ளார்.

“திரு நிமலராஜனின் கொலை தொடர்பாக மேலும் பலர் பல தகவல்களை அறிந்துவைத்திருக்கலாம். அவர்கள் முன்வந்து தகவல்களைத் தருவதன் மூலம் திரு நிமலராஜனது குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க உதவி செய்யலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பின்னணி

பி.பி.சி. தமிழ், சிங்கள ஊடகங்கள், கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி மற்றும் சிங்களப் பத்திரிகையான ராவய ஆகியவற்றுக்கும் செய்தியாளராகக் கடமையாற்றிவந்த மூத்த ஊடகவியலாளரான நிமலராஜன் அக்டோபர் 19, 2000 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து இனம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருந்தார்.

இச் சம்பவம் பற்றி பி.பி.சி. யின் முன்னாள் ஊடகவியலாளரும் தற்போது நீதிக்கும் சமாதானத்துக்குமான திட்டத்தின் பணிப்பாளருமான ஃபிரான்ஸிஸ் ஹரிசன் 2004 இல், இலங்கையை விட்டுப் புறப்படுவதற்கு முதல் பி.பி.சி. சிங்களப் பதிப்பில் எழுதிய குறிப்பு இப்படிச் சொல்கிறது:

“நிமலராஜன் அவரின் வீட்டில், அன்றய பி.பி.சி. தமிழ்ச் சேவையின் இரவுச் செய்தியைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது இரண்டு ஆயுததாரிகள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களில் ஒருவர் நிமலராஜனின் தலையிலும் மார்பிலுமாக ஐந்து தடவைகள் சுட்டார். அதெ வேளை மற்றவர் நிமலராஜனின் வயோதிப தந்தையைக் கத்தியால் குத்தினார். இதன் போது அவரது முகத்திலும் கழுத்திலுமாக 33 செண்டிமீட்டர்கள் காயம் இருந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவித்திருக்கிறது. இச் சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நிமலராஜனின் தாயார் குளியலறையிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது கணவனும் மகனும் நிலத்தில் காயப்பட்டு இரத்தம் ஓடிய நிலையில் கிடந்தார்கள். அவ் வேளை கொலைகாரர்கள் வரவேற்பறைக்குள் ஒரு கைக்குண்டை வீசிநார்கள். இதனால் நிமலராஜனின் தாயாரும் மருமகனும் தீவிர காயங்களுக்கு உள்ளானார்கள். இதன் பின்னர் துப்பாக்கிகளை மேலே வெடித்துக்கொண்டு கொலைகாரர்கள் இருவரும் ஓடிவிட்டார்கள். இது நடைபெற்றபோது ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலிருந்ததும், சம்பவ இடத்திற்கு மிக அருகில் இராணுவ பரிசோதனை வாடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது”

ஃபிரான்ஸிஸ் ஹரிசனின் பதிவை முழுமையாகப் பார்க்க இவ்விணைப்பை அழுத்தவும்.

சந்தேக நபர்கள்

அப்போது இராணுவத்தால் உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாண நகரமையத்தில் இக் கொலை நடைபெற்றிருந்தது. இக் காலத்தில் நடந்து முடிந்திருந்த பாராளுமன்றத் தேர்தல்களின்போது இடம்பெற்றதாகக் கருதப்படும் வாக்குத் திணிப்பு மற்றும் கள்ள வாக்குப் போடுதல் பற்றி நிமலராஜன் செய்திகளை எழுதிக்கொண்டிருந்தார்.

இக் கொலைகளின் பின்னணியில் இலங்கை இராணுவத்தின் துணைக்குழுக்களாக அப்போது இயங்கிக்கொண்டிருந்த ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் (EPDP) உறுப்பினர்கள் இருந்ததாக அப்போது சந்தேகிக்கப்பட்டது. இக் கொலையின் சந்தேகநபர்களெனக் கருதப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த அனைவரும் கடந்த வருடம் சட்டமாஅதிபர் திணைக்களத்தினால் விடுதலைசெய்யப்பட்டிருந்தனர். மேலும் இரு சந்தேக நபர்கள் வேலிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கருதப்பட்டது. சம்பவம் நடைபெற்று 21 வருடங்கள் கழிந்தபின்னரும் நிமலராஜனின் கொலைக்குப் பொறுப்பானவர்களென எவரும் கண்டறியப்படவில்லை.

நிமலராஜனின் கொலை தொடர்பாக உரிய நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக அயராது போராடிவந்த அவரது தாயார் லிலி தெரேஸ் மயில்வாகனம் 2018 இல் கனடாவில் காலமாகிவிட்டதாக, கணவர் சங்கரப்பிள்ளை பயில்வாகனம் எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பிற்குத் தெரிவித்துள்ளார்.

நிமலராஜனின் குடும்பத்திற்கு லண்டன் மெற்றோபொலிட்டன் பொலிசாரின் விசேட அதிகாரிகள் உதவிசெய்து வருகிறார்கள் என அப் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் சம்பவம் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் லண்டன் மெற்றோபோலிட்டன் பொலிஸ் பிரிவுடன் பின்வரும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம்: SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk

(மூலம்: தமிழ் கார்டியன்)