Sri LankaTechnology & Science

ஊக்கி | தொழில்நுட்பத் துறைக்கு வடக்கின் மாற்று வழி!

வளரும் வடக்கு -3
ஜெகன் அருளையா

பெப்ரவரி 12, 2020

ஜெகன் அருளையா

டிசம்பர் 2019 இல் புதிய அரசு பதவியேற்றதும் 64,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைகள் வழங்கப்படுமென அமைச்சரொருவர் அறிவித்திருந்தார். இருந்தும் இலங்கை அவ்வப்போது பல்லாயிரக்கணக்கான புதிய பட்டதாரிகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கிறது. அத்தனை பேரும் அரச சேவைக்குள்ளேதான் நுழைய விரும்புகின்றனர். அரச சேவைகள் ஏற்கெனவே இப்படியானவர்களினால் வீங்கிப்போயிருக்கிறது. அதிகாரிகள் அதிகரிப்பதனால் அதிகாரத்துவமும் (bureaucracy) அதிகரிக்கிறது. அதிக அதிகாரத்துவம் முன்ன்னேற்றத்தைத் தாமதப்படுத்துகிறது. இவ்வேளையில் இலங்கைக்கு மேலும் பட்டதாரிகள் தேவைதானா?

சமீபத்தில், குடிமக்கள் கனக்கெடுப்பு, புள்ளிவிவரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2006 -2016 காலப்பகுதியில், இலங்கையின் பொதுப்பணித்துறை 30% வளர்ச்சி கண்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இதே காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை 7.5 வீதமே வளர்ந்துள்ளது. அதிகரித்த இந்த நான்கு மடங்கு களுக்கு ஈடாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகள் அதிகரித்திருக்கிறதா?

உயர்தரக் கல்வி மானவர்கள் பலகலைக்கழகங்களுக்குள் நுழைவதற்காக ‘A’ களைத் தேடி ஓடுகிறார்கள். உண்மையில் தொழில் முகவர்கள் எதிர்பார்ப்பது ஒரு தொழிலாளி கொண்டுள்ள மூன்று ‘A’ களான Attitude, Aptitude, Application ஆகியவற்றையே அல்லாது பாடங்களில் எப்படியான சித்திகளைப் பெற்றுள்ளார் என்பதையல்ல. ஒருவர் பெற்றுக்கொண்ட பட்டப்படிப்பு அவர் இப்படியான ‘A’ க்களைக் கொண்டிருக்கிறாரா என்பதைக் காட்டித் தராது. பட்டப் படிப்பு எதுவுமில்லத ஒருவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பொறுத்து அவரிடம் இந்த ‘A’ க்கள் இருப்பதை இலகுவில் அறிந்துகொண்டு விடலாம்.

எப்படித் தன்னைக் காட்டிக்கொள்வது என்பதை Yarl IT Hub அறிந்துள்ளது

Yarl IT Hub இலங்கையின் வடமாகாணத்தில் வேர் கொண்டு, கொழும்பிலும் வெளிநாடுகளிலும் கிளைகளைப் பரப்பியுள்ள தகவற் தொழில்நுட்ப நிறுவனம். அவர்களது செயற்கூற்று : “யாழ்ப்பாணத்தை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்கு ஆக்குவது” (To Make Jaffna The Next Silicon Valley). இந்த அமைப்பின் நிறுவன அங்கத்தவர்களில் பலர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கியும், நிர்வகித்தும், பல்லாயிரக்கணக்கான பணியாளர்களுக்கு வேலைகளை வழங்கியவர்களுமாவர். ஒரு நல்ல பணியாளி எப்படியிருக்கவேண்டுமெனக் கோட்பாடு வகுப்பவர்களல்ல இவர்கள். ஒரு நல்ல பணியாளியில் நிறுவனமே தங்கியுள்ளது என்பதை உணர்ந்தவர்கள் இவர்கள்.

Yarl IT Hub

முதலில் செய்த காரியம், அரச பல்கலைக்கழகங்களுக்கோ, தனியார் கல்லூரிகளுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ போகமுடியாதவர்களது அடிப்படைப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்தது. பின்னர் அவர்களை மையப்படுத்திய ஒரு பயிற்சித் திட்டத்தை உருவாக்கி அதைச் செயலாக்குவதற்காக ‘ஊக்கி‘ (catalyst) என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தது.

‘ஊக்கி ‘ கலிபோர்ணியாவிலிருக்கும் தகவல் தொழில்நுட்பக் கல்வி, முகாமைத்துவ அறக்கட்டளை (Information Technology Education and Entrepreneurship Foundation (ITEE Foundation)) , GiZ (ஜேர்மனியைத் தளமாகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. ஆகியவற்றின் ஆதரவில் இயங்குமமைப்பு) மற்றும் லெபாரா அறக்கட்டளை (ஈழத்தமிழரின் நிறுவனம்) ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் நிர்வகிக்கப்படுகிறது. ஏப்ரல் 2017 இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இன் நிறுவனம், மார்ச் 2019 முதல் கிளிநொச்சியிலும் இயங்கி வருகிறது.

கிளிநொச்சி ‘ஊக்கி’ நிறுவனத்தின் நிர்வாகி

கிளிநொச்சி ‘ஊக்கி’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சயந்தினி செல்வராசாவுடன் நான் பேசினேன். கிளிநொச்சியில் பிறந்து வளர்ந்த சயந்தினி, பிரித்தானிய பல்கலைக்கழகத்துடன் இணைந்த கொழும்பிலுள்ள கல்லூரியொன்றில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார். கொழும்பிலுள்ள ஓறியோன் நகரிலிருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் மென்பொருள் பொறியாலராகப் பணியிலிணைந்த அவர் ‘யாழ் ஐ.ரீ. ஹப்’ இலும் இணைந்தார். பின்னர் கிளீநொச்சி ‘ஊக்கி’ நிறுவப்பட்டபோது அதன் தலைமை நிர்வாகியாகும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது.

‘ஊக்கி’ ஒரு தகவல் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம். அதில் சேர்வதற்குத் தகமையாய், க.பொ.த உயர்தரத்தை வெற்றிகரமாக முடித்திருந்தால் போதுமானது. சித்திகளைப் பற்றிப் பொருட்படுத்த மாட்டார்கள்; அரச பல்கலைக் கழகங்களில் அனுமதி மறுக்கப்பட்டவர்கள், தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு வசதியற்றவர்கள், தகவல் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்கள், சமூக மற்றும் இதர செயற்பாடுகளில் ஈடுபாடுள்ளவர்கள் எனப் பலருக்கும் அது சந்தர்ப்பத்தை வழங்கும் என சயந்தினி கூறுகிறார்.

“‘ஊக்கி’யில் இணைவதற்கு நிறைய விண்ணப்பங்கள் இருந்தும், இடப் போதாமையால் அனைவரையும் சேர்த்துக்கொள்ள முடியாமலிருக்கிறது. 20 இடங்களுக்கு 45 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. இஅவை அத்தனையும் கிளிநொச்சி வளாகத்துக்கு மட்டுமே. வெற்றிகரமான விண்ணப்பதாரிகளுக்கு கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது” என்கிறார் சயந்தினி.

‘ஊக்கி’ யில் நிரந்தர விரிவுரையாளர்கள் பணியாற்றுகிறார்கள். அதே வேளை ‘யாழ் ஐ.ரீ. ஹப்’ இலிருந்து சிறப்பு வருகை விரிவுரையாளர்கள் வந்து, தகவல் தொழில் நுட்பம், சந்தைப்படுத்தல், தொழில் முகாமைத்துவம் போன்ற விடயங்களில் விரிவுரைகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் செய்கிறார்கள். அத்தோடு, ‘ஊக்கி’ ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகை விரிவுரையாளர்கள் மூலம் ஆங்கிலக் கல்வியையும் போதிக்கிறது. ஆங்கிலம் தகவல் தொழில்நுட்பத்தின் இணைப்பு மொழி. அது சிங்கள – தமிழ் மொழி பேசும் பணியாளர் மற்றும் இலங்கையின் வேகமாக வளர்ந்துவரும் சர்வதேச வாடிக்கையாளர் ஆகியோருடன் தொடர்புகளைப் பேணும் மொழியாகவும் உள்ளது. அத்தோடு, ஒரு வணிக நிறுவனத்தை ஆரம்பிக்கவும் நிர்வகிக்கவும் தேவையான ஆரம்ப நெறிமுறைப் பயிற்சிகளையும் ‘ஊக்கி’ தன் மாணவர்களுக்கு வழங்குகிறது.

வேலை வாய்ப்புகள்

‘ஊக்கி’ யில் பயிலும் மாணவர்களைச் சிறந்த நிறுவனங்களில் பயிற்சிப் பணியாராக அமர்த்தும் உதவிகளையும் இன் நிறுவனம் செய்து கொடுக்கிறது.  Kale Systems99X TechnologiesIdea Factory மற்றும் Cookoo Eats ஆகிய நிறுவனங்கள் ‘ஊக்கி’ மானவர்களைப் பயிற்சிப் பணியாளராகச் (interns) சேர்த்துக்கொள்கின்றன. (இவற்றில் ஒரு நிறுவனத்தின் நிறுவனர் ‘ஊக்கி’ யில் கல்வி கற்றுத் தேறியவர்).

சாதனைகள்

இதில் விசேடமென்னவென்றால், ‘யாழ் ஜீக் சலெஞ்’ (Yarl Geek Challenge) என நடத்தப்படும் திறமைப் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கைப் பல்கலைக் கழகங்களுக்கிடையிலான போட்டியில் ‘ஊக்கி’ மாணவர்களும் கலந்துகொள்வதுமல்லாது வெற்றியும் ஈட்டி வருகிறார்கள் என்பது.

இந்த வருடம் தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலக தொழில் முயற்சி மாணவர் விருது விழாவில் (Global Entrepreneur Students Award )

இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் யதுஷா குலேந்திரன் ஒரு ‘ஊக்கி’ மாணவி மட்டுமல்ல இலங்கைப் பல்கலைக்கழகப் போட்டியாளரை வெற்றிகொண்ட ஒருவருமாவார். அவரது ‘ஓலை’ (Olai) என்ற தொழில் முயற்சி நிறுவனத்தை இவ் விருது விழாவில் காட்சிப்படுத்தவுள்ளார்.

ஒரு ‘ஊக்கி’யின் பட்டதாரி

சிறீராம் ஜெகதீசன் பாடசாலையில் சறுக்கியதை ஒப்புக் கொள்கிறார். பருத்தித் துறையிலுள்ள பிரபல பாடசாலையான ஹாட்லிக் கல்லூரிக்குச் செல்லக்கூடிய வசதிகளிருந்தும் அவர் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதும், தொலைக்காட்சி பார்ப்பதிலும் தன் நேரத்தைச் செலவிடுவதுண்டு. அவர் புத்தகங்களைக் கண்டது பள்ளிக்கூடத்தில் ஆசிரியை ஒருவரின் மேற்பார்வையின்போது தான். அவர் மேற்கொண்டு முயற்சி எடுத்தால் மருத்துவராக ஆக முடியுமென அவரது இன்னுமொரு ஆசிரியர் சொன்னதாகச் சொல்கிறார் சிறீராம். நான் அவரை, இக்கட்டுரைக்காக செவ்வி கண்டபோது, அவரது ஆங்கிலப் புலமையையும், பேச்சுத் திறனையும், தன்நம்பிக்கையையும் கண்டு அசந்து போனேன். அவரது ஆசிரியர் சொன்னது சரிதான், நான் ஒரு மருத்துவராக வந்திருக்கக் கூடியவருடன் தான் உரையாடுகிறேன் எனப் புரிந்து கொண்டேன். விதி வேறு விதமாக இருந்திருந்தால் நான் அவரது நோயாளியாகவும் இருந்து, அவர் எனது இரத்த அழுத்தம், கொலெஸ்டெரோல், சீனி விடயங்களைப் பற்றி செவ்வி கண்டிருக்கவும் கூடும் (குளிசைகளுக்கு நன்றி, எல்லம் நன்றாகவே உள்ளது)

சித்தியெய்தப் போவதில்லை என உணர்ந்ததும் சிறீராம் 2014 இல் தனது க.பொ.த. உயர்தரப் பரீட்சையை எழுதவில்லை. தனது முயற்சிகளுக்கு மேலும் கால அவகாசம் வாங்கிக்கொள்ளும் அதே வேளை அவர் கிரிக்கெட்டுடனும், ரீ.வீ. யுடனும் காலத்தைப் போக்கினார். 2015, 2016 ஆண்டுகளில் அவர் எடுத்த உயர்தரப் பரீட்சைகள் அவரைக் கைவிட்டு விட்டன. இத் தோல்விகள் அவரது முயற்சியைத் தூண்டிவிட்டன.

பல்கலைக் கழகம் பற்றி நினைக்கவே முடியாத நிலையில், இலங்கையின் தனியார் கல்லூரியொன்றில் இணைந்து பட்டப்படிப்பை முடிக்கத் திட்டமிட்டார். பாடசாலையில் படிக்கும்போதே சிறீராம் தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஃபோன் மற்றும் கணனிகளைப் பழுதுபார்த்துக் கொடுப்பார். கருவிகளின் மீது அவர் கொண்டிருந்த காதல் அவரை ஒரு தகவற்தொழிநுட்பக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெறத் தூண்டியது. இருப்பினும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் அவரது குடும்ப நண்பர் ஒருவர் ‘ஊக்கி’யில் இணையும்படி பரிந்துரைத்தார்.

ஊக்கி கொடுத்த ஊக்கம்

பட்டப்படிப்பு என்றால் குறந்தது 4 அல்லது 5 வருடங்கள் ஆகும். ஆனால் ‘ஊக்கி’ ஆறு மாதங்களிலேயே ஒருவரைப் பயிற்சிப் பணியில் (internship) இணைத்து விடுகிறது. சிறீராம் ‘ஊக்கி’ யில் சேர்வதற்கு விண்ணப்பித்து 2018 ஆரம்பத்தில் அதில் இணைந்து தன் பயிற்சியைத் தொடங்கினார்.

“‘ஊக்கி’ ஒரு கல்லூரி மாதியல்ல. அது ஒரு குடும்பம் மாதிரி” என்கிறார் சிறீராம்.

பல நாட்கள் ‘ஊக்கி’யில் மகிழ்ச்சியாகக் கழிந்தன. அரைவாசி நாட்களில் அங்கு ‘கோடிங்’ (coding) எனப்படும் மென்பொருள் வகையைத்தான் கற்பித்தார்கள். இன்றய தகவற் தொழில்நுட்பம் இவ்வகை மென்பொருளை மையப்படுத்தித்தான் இயங்குகிறது. மீதி அரைவாசி நாட்களில் துறைப் பிரவேசத்துக்குத் தேவையான வாழ்க்கைத் திறன்கள் (life skills) பற்றிய போதனைகள் நடக்கும். காட்சிப் படுத்தல் (presentation), செவ்வியை எதிர்கொள்ளல் (interview), உடையணிதல் (how to dress), தொழிலாரம்பம் (how to start a business), ஆரோக்கியத்தைப் பேணுதல் (how to keep fit), ஆங்கிலம் (English) ஆகியன இப் போதனகளில் சில.

நான் சிறீராமை இக் கட்டுரைக்காகச் செவ்வி கண்டபோது இத்தனை திறன்களையும் அவரிடம் அவதானிக்க முடிந்தது.

ஊக்கி யில் வகுப்பு

ஆகஸ்ட் 2018 இல் சிறீராம் தனது பயிற்சிப் பணியை அரிமா வில் ஆரம்பித்தார். அனிமா, யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட ஒரு மென்பொருள் நிறுவனம். இதைப்பற்றி நான் வேறொரு தடவை லங்கா பிசினெஸ் ஒன்லைனில்’ எழுதியிருக்கிறேன்.

ஜனவரி 2019 இல் ‘அரிமா’ சிறீராமுக்கு முழுநேரப் பணியொன்றை வழங்கியது. அசோசியேட் சொஃப்ட்வெயர் எஞ்சினியர் பதயிலிருந்த அவர் சொஃப்ட்வெயர் எஞ்சினியராகப் பதவியுயர்த்தப்பட்டார். தற்போது அவர் ‘அரிமா’ வின் சகோதர நிறுவனமான ‘ ஆரோக்யா லைஃப்’ (Arogya.Life) என்னும் நிறுவனத்தில் முக்கிய பொறியியலாளர்களில் ஒருவராக இருக்கிறார்.

‘ஆரோக்யா’ இன்னுமொரு வெற்றியின் அடையாளம். மருத்துவமனைகளின் செயற்பாட்டு முகாமைத்துவத்தை (critical hospital management system) நிர்வகிக்கும் மென்பொருட் தொகுதியை அது வடிவமைக்கிறது. இலங்கையில், கொழும்பு, தலவாட்டுகொடவிலுள்ள ஹேமாஸ் மருத்துவமனை, இரத்தினபுரியிலுள்ள சிங்ஹ மருத்துவமனை, யாழ்ப்பாணத்திலுள்ள மூளாய் மருத்துவமனை ஆகியன இந் நிறுவனத்தின் பென்பொருளையே பாவிக்கின்றன.

‘அரிமா’ வுக்கு யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் அலுவலகங்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தையே அது தொடர்பு மொழியாகப் பாவிக்கிறது.

சிறீராமின் சகபாடிகள் ஹாட்லிக் கல்லூரியில் 2014 இல் உயர்தரப் பரீட்சையை எழுதி, 2015 இல் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று 2019 இறுதியில் தமது பட்டங்களைப் பெற்றார்கள். சிறீராம் 2016 வரையில் தனது உயர்தரக் கல்வியைக் குழப்பி வந்தார். 2018 இல் ‘ஊக்கி’யில் இணைந்து ஜனவரி 2020 இல் அவர் ‘அரிமா’வின்’ நிரந்தரப் பணியில் முதலாவது பதவியுயர்வையும் பெற்றுவிட்டார்.

பணி நிறுவனம்

சிறிகரன் அரியகுமார், சிறீராமைப் போலல்லாது, ஹாட்லிக் கல்லூரிக்குச் சென்றார். தற்போது கொழும்பில் வாழ்கிறார். தொழில்நுட்பம், பொறியியல் போன்ற துறைகளில் இலங்கையின் முன்னணிப் பல்கலைக்கழகமான மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் 2008 இல் தன் பட்டக் கல்வியைத் தொடங்கினார். ஒரு தொழில்நுட்ப வணிகத்தின் முதல்தர உதாரணம் அவர். பட்டம் பெற்றபின், இரு வேறு பிரித்தானிய மென்பொருள் நிறுவனங்களுக்குப் பணியாற்றியபின் தற்போது இலங்கையில் இருக்கும் அவரது குடும்ப கட்டுமான நிறுவனமொன்றில் பணி புரிகிறார்.

நிறுவனங்களுக்கான வளத் திட்டமிடல் (Enterprise Resource Planning (ERP)) என்றொரு மென்பொருளைச் சிறிகரன் வடிவமைத்தார். பின்னர் 2015 இல் அவர் ‘ரெக்கோறின்’ (Techorin) என்றொரு மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் தனது மென்பொருள்களை வடிவமைத்து, சந்தைப்படுத்தி வருகிறார். வட அமெரிக்க நிறுவனமொன்று அவர் உருவாக்கிய ‘வெயர்ஹவுஸ் மனேஜ்மெண்ட் சிஸ்டம்’ (Warehouse Management System) ஒன்றைப் பாவித்து வருகிறது. ‘ரெக்கோறின்’ தற்போது இணைய, கைத்தொலைபேசி அப்பிளிகேசன்களை உருவாக்குவதில் முனைப்புக்காட்டி வருகிறது.

சிறிகரனும் ‘யாழ் ஐ,ரீ. ஹப்’ இல் ஒரு அங்கத்தவர். ‘யாழ் ஜீக் சலஞ்’ போட்டிக்காகப் பல குழுக்களை அவர் தயார்படுத்தித் தந்திருக்கிறார். 2012 இல் அவர் தயார் படுத்திய குழுக்களில் ஒன்றுதான் ‘அரிமா’. ‘ஊக்கி’ பற்றி நான் சிறிகரனின் அபிப்பிராயத்தைக் கேட்டேன். ‘ஊக்கி’யின் மூன்று பயிற்சி மாணவர்கள் அவரிடம் பணிபுரிந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திமோஷன். திமோஷனை அவர் தனது பயிற்சிப் பொறியியலாளராக பெப்ரவரி 2019 இல் சேர்த்திருந்தார். புதியவர்களை அவர்களது சுய விருப்புகளுக்கேற்ப சவால்கள்களை ஏற்றுப் பணியாற்ற அனுமதிப்பது வழக்கம். முன்னணிப் பல்கலைக்கழகங்களிலிருந்து வந்தவர்கள் உட்படப் பலர் 3-4 நாட்கள் எடுத்து இப்பணிகளைச் செய்து முடிப்பார்கள். திமோஷன் அதை ஒரே நாளில் முடித்து விட்டார். அவரது திறமையைக் கண்ட சிறிகரன், நிறுவனத்துக்குப் புதிய வரவான திமோஷனுக்குப் பதவி உயர்வு கொடுத்து ‘புரொடக்ட் டெவொலப்மென்ட் ‘ (product development) திணைக்களத்துக்கு மாற்றிவிடடார். முன்னரே மாதங்களில் அதையும் வெற்றிகரமாக்கிய திமோஷனுக்கு அடுத்த உயர்வு ‘மொபைல் அப்ஸ்’ திணைக்களத்துக்கு. அக்டோபர் மாதம், அவரோடு சமகாலத்தில் இணைந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலாக, திமோஷன் ‘சீனியர் சொப்ட்வெயர் எஞ்சினியராகப்’ பதவியுயர்த்தப்பட்டார்.

எதிர் காலம்

பல்கலைக்கழகத்துக்கான ஓட்டத்தில் பல திறமைகள் அடிபட்டுப் போகின்றன என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக, தனியார் பல்கலைக்கழகங்களுக்குப் போவதற்கு வசதியில்லாத மாணவர்கள் சந்தர்ப்பங்களை இழக்கிறார்கள். அரச புள்ளி விபரங்களின்படி 2018 இல் மட்டும் அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான 167,907 மாணவர்களில் 31,451 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 130,000 க்கும் மேலானவர்கள் தகமை பெற்றிருந்தும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இது ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது!

‘ஊக்கி’ யும் ‘யாழ் ஐ.ரீ .ஹப்’ நிறுவனமும் மிகப் பெரும் சவால்களுடனான திட்டங்களை வகுத்திருக்கின்றன. 2017 இல், அந் நிறுவனங்கள் வகுத்த 5 ஆண்டுத் திட்டத்தின்படி 10,000 மாணவர்களுக்கு டிஜிட்டல் வழிக் கல்வியும், 1,000 மாணவர்களுக்கு தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்பும், 100 புதிய தொழில் முயற்சிகளும் வட மாகாணத்தின் வழியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த இரண்டு நிறுவனங்களும் முற்று முழுதாகத் தனியார் நிதியில், உலகம் முழுவதிலுமிருந்து தகவல் தொழில்நுட்ப நிபுணர்களின் நேரம், திறமை, ஆதரவு ஆகியவற்றுடன் நிர்வகிக்கப்படுபவை.

‘ஊக்கி’ தங்கள் தொழில்நுட்பக் கல்வியைப் பெற்றுப் பலன் பெறும்படி மாணவர்களுக்குத் தொடர்ந்தும் அழைப்பு விட்டுக்கொண்டிருக்கிறது. நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த யாராவதோ ‘ஊக்கியில்’ இணைந்து பலன் பெற விரும்பினால், அவர்களது இணையத் தளம் http://uki.life/ வரவேற்கின்றது.

Uki மற்றும் Yarl IT Hub பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் பாலதாசன் சயந்தன் அவர்களுடன் sayanthan@yarlithub.org என்ற ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

(-ஜெகன் அருளையா இலங்கையில் பிறந்து அவர் இரண்டு வயதாகவிருக்கும்போதே குடும்பத்துடன் இலண்டனுக்குச் சென்றவர். 1986 இல், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் படம் பெற்ற அவர், அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு மேல் தகவல் தொழில்நுட்பத் துறையில் இலங்கையிலும், இந்தியாவிலும் பணி புரிந்துவிட்டு 2015 இல் யாழ்ப்பாணத்திற்கே குடி பெயர்ந்தவர். அங்கு அவர் சமூக, பொருளாதார திட்டங்களில் பணியாற்றி வருகிறார். இக் கட்டுரை லங்கா பிசினஸ் ஒன்லைன் பத்திரிகைக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பிரசுரமானது. அதன் மொழிபெயர்ப்பு அவரின் அனுமதியுடன் ‘மறுமொழி.கொம்’ இல் மில் பிரசுரமாகிறது. மொழி பெயர்ப்பு: சிவதாசன்)