Art & LiteratureBooks

‘உள்ளம்’ – காலாண்டிதழ் பற்றி….

நூல் வருகை

மாயமான்

‘உள்ளம்’ என்றொரு கலை, இலக்கிய, சமூகக் காலாண்டிதழ் ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகிறது. முன்னர் அச்சில் வந்து நின்றுபோய்ப் பின்னர் இப்போது மீண்டும் மிடுக்கோடு வருகிறது.

கள்ளைத் தவறணையில் வாங்கிக் குடிப்பதைவிட அதை இறக்கும்போதே மரத்தடியில் வைத்துக் குடிப்பதின் சுவை வேறு. நான் சொல்வது புளிப்பதற்கு முதல். தமிழுக்கும் நிலை அதுதான். அது என்னமோ அந்த மண்ணிலிருந்து வெளிவரும்போது அதன் மணம் வேறு. புலத்தின் தமிழுக்கு என்ன இருந்தாலும் அந்த ‘அன்னிய’ மணம் ஒட்டிக்கொண்டு விடுகிறது.பழமையைத் தேடிப் போவதும், பழைமைக்காக இறைஞ்சுவதும் சகல மனிதர்களிடத்தேயும் இருக்கும் பண்பு. வழக்கொழிந்து போனதாகக் கருதப்படும் நிழற்படக் கருவிகளும் (cameras with film rolls), கிராமஃபோன் கருவிகளில் வைனைல் இசைத் தட்டுகளைச் சுற்றி ஓடவிட்டு இசையைக் கெட்டு மகிழ்வதும் மீண்டும் பழக்கத்துக்கு வரும் காலமிது. இவ்வேளையில் எங்கோ ஒரு வேப்பமர நிழலில் ஒரு சில ஊரிளைஞர், கிடைக்கும் சில்லறையோடு ஆரம்பித்து சனத்துக்குச் சேவைசெய்யவெனப் புறப்பட்ட ‘சனசமூக நிலையங்கள்’ மீண்டும் துளிர்ப்பது வரலாற்றுச் சுழற்சியின் நிர்ப்பந்தம்.

கொக்குவில் வளர்மதி முன்னேற்றக்கழகத்தின், கலை, இலக்கிய, சமூக காலாண்டு வெளியீடு என்ற அறிமுகத்தோடு வந்திறங்கிய மார்கழி 2021 இதழ் என்னை அப்படியொரு வேப்ப மரத்தின்கீழ் கொண்டுபோய் விட்டிருந்தது. அதே வெக்கை, அதே நிழல், அதே புழுதி, அதே மணம், ஏக்கத்தோடு பார்க்கும் அதே தெருநாய் – இதழைப் புரட்டும்போது நான் அங்கேதான் நின்றிருந்ததான உணர்வு. எச்சிலைத் தொட்டு இதழைப் புரட்டும்போது எழும் அச்சு மணம் மட்டும் கிடைக்கவில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றமேயானாலும் உள்ளடக்கம் அதை ஓரளவு ஈடுசெய்தது.

கதை, கட்டுரை, கவிதை என்பவவற்றை வர்ணங்களோடு குழைத்துத் தரும்போது அதற்குக் கொஞ்சம் கிறுக்கம் ஏற்படத்தான் செய்கிறது. இதழ் வடிவமைப்பை கணேஸ் தபீந்திரன் செய்திருக்கிறார். ஏறத்தாழ 100 பக்கங்கள். எனக்குக் கிடைத்தது மின்னிதழாக இருந்ததனால் அத்தனை பக்கங்களையும் ஒரேயடியாகப் புரட்டிப்பார்ப்பதற்குள் கண்கள் களைத்துப் போனது உண்மை. வழக்கமான 50 பக்க சஞ்சிகையாக இருந்திருந்தால் நல்லது என நினைக்கிறேன். இலங்கை ரூ.250 என மூலையொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அச்சில் வருவனவற்றை வாசிக்கும் பழக்கம் அருகிவருகிறது எனச் சிலர் கூறலாம். கணனிகள் மக்களின் வாழ்வில் குறுக்கிட்டமை ஒரு தற்காலிக மாற்றம் மட்டுமே, கமரா, கிராமஃபோன்கள் மாதிரி அச்சுப் பிரதிகள் வாசிப்பின் மீள்வருகைக்கான காலமும் வெகுதூரமில்லை. சகல புலன்களையும் திருப்திப்படுத்தும் ஒரு சாதனமே நிலைத்து நிற்கும்.

‘உள்ளம்’ உலகம் முழுவதும் செல்வதற்கான வழிகள் செய்யப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது. பாருங்கள், நுகருங்கள், முகருங்கள், அனுபவியுங்கள். படைப்பாளி ஒருவன் பணத்தினால் திருப்தியடைவதில்லை மாறாகப் படைப்பினை ரசிப்பவர்களினால்தான் அவனது மனம் நிரம்புகிறது. ஆதரவு கொடுங்கள். வாசிக்க: www.ullamm.com