LIFESpiritualityWorld

உளூர் பாறை மீதேறத் தடை | அவுஸ்திரேலிய அணங்கு குல மக்களுக்கு வெற்றி!

அக்டோபர் 25, 2019

A crowd of climbers scaling Uluru on 2 October 2019
பாறையேறும் சுற்றுலாவாசிகள்

உளூரு (Ayres Rock) எனப்படும் பாறை மத்திய அவுஸ்திரேலியாவிலிருக்கிறது. அலிஸ் ஸ்பிறிங்ஸ் எனப்படும் நகரத்திலிருந்து 450 கி.மீ. தூரத்திலிருக்கும் இப் பாறை அணங்கு குல ஆதிவாசிகள் தமது புனித சின்னமாகப்பாவிக்கப்டும் ஒரே கல்லிலாலான பாறை. 2830 அடி உயரமான சிவப்பு நிறப் பாறை உளூரு – கதாயுத தேசியப் பூங்காவினுள் இருக்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாக அணங்கு மக்களால் புனித தலமாகப் பேணப்பட்டு வந்த இப் பாறை அவர்களின் எதிர்ப்பையும் மீறி உல்லாசப் பயணிகள் ஏறி பொழுது போக்கும் இடமாகக் பாவிக்கப்பட்டு வந்தது. ஆதிவாசிகளின் வேண்டுகோளுக்கிணங்கிய மத்திய அரசு 2017 இல் பாறையில் ஏறுவதற்குத் தடைவிதித்திருந்தது. அதையும் மீறி உல்லாசப் பயணிகள் உளூர் பாறையின் மீது ஏறுவது வழக்கமாகவிருந்தது. இந்த சனி (26) முதல் உளூர் பாறை உல்லாசப்பயணிகள் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளது. இதனால், தடை வருவதற்கு முன் இறுதி நாளான வெள்ளியன்று பெருமளவு மக்கள் பாறை மீது ஏறுவதற்குத் திரண்டிருந்தார்கள்.

இப் பாறை ஏன் அணங்கு மக்களின் புனித சின்னமாகப் போற்றப்படுகிறது என்பதற்குப் பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டுவரும் வாய்வழிக் கதையொன்றுண்டு.

Aboriginal elders gather for a ceremony ahead of a permanent ban on climbing Uluru that comes into place on October 26, at Uluru,
அணங்கு குல முதியோர்

ஆரம்பத்தில் உலகம் எந்த வடிவங்களையும் கொண்டிராத, ஒருமைத் தன்மையாக இருந்தது எனவும் தமது முன்னோர்களே முதன் முதலில் தோன்றி உலகம் முழுவதும் பரந்து சென்று சகல உயிர்களயும், உயிரற்றனவற்றையும் உருவாக்கினார்கள் எனவும் அப் படைப்புக் காலத்தில் சடங்குகளைச் செய்த இடம் தான் உளூர் பாறை எனவும் அணங்கு மக்கள் இன்றும் நம்பி வருகின்றார்கள்.

அவர்களின் வாய் வழிக் கதைகளில் இன்னுமொன்று: வடக்கிலிருந்து வந்த லுங்காத்தா என்ற பெயருடைய, நீல நாக்குடைய, நேர்மையற்ற பேராசை கொண்ட உடும்பொன்று எமுவின் உணவை உண்டு வந்தது. ஒரு நாள் எமு லுங்காத்தாவைப் பின் தொடர்ந்து பாறையிலுள்ள அதன் குகைக்குச் சென்றது. லுங்காத்தா எமுவை உதாசீனம் செய்துவிட்டு தூங்கப் போய்விட்டது. எமு கடுங் கோபம் கொண்டு குகையின் வாசலில் நெருப்பைக் கக்கியது. குகையின் உட்புறம் புகையால் மூடப்பட்டதால் லுங்காத்தா மயங்கி விழுந்துவிட்டது. அது பாறையிலிருந்து விழுந்த இடம் இப்போதும் நீல நிறத்தில் காட்சியளிக்கிறது. லுங்காத்தா உளூரில் எப்போதும் மற்றவர்களின் உணவைத் திருடி உண்டுவந்தபடியால் அதற்கு நேர்ந்த கதி இதுதான் என அணங்கு மக்கள் தமது குழந்தைகளை நல்வழிப்படுத்த இப் பாறையின் நீல நிறத்தைக் காட்டுவதுண்டு.

இப் பாறைமீது நடப்பது மிகவும் ஆபத்தானது. கோடை காலத்தில் இப் பாறையின் வெப்பநிலை 47 பாகை செல்சியஸ் (116degF) வரைக்கும் போகிறது. பல பயணிகள் இறந்துபோயிருக்கிறார்கள்.

பாறையில் ஏறக்கூடாது எனப் பல பதாகைகள் வைக்கப்பட்டிருந்தும் சுற்றுலாவாசிகள் அதை மதிக்காமல் தொடர்ந்தும் ஏறி வருகிறார்கள். “இது எங்களுக்குத் தேவாலயம் போன்றது” என ஒரு அணங்கு மனிதர் கூறுகிறார். ” இது ஒரு வெறும் பாறை. பாறைகள் என்றால் எவரும் ஏறத்தான் செய்வர்” என சுற்றுலாவாசிகள் கூறுகின்றனர்.