Arts & EntertainmentCanadian Tamil Congress

உலக தமிழர் தெருவிழா

சிவதாசன்

உலகத் தமிழர்களின் பெருவிழா கனடிய தெருவொன்றில் பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளதாக இவ்விழாவின் ஒழுங்கமைப்பாளர்களான கனடிய தமிழர் பேரவை அறிவித்திருக்கிறது. ஆவணி (ஆகஸ்ட்) மாதம் 22, 23 ஆம் நாட்களில் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள மார்க்கம் நகரின் ஒரு பிரதான தெருவொன்றில் நிகழவிருக்கும் இவ்விழாவை உலகத் தமிழர்களின் பெருவிழா எனக் கூறியமைக்கொரு காரணமுண்டு.

மார்க்கம் நகரபிதா ஃபிரான்க் ஸ்கார்பிட்டி மற்றும் நகரசபை பிரதிநிதிகளுடன் கனடிய தமிழர் பேரவை உபதலைவர் துஷி ஞானப்பிரகாசம்

விழா என்பது பெருவெளியில் சகலவிதமான மக்களும் ஒன்றுகூடி உண்டு, பேசி, உறவாடிக் கழிக்கும் சம்பவத்தைக் குறிக்கிறது என சங்ககால இலக்கியங்கள் கூறும். குறிப்பாகப் பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் பூம்புகார் விழாவை இக்கனடிய தமிழர் தெருவிழாவிற்கு ஒப்பிடலாம். வணிகர் பகுதியை மருவூர்ப்பாக்கம் எனவும் மக்கள் வாழும் பகுதியை பட்டினப்பாக்கம் எனவும் அழைப்பார்கள் எனப் பட்டினப்பாலை சொல்கிறது. பூம்புகார் ஒரு உலக வணிகர்கள் ஒன்றுகூடும் இடம். இங்கு நடைபெறும் இந்திர விழாவின் போது வெளிநாட்டு வணிகர்களும் உள்ளூர் வணிகர்களும் தத்தம் வணிகப் பொருட்களைக் காட்சிப்படுத்துவது மட்டுமல்லாது அவரவர் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையும் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொள்வார்கள். தமிழ் நாட்டின் சங்குகளை அரிந்து செய்யப்படும் காதணிகளுக்கும் பருத்தி ஆடைகளுக்கும் சிறந்த உருக்கினால் செய்யப்பட்ட போராயுதங்களுக்கும் கிரேக்க, ரோம, யவன வணிகர்களிடத்தில் பெரு மோகம் இருந்தது.


கனடிய தமிழர் தெருவிழாவும் ஒரு வகையில் ஒரு இந்திர விழாதான். தமிழர்களின் பண்பாடு, உணவு, இசை, நாட்டியம் போன்ற கலாச்சாரக்கூறுகளை இதர கனடிய – உலக சமூகங்களுக்குப் பறையாற்றும் ஒரு பெருவிழாவாக கடந்த 10 வருடங்களுக்கு மேல் நடைபெற்றுவருகிறது இப்பெருவிழா.

இதுவரை காலமும் ரொறோண்டோ நகரின் மார்க்கம் பெரும்தெருவில் நடைபெற்று வந்த இவ்விழாக்களில் ஏறக்குறைய இரண்டு இலட்சம் மக்கள் பங்குபற்றியதாக கூறப்பட்டது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற இடங்களிலிருந்து இவ்விழாவைப் பார்க்கவென வந்துபோகும் பலரை எனக்குத் தெரியும். இப்பெருவிழா தந்த வெற்றி காரணமாக அயல் நகரங்கள் இவ்விழாவைத் தம்மிடங்களில் நடத்துமாறு கேட்டுக்கொண்டதுமுண்டு. இதன் காரணமாக இவ்விழா இம்முறை ரொறோண்டோவிலிருந்து மார்க்கம் நகருக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இவ்வருட (2026) விழாவிற்கான பறையறிவிப்பு நேற்று (ஆடி 13, 2026) மார்க்கம் நகரிலுள்ள பானாம் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. தமிழர்களின் நீண்டகால நண்பரும் மார்க்கம் நகரபிதாவுமான ஃபிராங்க் ஸ்கார்ப்பிட்டி மற்றும் இந்நகர, பிராந்திய பிரதிநிதிகள் (கவுன்ஸிலர்கள்) புடை சூழ நடைபெற்ற இந்நிகழ்விற்கு செல்லும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

இந்நிகழ்வில் பேசிய நகரபிதா, இவ்விழாவை மார்க்கம் நகரிற்கு இடம்பெயர்க்க தான் பல ஆண்டுகளாக மேற்கொண்டுவந்த முயற்சி இப்போது பலனளித்திருப்பதாகவும் கனடாவின் பெரு நகரங்களில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் நகரமாகையால் மார்க்கம் நகரே தமிழர் தெருவிழா நடைபெறவேண்டிய இடமெனவும் அவர் மிகவும் குதூகலமாகக் கூறினார். அதற்காக மார்க்கம் நகர் சார்பாக ஒரு சிறிய பணப்பங்களிப்பைத் தருவதாகவும் அவர் அறிவித்தார்.

இவிழாவின் அமைப்பாளர்களாகிய கனடிய தமிழர் பேரவை ஈழம் வாழ் தமிழர்களின் நல்வாழ்வை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட அமைப்பல்லவா? இப்படியான சமூக கொண்டாட்டங்களை அது ஏன் ஒழுங்கு செய்யவேண்டும் என ஒரு ஐந்தாம் அறிவுக் கேள்வியை நான் கேட்டேன். அமைப்பாளர்களில் ஒருவர் அதற்கு அளித்த பதிலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. “எமது பாரம்பரிய கலாச்சார விழுமியங்கள் தான் எமது பலங்களையும் பண்புகளையும் வெளிப்படுத்துகின்றன. இந்நாட்டினதும், நகரத்தினதும் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் எமது சமூகம் பங்களிக்க வல்லது எனக்காட்டுவதற்கு இப்படியான விழாக்கள் அவசியம். இங்குதான் எமது சமூகம் தன் பலத்தைக் காட்சிப்படுத்துகிறது. இப்பலத்தின் ஈர்ப்பினால் தான் அரசியல்வாதிகள் எம்மை நோக்கிப் படையெடுக்கிறார்கள். இன்று மூன்று நிலை அரசுகளிலும் தமிழர்கள் வலம் வருகிறார்கள் என்றால் அதற்கான அடிப்படை இப்படியான விழாக்கள் மூலம் தான் சாத்தியமானது” என்றார். வாயடைத்துப் போனேன்.

பக்கத்தில் நின்ற நண்பர் ஏதோ முணுமுணுத்தார். மு…ட்…டை… என்பதுபோலக் கேட்டது. காட்சிப்படுத்தலில் பலவகை உள்ளது என்றார். நழுவி விட்டேன்.