Sports

உலக சதுரங்கப் போட்டி இறுதிச் சுற்றுக்கு பிரக்ஞானந்தா

உலகின் 2ம், 3ம் நிலைச் சாதனையாளர்களைத் தோற்கடித்தார்!

சதுரங்க விளையாட்டின் வரலாற்றிலேயே 10 வயதில் அதி வயது குறைந்த ‘இன்டர்நாஷனல் மாஸ்டர்’ என்ற பட்டத்தைப் பெற்ற சென்னையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா இப்போது தனது 18 ஆவது வயதில் உலகக் கிண்ணத்தையும் தட்டிக்கொள்ளும் நிலைக்கு முன்னேறியிருக்கிறார். ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்ற போட்டியில் உலகின் இரண்டாம் இடத்திலிருந்த ஹிகாறு நக்காமுறாவையும், மூன்றாம் இடத்திலிருந்த ஃபபியானோ கறுவானாவையும் தோற்கடித்ததன் மூலம் உலகின் முதலாம் நிலை ஆட்டக்காரரான மக்னஸ் கார்ள்செனுடன் ஆடும் சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கிறார். 2023 ம் வருடத்துக்கான FIDE உலகக் கிண்ணப் போட்டி ஆகஸ்ட் 22, 24 ம் திகதிகளில் பாகு, ஆஜெர்பஜானில் நடைபெறவுள்ளது.

முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலை ஆட்டக்காரர்களை வெற்றிகொண்டதனால் 2024 இல் Candidates Event இல் உலக சதுரங்க சம்பியனான லிறென் டிங்குடன் மோதுவதற்கான தகமையை பிரக்ஞானந்தா பெறுகிறார். 2022 இல் கார்ள்சனுடன் ஆடிய இணையவழி ஆட்டத்தில் 39 காய் நகர்த்தல்களில் அவரைத் தோற்கடித்திருந்தார்.

2016 இல் 10 வயதாக இருக்கும்போதே அதி வயது குறைந்த International Master என்ற நிலையை எட்டியதன் மூலம் பிரக்ஞானந்தா உலகப் புகழைப் பெற்றிருந்தார். 12 ஆவது வயதில் இத்தாலியில் நடைபெற்ற கிறெடீன் ஓப்பிணில் ஆடி லூகா மொறோனி ஜூனியரைத் தோற்கடித்ததன் மூலம் Grandmaster என்ற பட்டத்தைப் பெற்றார். இதன் மூலம் இப்பட்டத்தைப் பெறும் உலகின் இரண்டாவது அதி இளைய ஆட்டக்காரர் என்ற சாதனையைத் தட்டிக்கொண்டார். இதே வருடத்தில் அவரது மூத்த சகோதரி வைசாலியும் பெண்களுக்கான Grandmaster பட்டத்தைப் பெற்றிருந்தார்.

இவ்விரண்டு பேரின் சாதனைகளுக்குப் பின்னால் இவர்களது பெற்றோர்கள் இருக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு பயிற்சிக்காகப் போவதற்குப் பணம் இல்லாதபோதும் பெற்றோர்கள் அவர்கள் மீது எந்தவித அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை. அதே போன்று பிரக்ஞானந்தாவின் முதல் பயிற்சியாளரும் இந்த வெற்றிகளுக்கான பெருமையைப் பெறவேண்டியவர் எனப் புகழாரம் சூட்டப்படுகிறது. (Picture Credit: The Tamil Minute)