உலகைத் தாக்கும் எலெட்றோனிக் Chips பற்றாக்குறை- காரணம் என்ன?
சிவதாசன்
நேற்று ப்றிண்டர் ஒன்று வாங்கலாமென்று Staples இற்குப் போனேன். ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல பணியாளர்களும் வெகு குறைவு. இன்றோ நாளையோ கடை பூட்டப்படுவதற்கான தயாரிப்போவென யோசித்துக் கொண்டேன். எனக்குப் பிடித்த பிராண்ட் தட்டில் இருந்தது. Best Buy ஸ்டோரை விட $30 குறிவாகவும் இருந்தது. தட்டு நிறைய பலவகையான பிறிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுமார் 20 நிமிட காத்திருப்பின் பின்னர் முன்னால் போய் உரத்த குரலில் கேட்டதன் பின்னர் ஒரு இளம் பெண் – சிறுமியென்றும் சொல்லலாம் – வந்தார். நான் காட்டிய பிறிண்டர் out of stock என்றார். அடுத்ததைக் காட்டி அதில் ஒன்று எடுக்கலாமா என்றால் அதுவும் out of stock என்றார். இத் தட்டில் இருப்பதெல்லாம் demo என்றார். பின்ன என்ன ——ருக்கு அடுக்கி வைத்திருக்கிறாய், out of stock , demo only என்று எழுதி ஒட்டி விடவேண்டியது தானே என உரக்கத் தொண்டை கிழியத் கத்திவிட்டு வெளியே வந்தேன். பாவம் பிள்ளை. அடுத்த தடவை சென்றால் – கடை பூட்டாம்ல் இருந்தால் – மன்னிப்புக் கேட்க வேண்டும்.
அப்ப்டியே Best Buy இல் சென்றால் அங்கு மின் மினி அலங்காரங்களுடன் தட்டுகளில் ஏகப்பட்ட பிறிண்டர்கள், கம்பியூட்டர்கள். அங்கும் இதே நிலைமைதான். Costco இணையத் தளத்தில் தேடினால் எல்லாம் sold out.

காரணம் என்ன?
இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதிய வாகனம் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் சொன்னார் அடுத்த ஓரிரு வருடங்களில் ஒருவரும் புதுக் கார் வாங்க வேண்டாம். பழைய கார்களை வைத்திருப்பவர்கள் விற்றுவிடாதீர்கள் என்றார். காரணம் எலெக்ட்றோனிக்ஸ் சிப்ஸ் பற்றாக்குரை காரணமாக பல புதிய வாகனங்களில் சில தானியக்க அம்சங்களை வாகனத் தயாரிப்பாளர் நீக்கி விடத் தீர்மானித்துள்ளார்கள் என்றார்.
Electronic Chips பற்றாக்குறை எல்லாத் தொழில்நுட்பத் துறைகளையும் பாதித்திருக்கிறது. குறிப்பாக வாகனத் தயாரிப்பு. Ford, GM தயாரிப்பாளர்கள் இந்த ஆண்டு $2 பில்லியன் நட்டத்தை எதிர்கொள்கின்றன. அவர்களது வாகனத் தயாரிப்பு 20% வீழ்ச்சியடைந்திருக்கிறது. Toyota, Tesla போன்ற நிறுவனங்கள் தமது சிப்ஸ்களைத் தாமே தயாரிப்பதால் ஒரளவுக்குத் தாக்குப்பிடிக்க முயல்கின்றன என்றாலும் அவர்களும் இதர chips தயாரிப்பாளர்களில் தங்கியிருக்க வேண்டியவர்களாகிறார்கள். Consumer electronics எனப்படும் அத்தியாவசியமற்ற சாதனங்கள் பின்வரிசைக்குப் போய்விட்டன. எனவே Staples போன்ற கடைகளில் பணியாளர்கள் ஏச்சு வாங்க வேண்டிய நிலை.
ஏனிந்த Chips பற்றாக்குறை?
யாரைக் கேட்டாலும், குற்றத்தை கொறோணேஸ்வரியில் போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். Chips விடயத்தில் கொறோணாவுக்கு ஓரளவு பங்கிருக்கிறது என்றாலும் பெரும் பங்கு, வழமை போல் அரசியல்வாதிகளைத் தான் சேரும். கொரோணா விடயத்தில், தடூப்பூசி மருந்துகளைத் தாங்கிவரும் போத்தல்களும், ஊசிகளும் கண்ணாடிகளால் செய்யப்படுகின்றன. இதற்குத் தேவையானது சிலிக்கோன் எனப்படும் மணலில் இருந்து பெறப்படும் மூலப்பொருள். Chips எனப்படும் தொழில்நுட்ப இயக்கங்களை நடத்தும் integrated circuits (IC) செய்யப்படுவதும் சிலிக்கனினால் தான். எனவே 2019 இற்குப் பின்னர் சிலிக்கனின் தேவை திடீரென அதிகரித்தமைக்கு கொரோனேஸ்வரியும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இன்னும் சில வருடங்களில் சீனாவின் அம்பாந்தோட்டைத் தொழிற்சாலைகளில், சிங்கராஜா வன மணலில் செய்த chips உங்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்தால் நீங்களும் அந்த ‘மண் வாசனையை’ அனுபவிக்கலாம்.
அதே வேளை அமெரிக்க – சீன முறுகலை ஆரம்பித்து வைத்த ட்றம்ப் 1, ட்றம்ப் 2 (பைடன்) ஆகியோர் மீதுதான் பெரும்பழி போக வேண்டும். கடந்த சில தசாப்தங்களாக அமெரிக்க பெரும் முதலாளிகள் தமது இலாபத்தை அதிகரிப்பதற்காக சீனாவிற்குத் தமது தயாரிப்புத் தளங்களை மாற்றிக்கொண்டனர். அதே போல அமெரிக்கச் சந்தைகளில் டொலர் கடைகள் பல்கிப் பெருகியமைக்கும் அமெரிக்க பொருளாதாரத்தில் பணவீக்கம் வெகுவாகக் குறைந்தமைக்கும் மலிவான் சீனத் தயாரிப்புகளே காரணம். அமெரிக்காவின் 95% அண்டிபயோட்டிக் மருந்துக்கான மூலப்பொருள் சீனாவிலிருந்துதான் வரவேண்டியிருக்கிறது. இராணுவ தளபாடத் தயாரிப்பை மட்டும் அமெரிக்கா விட்டுக்கொடுக்கவில்லை.
இந்நிலையில்,சிறுவயது முதல் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் ஊறி வளர்ந்த ஜின்பிங் சீனாவுக்கு அதிபராக வந்ததும், உலகின் இரு துருவ ஒழுங்கு மீண்டும் சமநிலைக்கு வந்தது. தென்சீனக் கடலில் ஒரு காலத்தில் நாட்டண்மை காட்டிய நீர்மூழ்கிக் கப்பல்களை விரட்டியடித்தது மக்கள் சீனக் குடியரசு. இன்று, அக்டோபர் 8, 2021) தென் சீனக் கடலில்,அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ‘இனம் தெரியாத் பொருளில் மோதியதால் சுமார் 15 படையினர் காயமடைந்துள்ளனர். நீண்டகாலமாக அமெரிக்காவின் அடைக்கலத்துடன் கொடிகட்டிப் பறந்த தாய்வானைத் திருப்பிச் சீனாவுக்குள் கொண்டுவர ஜின்பிங்க் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். ஹொங்க் கொங் ஆர்ப்பாட்டங்களை அடக்கி அதித் தனது சட்டத்துக்குள் உட்பட்ட பிரதேசமாக்கிக் கொண்டார். தாய்வானைத் தவிர்ந்த மற்ற எல்லா விடயங்களிலும் தோல்வியைத் தழுவிய அமெரிக்கா, சீனாவுக்குப் பாடம் கற்பிக்க வழமைபோலத் தனது வச்சிராயுதமான மனித உரிமையைக் கையிலெடுத்தது. ஜின்ஜியாங்க் பிரதேசத்தில் வாழும் உயிகுர் முஸ்லிம்கள் மீது சீன அரசு ஒடுக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது என சீனா மீது பலவிதமான பொருளாதாரத் தடைகளைப் போட்டது.
அட அதுக்கும் Chips பற்றாக்குறைக்கும் சம்பந்தமென்ன, சும்மா வகுப்பெடுக்காமல் விசயத்துக்கு வாய்யா என்று நீங்கள் சினப்படுவது தெரிகிறது. சரி வருகிறேன்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்ட இந்த முறுகல் பல துறைகளையும் பாதித்து வருகிறது. ஒரு காலத்தில் பெரும்பாலான Chips தயாரிக்கும் நிறுவனங்கள் யாப்பானிடம் இருந்தனவெனினும் அவை படிப்படியாக தாய்வானுக்கும், சீனாவுக்கும் தமது தளங்களை நகர்த்திக்கொண்டன. ஜின்பிங்க் அதிபராகையதிலிருந்து சீனா உலகத்தின் தொழிற்சாலையாக மாறிவிட்டது. அமெரிக்கா தெரிந்தோ தெரியாமலோ தனது தொழில்நுட்பத்தை சீனா பெறுவதற்கும், திருடுவதற்கும் அனுமதியளித்துவிட்டது. இதன் உச்சமே சீனாவின் flagship நிறுவனமான Huwavei. அதன் 5G வலையமைப்பு உலகைக் கைப்பற்றுமானால் அது உலகையே கைப்பற்றியதுக்குச் சரியானது. Surveillance, Industrial espionage எனப்படும் புலனாய்வுத் தகவல் சேகரிக்கும் விடயங்கள், முக அடையாளங்களைக் கொண்டு மனித நடமாட்டங்களைக் கண்காணித்தல் போன்ற விடயங்களில் விரைவான தல்கவற் பரிமாற்றத்துக்கு 5G வலையமைப்பு அவசியம். இவ்விடயத்தில் சீனா அசுர பாய்ச்சலில் சென்றுகொண்டிருகிறது. ஆனால் இந்த 5G தொழில்நுட்பத்தின் ரிஷி மூலம் அமெரிக்காவிடமிருக்கிறது. இவ்விடயத்தில் சீனாவின் முன்னேற்றத்தைத் தடுக்க அமெரிக்கா பகீரத முயற்சிகளை எடுக்கிறது. Chips தயாரிப்புத் துறையும் இதில் அடங்கும்.
இப்படியான முறுகல் நிலையில் சீன நிறுவனங்கள் பலவகையான chips களைப் பதுக்க ஆரம்பித்துவிட்டன. தயாரிப்பு நிறுவனங்களும் தமது உற்பத்திகளைக் குறைத்துக்கொண்டுவிட்டன. இதில் பாதிக்கப்பட்டது அதிகம் வாகனத் துறை. சீனாவின் வாகனத் தேவைகளுக்கு, குறிப்பாக மின் வாகனத் துறை, முதலிடம் கொடுக்கப்படுகிறது. கொரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹண்டே, இவ் விடயத்தை முற்கூட்டியே அறிந்து போதுமான chips களைப் பதுக்கிவிட்டது. இதில் மோசமாகப் பாதிக்கப்பட்டது Ford, GM போன்றவை தான். Nisan, Toyota, Honda, Ford ஆகிய நிறுவனங்கள் ஜனவரி 2021 இலேயே தமது உற்பத்தியை நிறுத்திக் கொண்டுவிட்டன. நிலைமை அந்தளவுக்கு மோசமாக இருக்கிறது.
Consumer electronics சந்தையில் தரமான பொருட்களை உற்பத்தி செய்யும் யப்பான் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சீனத் தயாரிப்புகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகவில்லையெனினும் சீனா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை மற்றும் பயணத் தடைகள் சீனாவின் பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளன.
எனவே நண்பர் கூறியதுபோல, பழைய வாகனங்களை விற்றுப் புதியனவற்றை வாங்க உத்தேசிப்பவர்கள் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். புதிய வாகனங்களை வாங்குபவர்கள் அவற்றில் பல நவீன வசதிகள் இல்லாமல் இருக்கின்றன என்று குறைபட்டுக்கொள்வதைக் கேட்டால் அதை நம்புங்கள். நமது பல ஆடம்பர வசதிகளை இதுவரை இயக்கி வருவது இந்த chips தான்.