உலகைச் செயலிழக்கச் செய்யப் போகும் சூரியப் புயல் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை


சிவதாசன்

கொறோணா காட்டிய பாதையில் வாழப் பழக்கப்பட்டுப்போன உலகமகாவாசிகளுக்கு இன்னுமொரு சோதனை காத்திருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதிலிருந்து முகக் கவசங்களாலோ அல்லது தடுப்பூசிகளாலோ எவரையும் காப்பாற்ற முடியாது என்பது வெந்த புண்ணில் வேல்.

சூரியனிலிருந்து வீசப்படும் காந்தத் துகள்கள் பூமியில் இணையத்தின் செயற்பாட்டை பல மாதங்களுக்கு முடக்கி வைக்கும் சாத்தியமுண்டு எனப் புதிய ஆராய்ச்சி ஒன்று எச்சரிக்கிறது.

சூரியன் பூமியை நோக்கி தொடர்ந்து வீசிக்கொண்டிருக்கும் காந்தத் துகள்களை விஞ்ஞானிகள் ‘சூரியக் காற்று’ (solar wind) என அழைக்கிறார்கள். பெரும்பாலான வேளைகளில் எமது கிரகத்தின் காந்தக் கவசம் (magnetic shield) இந்த காந்தக் காற்று உருவாக்கும் மின்காந்த அலையிலிருந்து பூமி வாசிகளைக் காப்பாற்றிவிடுகிறது. அதாவது இக் காந்தத்துகள்களை எமது கிரகத்தின் காந்தத் துருவங்கள் கவர்ந்துவிடுகின்றன; அதநால் பூமி தப்பிவிடுகிறது. இச்செயற்பாட்டின விளைவாக ஏற்படும் வர்ண ஜாலங்களே கனடாவில் நாம் காணும் ‘வடக்கு வெளிச்சம்’ (northern Lights).

ஆனால் சில வேளைகளில், நூற்றாண்டுக்கு ஒரு தடவையாவது, இச் சூரியக் காற்று மோசமான சூரியப் புயலாக (solar storm) மாறிவிடுகிறது. இப்படியான புயல், மிக மோசமான வடிவத்தை எடுக்குமானால் இணையத்தில் தங்கியிருக்கும் எமது நவீன வாழ்வுமுறை பாரிய முடக்கத்துக்குள்ளாக நேரிடுமென சமீபத்தில் நடைபெற்ற ‘சிக்கொம் 2021’ (SIGCOMM 2021) மாநாட்டில் கலந்துகொண்ட விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.

நவீன உலகின் பெரும்பாலான தொழிற்பாடுகளும் இணையத் தகவல் தொழில்நுட்பத்தில் தங்கியிருக்கிறது. இணையத் தொழிற்பாடு மின்காந்த அலைகளிலும், விண்ணில் அடுக்கி வைக்கப்படிருக்கும் செய்மதிகளின் தயவிலும் தங்கியிருக்கிறது. எப்படி மின்னல் தாக்கும்போது மின்சார விநியோகத்தில் தற்காலிக தடை ஏற்படுகிறதோ அதேபோல் பாரிய மின்காந்த அலைகளை உருவாக்கும் சூரியப் புயலின்போது இணையத்தில் தகவல் பரிமாற்றம் தடைப்பட வாய்ப்புண்டு. சில வேளைகளில் இத் தடை, மாதக் கணக்கில் நீடிக்கவும் வாய்ப்புண்டு என எச்சரிக்கிறார்கள் இவ் விஞ்ஞானிகள்.

எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடுவது என்றொரு பழமொழி மேற்குநாடுகளிலுண்டு. அதுபோல, தானியக்கம், ‘ஸ்மார்ட் டெக்னோலொஜி’ என்ற போர்வையில் நவீன உலகம் தனது இயக்கம் முழுவதையும் இணையத்தை மட்டுமே நம்பும் ஒன்றாக மாறியிருக்கும் நிலையில் அது ‘எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில்’ தான் போட்டுவைத்துள்ளது. ஒரு மோசமான சூரியப் புயலைத் தாங்கிக்கொள்வதற்கு அது தன்னைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கவில்லை என்கிறார், இது பற்றி ஆராய்ச்சியொன்றை மேற்கொண்ட, கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அப்டு ஜோதி.



ஒரு பாதகமான சூரியப் புயல் தாக்குவதற்கான சாத்தியம் 1.6% முதல் 12% வரை உள்ளது என்பது ஆறுதல் தரும் செய்தி. சமீபத்திய வரலாற்றில், இரண்டு தடவைகள் – 1859, 1921 – மோசமான சூரியப் புயல் பூமியைத் தாக்கியிருக்கிறது. 1859 இல் நடைபெற்ற, ‘கறிங்டன் இவென்ட்’ எனப் பெயரிடப்பட்ட சூரியப் புயலின்போது, பல தொலைத் தொடர்புத் தந்தி இணைப்புகள் தீப்பற்றி எரிந்தன எனவும் துருவங்களை அண்டிய பகுதிகளில் வர்ண ஒளி ஜாலங்கள் நிகழ்ந்தன எனவும் கூறப்படுகிறது. 1989 இல் நடைபெற்ற சிறிய அளவிலான சூரியப் புயல் கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மின்சார விநியோகத்தை 9 மணித்தியாலங்களுக்கு முடக்கிப் போட்டிருந்தது.

ஆனால் அப்போதெல்லாம் உலகம் இணையத்தில் அதிகம் தங்கியிருக்கவில்லை. இன்று நாம் வாழும் உலகம் வேறு. இணையத்தின் சொல்வழி கேட்காது எதுவும், எவரும் இயங்க முடியாது. ஓட்டிகளை மீறி, வாகனங்கள், ஜி.பி.எஸ் எனப்படும் எஜமானின் சொல்லின்படியே ஓடுகின்றன. விமானங்களை இயக்குவதும் அதுவேதான். இனிமேல் தானியக்க வாகனங்கள் தெருக்களில் நடமாடப் போகின்றன. மருத்துவமனைகளில் உடற்பரிசோதனைகள் முதல் அறுவைச்சிகிச்சைகள் வரை இணையம் காட்டிய வழியிலேயே நடக்கப்போகின்றன. இந்த நிலையில் சூரியப்புயலின் தலையீடு எப்படி இருக்கப் போகிறது?

தற்போதைய பெரும்பாலான தகவற்பரிமாற்றங்கள் நாரிழை ஒளி மூலம் (fibre optics) செய்யப்படுகிறது எனச் சிலர் ஆறுதல் கொள்ளலாம். அதாவது சூரியப் புயலால் பாதிக்கப்படுவது கம்பி வழியாகப் பரிமாறும் தகவல்களே என்பது அவர்கள் வாதம். ஆனால் நாரிழையினூடு ஒளியை அனுப்புவதற்கு மின்சாரம் தேவை. பொதுவழங்கலின் மூலம் (grid power) கிடைக்கும் மின்சாரம் தடைப்படுமானால் நாரிழைகளும் செயற்பாடற்றுப் போய்விடும். இதற்காகச் சில நிறுவனங்கள் பொது வழங்கலில் தங்கியிராது தமது சுய மின்வழங்கலுக்கு ( off grid) மாறிவருகின்றன. இருப்பினும் உலகம் இந்த உட்கட்டமைப்பு மாற்றத்துக்காக இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்பதே ஜோதி போன்ற விஞ்ஞானிகளின் ஆதங்கம்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் கடலினடியால் நாரிழை மூலம் தகவற்பரிமாற்றம் செய்ய ஆரம்பித்தபோது பரிமாற்றத்தில் அடிக்கடி தடைகள் ஏற்பட்டன. நீண்டகால ஆராய்ச்சியின் பின்னர் மர்மம் துலக்கப்பட்டது. அதாவது, நாரிழைகளினூடு தகவல் ஒளிக்கற்றைகளாகப் பரிமாற்றமாகிறது. இவ்வொளிச் சிதறல்களால் ஈர்க்கப்பட்ட சுறாக்கள் போன்ற மீனினம், இந்நாரிழைகளைக் கடித்துத் துண்டாடி விட்டன. இப்போது இந்நாரிழைகளுக்கு பாதுகாப்பு கவசம் வழங்கப்படுகிறது.



ஆனாலும் இந்நாரிழைத் தகவல் பரிமாற்றத்துக்கும் மின்சாரம் தேவை. ஒவ்வொரு 30 – 90 மைல்கள் இடைவெளிகளில், தூர்ந்துபோகும் தகவல் கற்றைகளுக்கு மீள்வலுக்கொடுப்பதற்காக repeaters எனப்படும் ‘புத்துணர்வாக்கிகள்’ பொருத்தப்படுகின்றன. இவற்றின் செயற்பாட்டுக்கு மின்சாரம் தேவை. இவை செயற்படாவிடின் நாரிழைகளால் பிரயோசனம் இல்லை. இதனால் கண்டங்களுக்கிடையேயான தகவற்போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டு மீண்டும் கப்பல்களில் கடிதம் அனுப்பும் காலத்துக்குப் போகவேண்டியும் ஏற்படலாம்.

இணையத் தொழில்நுட்பம் வாரங்களுக்கோ மாதங்களுக்கோ முடக்கப்படுமானால் பெரும்பாலானோருக்கு வேலைகள் இல்லாமல் போகலாம். மேற்குநாடுகள் பஞ்சத்தில் மூழ்கலாம். அமெரிக்காவில் மட்டும் இணையத் துண்டிப்பால் ஏற்படக்கூடிய ஒருநாள் இழப்பு 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறார் அப்டு ஜோதி. இணையத்தில் தங்கியிராது இன்னமும் மாட்டு வண்டிகளையும், வயற்காடுகளையும், காடுகரம்புகளையும், கடலையும் நம்பி வாழும் ‘அபிவிருத்தியை மறுக்கும்’ மக்கள் பிழைத்துக்கொள்வார்கள்.

“கல்கி அவதாரம் பூமியில் அவதரிக்கும் காலகட்டம் நெருங்கும்போது, நிலா அளவுக்குமதிகமாகப் பிரகாசமாக இருக்கும். எப்போதும் இருக்கும் வெண்மை நிறம் போல் அல்லாமல் நெருப்பு போல சிவந்த நிறத்தில் காணப்படும். சூரியன் அளவுக்கு அதிகமாக கதிர்களை வெளிவிடும். வால் நட்சத்திரம் போல் சூரியன் தோன்றும்” விஷ்ணு புராணம்

நம்பவேண்டிய கட்டயமில்லை. இப்படித்தான் கொறோணாவையும் ஆரம்பத்தில் நாம் நம்பவில்லை…..எல்லாம் ‘இணையம் காட்டிய வழியம்மா’ என்று பேசாமல் இருந்துவிடவும் முடியாது..