Spread the love

டிசம்பர் 10, 2019

எரிபொருள் எதுவும் பாவிக்காது முற்று முழுதாக மின்சாரத்தில் இயங்கும் வணிக விமானமொன்று கனடா, வான்கூவரில் இன்று பரீட்சார்த்த பறப்பு செய்யப்பட்டது.

The world’s first electric commercial during its maiden flight in Richmond, British Columbia
 உலகின் முதலாவது மின்சார விமானம் – றிச்மண்ட், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா – [படம் ஜொனாதன் ஹேவார்ட் / ஏ.பி.]

வான்கூவர் நிறுவனமான ‘ஹார்பர் எயர்’ (HarbourAir) மற்றும் அவுஸ்திரேலிய நிறுவனமான ‘மக்னிக்ஸ்’ (magniX) ஆகியன இணைந்து தயாரித்த இவ் விமானம் 15 நிமிடங்களுக்குத் தன் முதல் பரீட்சார்த்த பறப்பைச் செய்தது.

விஸ்லெர் பனிச் சறுக்கு விளையாட்டிற்குச் செல்பவர்கள் மற்றும் அருகிலுள்ள தீவுகளின் வாசிகள், கரையோர வாசிகள், என்று வருடமொன்றுக்கு 500,000 பயணிகளை ஹார்பர் எயர் ஏற்றி இறக்குகிறது.

“இது மின் பயணத்தின் ஒரு ஆரம்பம். இத் தொழில்நுட்பத்தின் மூலம் செலவைக் குறைக்கமுடியுமென்பதோடு வளி மாசுபடுதலையும் தவிர்க்க முடிகிறது” என மக்னிக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி கன்சார்ஸ்கி தெரிவித்தார்.

இவ் விமானத்துக்கு உந்துதலைக் கொடுக்கும் மோட்டரை மக்னிக்ஸ் பொறியியல் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

உலகின் கணிசமான பங்கு கரிவாயு வெளியேற்றத்துக்கு வணிக விமானப் பறப்புகள் காரணமாகவுள்ளன. மக்களின் பயணங்கள் அதிகரிக்குமளவுக்கு கரி வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் வளரவில்லை. விமானங்களின் எடை குறைப்பு, பயணப்பாதைக் குறைப்பு, உயிர் எரிபொருள் (bio fuel) போன்ற விடயங்களில் கவனம் செலுத்துமாறு வணிகப் பறப்பு நிறுவனங்களுக்கு சர்வதேச வான் பறப்பு அமைப்பு ஆலோசனைகளை வழங்கியிருந்தும் தொழில்நுட்பத்தினால் அவ்வளவு விரைவாக முன்னேற முடியவில்லை. இவ் விடயத்தில் போயிங் போன்ற நிறுவனங்களின் முயற்சி பாரிய உயிரழிவையும், பொருளாதார நட்டத்தையும் ஈட்டியிருக்கிறது.

இப் பரீட்சார்த்த பறப்புக்குப் பாவிக்கப்பட்ட விமானம் டி ஹவிலண்ட் பீவர் தயாரிப்பிலான 62 வருடப் பழைமையான 6 பயணிகள் செல்லக்கூடிய மிதப்பு விமானம். அதற்கு மக்னிக்ஸ் தயாரிப்பான 750 குதிரைவலுவுள்ள மோட்டாரைப் பொருத்தி மறுவடிவமைப்பைச் செய்திருந்தது ஹார்பர் எயர் நிறுவனம். பரீட்சார்த்தப் பறப்பை ஹார்பர் ஏயர் நிறுவனத்தின் நிறுவனரான கிறேக் மக்டூகல் மேற்கொண்டிருந்தார்.

“இதன் மூலம் எரிபொருள், மிகக் குறைந்த பராமரிப்பு என்று பல வழிகளிலும் பல மில்லியன்களை நாம் சேமிக்க முடியும். இது வெற்றியாக அமைந்ததனால் நாங்கள் மீதமுள்ள 40 விமானங்களையும் மின்சாரத்துக்கு மாற்றவுள்ளோம். ஆனால் அதற்கு நாங்கள் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும். இம் மின்சாரத் தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்பதைத் தொடர் பறப்பின் மூலம் நாங்கள் நிரூபிக்க வேண்டும். அப்படியானால் தான் வணிகப் பறபுக்கான அனுமதியை அரசு எங்களுக்கு வழங்கும்” என மக்டூகல் மேலும் தெரிவித்தார்.

மின்வலுவில் இயங்கும் சகல வாகனங்களினதும் உயிநாடியாக விளங்குவது அவற்றின் மின்கலங்கள் (பற்றறி). மீள் வலுவூட்டக்கூடிய (rechargeable) லிதியம்-அயன் மின்கலங்களே அநேகமான வாகனங்கள், கணனிகள், தொலைபேசிகள் என்று சகலதிலும் பாவிக்கப்படுகின்றன. அவை எவ்வளவு நேரத்துக்கு வலுவை வழங்க வல்லன என்பதைப் பொறுத்தே அவற்றின் வெற்றி நிச்சயமாகிறது. இந்த விமானத்தில் பாவிக்கப்படும் மின்கலம் 160 கி.மீ. தூரம் பறப்பை மேற்கொள்ள வல்லது எனக் கூறப்படுகிறது. ஹார்பர் எயர் தற்போது மேற்கொள்ளும் பயணங்களுக்கு இது போதும் என்கிறார் கன்சார்ஸ்கி.

Related:  வேதராஜன் பாலாஜி | சதுப்பு நிலப் பேணலுக்கான ஒரு தனி மனிதனின் பயணம்

ரெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனம் உட்படப் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக மினவலுவை நீணட நேரத்துக்கு வழங்க வல்ல மின்கலங்களை உற்பத்தி செய்வதில் ஆரய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே இவ் விடயத்தில் எதிர்காலம் பிரகாசமாகவிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

“ஒரு மணித்தியாலம் வாகனப் போக்குவரத்து நெரிசலில் நேரத்தைச் செலவிட விரும்புபவர்களுக்கு 15 நிமிடங்கள் பாதகமாக இருக்க முடியாது” என்கிறார் கன்சார்ஸ்கி.

Print Friendly, PDF & Email