உலகின் முதல் தர ரென்னிஸ் ஆட்டக்காரர் ஆஷ்லே பார்ட்டி விளையாட்டைத் துறப்பதாக திடீர் அறிவிப்பு!

உலகின் முதல் நிலையிலுள்ளவரும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான 25 வயதுள்ள பெண் ரென்னிஸ் ஆட்டக்காரர்ரான ஆஷ்லே பார்ட்டி தான் இனிமேல் ரென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளார். இவர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் அவுஸ்திரேலிய ஓப்பிண் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்றுச் சம்பியனாத் தெரிவாகியிருந்தார்.

செவ்வாயன்று (22) தனது இன்ஸ்டாகிராம் மூலம் பார்ட்டி தனது முடிவை அறிவித்திருக்கிறார்.

“இதுவே எனது விருப்பம் என்பதையும் இதுவே சரியான தருணம் என்பதையும் நான் உணர்ந்துவிட்டேன், அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி முன்னரும் ஒரு தடவை நான் அறிவித்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் இப்போது எனக்குள் ஒரு வித்தியாசமான உணர்வு தென்படுகிறது. ரென்னிஸ் ஆட்டம் எனக்கு எல்லாவற்றையுமே தந்திருக்கிறது. எனது கனவுகளை அது பூர்த்தி செய்திருக்கிறது. அதற்காக நான் என்றும் கடமைப்பட்டவளாவேன். ஆனாலும் அதிலிருந்து ஒதுங்கி வேறுவிதமான கனவுகளைத் தேடி ஓடவேண்டிய தருணம் வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று தடவைகள் கிராண்ட் ஸ்லாம் சம்பியனான பார்ட்டி இரண்டு மாதங்களுக்கு முன்னர் டானியல் கொலின்ஸைத் தோற்கடித்ததன் மூலம் அவுஸ்திரேலிய ஓப்பிண் கிண்ணத்தைத் தட்டிச் சென்றிருந்தார். அவுஸ்திரேலிய ஓப்பிண் கிண்ணத்தை ஒரு அவுஸ்திரேலியப் பெண் வீராங்கனை வென்றது 15 வருடங்களுக்குப் பிறகு நடந்திருக்கிறது. 2019 இல் பிரன்ச் ஓப்பிண், கடந்த வருடம் விம்பிள்டன் எனப் பெண்களுக்கான சம்பியன் கிரீடத்தை வென்றதன் மூலம் ஆஷ் பார்ட்டி ரென்னிஸ் உலகில் உச்சத்தில் இருக்கும் போது இந்த திடீர் அறிவிப்பைச் செய்திருக்கிறார்.

25 வயதில் அவர் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் மிகவும் தாழ்ந்து போயிருப்பதாகவும் தொடர்ந்து விளையாட வேண்டுமென்ற விருப்பம் என்னிடமிருந்து முற்றாகப் போய்விட்டது எனவும் தான் வாழ்க்கையில் எதிர்பார்த்து தேடி ஓடிய அத்தனை கனவுகளையும் ரென்னிஸ் எனக்குத் தந்துவிட்டது எனவும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

விம்பிள்டன் வெற்றியை ஈட்டியதுடன் அவர் இந்த தனது முடிவை எட்டியிருந்ததாகவும் அதே வேளை அவுஸ்திரேலிய ஓப்பிணை வெல்வதன் மூலம் அதை ஒரு உச்சமானதும், இறுதியானதுமான சாதனை நிகழ்வாக ஆக்க முடியுமெனத் தீர்மானித்து தன்னிடம் எஞ்சியிருந்த அத்தனை திராணியையும் கொடுத்திருந்ததாகவும் இப்போது தன்னிடம் ஆடவேண்டுமென்ற விருப்போ அதற்கான சக்தியோ இல்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் மிகவும் குழம்பிய மனநிலையில் இருக்கிறார் எனவும் தனது முடிவை விரைவில் மாற்றிக்கொள்வார் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவருக்கு நெருங்கியவர்களை மேற்கோள்காட்டி விளையாட்டு விவரணையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.