உலகின் இரண்டாவது அதிபணக்காரர் இந்தியாவின் கெளதம் அதானி
கெளதம் அதானியின் குடும்ப சொத்து $155.4 பில்லியன் டாலர்களை எட்டியதால் உலகின் இரண்டாவது அதி பணக்காரராக அதானி உயர்ந்திருக்கிறார். $155.2 பில்லியன் செல்வத்துடன் பேர்ணார்ட் ஆர்னோல்ட் குடும்பம் இதுவரை இரண்டாவது நிலையில் இருந்து வந்தது. $273.5 பில்லியன் சொத்துக்களுடன் Space X மற்றும் Tesla அதிபர் எலான் மஸ்க் உலகின் பணக்காரர் பட்டியலில் முதலாம் இடத்தில் இருக்கிறார்.
உலகின் பணக்காரர் பற்றிய தகவல்களைத் திரட்டி வெளியிடும் சஞ்சிகையான Forbes இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது.
பணக்காரர் பட்டியலில் நான்காவது இடத்தில் அமசோன் தலைவர் ஜெஃப் பேசோஸ் ($149.7 பில்லியன்) அடுத்ததாக மைக்கிரோசொஃப்ட் தலைவர் பில் கேட்ஸ் ($105.3 பில்லியன்) ஆகியோர் இருக்கிறார்கள். இன்னுமொரு பிரபல பணக்காரரான Warren Buffet $96.5 பில்லியகளுடன் 7 ஆவது இடத்திலும் அவருக்கு அடுத்ததாக Relaiance Industries தலைவர் முகேஷ் அம்பானி $92.3 பில்லியன்களுடன் 8 ஆவது இடத்திலும் இருக்கிறார்கள்.
60 வயதுடைய அதானி இதுவரை துறைமுக அபிவிருத்தி சம்பந்தமான துறையில் தனது செல்வத்தைச் சேகரித்து வந்திருந்தாலும் தற்போது அவர் வலுவுற்பத்தி (Energy Projects) , சீமந்து தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம், ஊடகம் எனப் பலதுறைகளிலும் தனது வியாபாரத்தை விஸ்தரித்து வருகிறார். இந்தியாவின் அதி பெரிய தனியார் துறைமுக, விமான நிலையம், வாயு வழங்கல், நிலக்கரிச் சுரங்கம் போன்ற முகாமைத்துவங்கள் தற்போது அதானி குழுமத்திடம் இருக்கின்றன. தற்போது உலகளாவிய ரீதியில் உணவு மற்றும் பரிமாற்ற சேவைகளை விஸ்தரிக்கும் வேலைத்திட்டங்களில் அதானி குழுமம் ஈடுபட்டு வருகின்றது.