உலகின் அதி தடித்த மலைப் பனிமூடி உருகிறது - காலநிலை மாற்றம் காரணம் -

உலகின் அதி தடித்த மலைப் பனிமூடி உருகிறது – காலநிலை மாற்றம் காரணம்

Satellite images of Taku glacier in Alaska.
2014 இல் நாசாவினால் எடுக்கப்பட்ட படம்: அலாஸ்காவிலுள்ள டாகு மலைப் பனி மூடி

காலநிலை மாற்றத்தைத் தாங்கி நீண்டு வாழும் என எதிர்பார்க்கப்பட்ட அலாஸ்காவின் ஜூனூ பனி வயல் உலகின் அழகைப் பெருமைபடுத்திய ஒன்று. உலகிலேயே அதிக தடித்த பனிப் பாளமாக இருந்த பனிப்பாறை உருகத் தொடங்கியிருகிறது என்பதை விஞ்ஞானிகள் இப்போது ஒப்புக் கொண்டுள்ளார்கள். நாசாவின் செய்கோள் படம் இதை உறுதி செய்கிறது. காரணம் நூற்றுக்கு நூறு வீதம் காலநிலை மாற்றமே தான்.

இப் பிரதேசத்திலுள்ள 20 முக்கிய பனி மூடிகளில் ஒன்றானதும், உலகிலேயே அதிகம் தடிப்புடையதுமான (உச்சியிலிருந்து நிலம் வரை 4860 அடிகள்) டாக்கு, கடந்த 50 ஆண்டுகளாக வளர்ந்து கொண்டு வந்தது. ஒப்பீட்டளவில் அயலிலுள்ள பனி மூடிகள் சிறுத்துக்கொண்டு வந்தன. தற்போது நிலைமை மாறிவிட்டது.

நாசாவினால் புதிதாக எடுக்கப்பட்ட இரண்டு படங்களின் மூலம் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2014 இலும் ஆகஸ்ட் 2018 இலும் எடுக்கப்பட்ட இப் படங்களில், ஒரு காலத்தில் பனிப்பாறை நதியின் முகத்துவாரத்தில் தொட்டுக்கொண்டிருந்ததும் தற்போது நதிக்கும் பனிப் பாறைக்கும் நீண்ட இடைவெளி இருப்பதும், பனி உருகி விட்டது என்பதை நிரூபிக்கிறது. விஞ்ஞானிகள் 1946 இலிருந்து இப் பனி மூடிகளை அவதானித்து வருகின்றார்கள்.

கடந்த 3 தசாப்தங்களாக பனிப் பாறைகளை ஆராய்ச்சி செய்துவரும் மவூறி பெல்ற்றோ என்பவரின் கருத்துப்படி இந்த மாற்றம் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது என்கிறார். குறைந்தது இந்த நூற்றாண்டு முடியும் மட்டுமாவது இப் பனி மூடி தாக்குப்பிடிக்கும் எனத் தான் எதிர்பார்த்ததாகவும் அது 80 வருடங்களுக்கு முன்னாடியே நடக்கவாரம்பித்துவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

1946 இற்கும் 1988 இற்குமிடையில் டாக்கு பனி மூடி, வருடத்துக்கு ஒரு அடி என்ற வீதத்தில், உருவத்தில் பருத்துக்கொண்டு வந்தது. அதன் பிறகு வளர்ச்சி மெதுவாகக் குறைந்து போய்த் தற்போது தேய்ந்துகொண்டு வர ஆரம்பித்துவிட்டது. 2013 முதல் 2018 வரையில் வளர்ச்சி முற்றாக நின்றுவிட்டது. 2018 இல் அது உருகவாரம்பித்ததால் அளவில் சிறுக்கத் தொடங்கிவிட்டது. அந்த வருடத்தில் பனிப்பாறை அதிகம் உருகிவிட்டது. அந்த வருடம் ஜூலை மாதம் வரலாற்றில் அதிக வெப்பநிலை இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது என பெல்ற்றோ தெரிவித்திருக்கிறார்.

“இந்த வீதத்தில் பனி உருகுவது என்பது சாதாரண பருவநிலை மாற்றங்களுக்கு அப்பால் கால நிலை கடும் குழப்பத்துக்குள்ளாகிவருகிறது என்பதையே காட்டுகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Please follow and like us:
error0