ArticlesColumnsசிவதாசன்

உரை வெளி

அசை சிவதாசன்

‘Everyone thinks of changing the world but no one thinks of changing himself’ என்று லியோ ரோல்ஸ்ரோய் கூறியதாக எவரோ எழுதியதை வாசித்த ஞாபகம். மேற்கோள்களை எடுத்தியம்புவதன் மூலம் உலகப் பெரியவர்களை நாமும் வாசித்திருக்கிறோம் என்ற மாயையை ஏற்படுத்த எனக்கு இஷ்டமில்லை. முகநூலில் இலவசமாக எல்லாமே கிடைக்கிறது – ‘மொட்டை’க் கடிதங்கள் அடங்கலாக.

தனிப்பட்டவர்களைத் திருத்துவதற்காக லியோ (முதற் பெயரை மட்டும் பாவிப்பதால் அவர் எனது posthumous நண்பர் என்று நீங்கள் கருதினால் அதற்கு நன்றி) மேற்படி வாசகத்தைச் சொன்னார் அல்லது எழுதினார் என்று நான் நம்பவில்லை. அநேகமாக தன் காலத்து சக இலக்கியவாதியை அல்லது அரசியல்வாதியை நாசூக்காகக் கடிப்பதற்காகவே அவர் அதை எழுதியோ சொல்லியோ இருக்கலாம். அதே காரணத்துக்காகவே நானும் இங்கு அந்த மேற்கோளைக் குறிப்பிட்டேன் என்று நீங்கள் கருதினால் மகிழ்ந்து கொள்ளுங்கள்.

‘உன்னைத் திருத்துவது என்னுடைய வேலை இல்லை’ என்று ஜெயகாந்தன் அடிக்கடி பேசுவதாக நண்பர் மூர்த்தி சொல்வார். மூர்த்தி ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர் என்ற வகையில் அந்த மேற்கோளின் மூலம் உண்மையானது என நம்பலாம்.

லியோ ரோல்ரோயோ அல்லது ஜெயகாந்தனோ யார் யாரை மனதில் வைத்துக்கொண்டு தாம் சொன்னதைச் சொன்னார்கள்? குழப்பமாகவிருக்கிறது. ஏனென்றால் உலகத்தைத் திருத்தவென்று புறப்பட்டவர்கள் தான் அளவுக்கு மீறிப் புழுத்துப்போய் கிடக்கிறார்கள்.
யார் யாரையோ மனதில் வைத்துக் கொண்டு இதை நான் எழுதுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். உங்கள் ஊகம் சரி. தொப்பி உங்களுக்கு அளவில்லையானால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.

*   *   *   *   *

சென்ற வாரம் அதிபர் கனகசபாபதியின் நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். எனது இடப்பக்கத்தில் இருந்த அமெரிக்காவில் வாழும் நண்பர் ஒருவர் – நூல் வெளியீட்டுக்கென்று வந்த அதிபரின் மாணவர் – கேட்டார் “தாயகம் எண்ட பேப்பர் திரும்ப வருகுதாமே?” என்று. நான் சிரிக்க வேண்டி வந்துவிட்டது காரணம் எனது வலது பக்கத்தில் ‘தாயகம்’ ஆசிரியர் ஜோர்ஜ் இருந்தார். இருவருக்கும் ஒருவரை ஒருவர் முன்னறிமுகமில்லை. இருவரையும் நான் அறிமுகப்படுத்தி விட்டேன். அமெரிக்க நண்பர் இதுபற்றி பின்னர் எதுவும் பேசவில்லை.

அமெரிக்க நண்பருக்கு கனடாவில் என்ன பத்திரிகைகள் வருகின்றன என்பதை நான் சொல்லித்தான் தெரிவதுண்டு. அவர் ஒரு இலக்கியவாதியுமல்ல. ஒரு மருத்துவர். ஆனால் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வந்து நின்று போன ‘தாயகம்’ அவர் செவிகளுக்கு (கண்களுக்கு என்று சொல்லவில்லை) எட்டியிருந்திருக்கிறது. காரணம்? அவர் ஒரு தமிழ்த் தேசீய ஆதரவாளர் (trying to be politically correct!). நீரும் அது தானே என்கிறீர்களா? அதுதான் சொன்னேனே ‘என்னைத் திருத்துவது என் வேலை மட்டுமே’ என்று! ஓஹோ அப்படியாக நான் எதையும் சொல்லவேயில்லையா? இனிமேல்தான்…

சரி அது ‘தாயகம்’ அல்ல ‘பூபாளம்’. அது விழாவுக்கு முதலிரு நாட்களிலேயே வந்திருந்தது. அதை ஒரு ‘Apple launch event’ ஆகக்கூட ஆசிரியர் செய்யவில்லை ஆனால் பேசு பொருளாக ஆகியிருக்கிறது. காரணம் அது நின்று கொண்டிருக்கும் தளம் மாற்றியல்புடையது. அதில் எழுதுபவர்கள் பலர் தமிழ்த் தேசீயத்தை விமர்சிப்பவர்கள் என்ற கருத்து இயல்பாகவே உண்டு. அது ஒரு முழுப் பூசணிக்காய். மறுப்பதற்கில்லை. பல வருடங்கள் மௌனிக்கப்பட்டிருந்த கருத்துக்கள் இனி வீச்சோடு வரலாம். ஆனால் அக் கருத்துக்களும் மாற்றம் பெற்றிருக்கின்றன என்று தெரிகிறது.

விழாவில் பேசிய அருட் தந்தை சந்திரகாந்தன் அவர்கள் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். ‘விடுதலைப் போராட்டம் வீரியம் பெற்றிருந்தபோது மாற்றுக் கருத்துக்களிடையே உரையாடல்கள் நடைபெறவில்லை, அதற்கான வெளி வழங்கப்படவில்லை’ என்ற சாரப்படி அவர் பேச்சிருந்தது. ‘பூபாளம்’ அப்படியொரு வெளியில் தன் உரையாடல்களை முன்வைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.எண்ணித் துணிக கருமம் என்பார்கள். எண்ணாமல் துணிவதே என் வாழ்க்கையாகி விட்டது. நான் பொதுவாக ஒரு intuition driven person.
எனது கருத்துக்கள் அரசியல் சார்பு நிலை ஆகியவற்றுக்கு ஒவ்வாத களத்தில் எனது நடமாட்டம் தரக்கூடிய விளைவுகள் சற்று எச்சரிக்கை சமிக்ஞைகளைத் தரவில்லை என்று சொலல முடியாது. இருப்பினும் இப்படியான ஒரு களம் தான் என் எழுத்தை உரமிட்டு வளர்த்தது ஒரு காலத்தில். ‘தாயகம்’ என்று அதற்குப் பெயர். அதன் ஆசிரியர் ஜோர்ஜ் குருஷேவ் ‘பூபாளத்தின்’ ஆசிரியருங்கூட. ‘உங்களுக்கென்று இடமிருக்கிறது. வற்புறுத்தவில்லை விரும்பினால் எழுதுங்கள்’ என்றார்.

நீண்ட காலமாக எழுதாமல் தரிசாகி விட்டது இந்த நிலம். நெல் மட்டுமல்ல புல்லும் வளரவில்லை என்பதால் ஓரளவுக்கு மகிழ்ச்சி.

நமது நாட்டில் போர் சில முக்கிய சமூக கலாச்சார மாற்றங்களைச் செய்து தந்திருக்கிறது. ஒன்று பல நுற்றாண்டு காலமாகக் காலனி ஆதிக்கத்தின் தாக்கத்தில் வளைந்து போயிருந்த முதுகெலும்புகளை நிமித்தித் தந்திருக்கிறது. மற்றது உரல் உலக்கைகளோடு நின்று போயிருந்த எங்கள் தொழில் நுட்பத்தை நீர்மூழ்கிக் கப்பல்கள் செய்யுமளவிற்கு வளர்த்துவிட்டிருக்கிறது. இவை ஒரு வகையில் எமக்குக் கிடைத்த வரங்கள் தாம். ஏனெனில் வரங்கள் கிடைத்தவுடன் நாமும் கடவுள்களாக மாறிவிட்டோம். அதன் பலாபலன்கள் இன்று முதுகெலும்புகள் நொருக்கப்பட்டிருக்கின்றன. உயிர் தப்புவதற்குக்கூட ஒழுங்கான நீர்மேற் கப்பல்கள் இல்லாது கொத்துக் கொத்தாக சமுத்திரப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

போர் கொடுமையானது. தெரிந்தும் ஆதரித்தோம், நியாயப்படுத்தினோம். இனத்தின் விடுதலைக்காய் வரம்புகள் தகர்க்கப்பட்டன. மௌனமாயிருந்தோம். விளைவுகள் புதியனவாகவோ ஆச்சரியம் தருவனவாகவோ இருக்க முடியாது. இப்படிச் செய்திருக்கலாம் அப்படிச் செய்திருக்கலாம் என்று மொழிகின்ற திருவாய்கள் பலவுண்டு. ஆனாலும் life must go on, period.

எமது தற்போதய உடனடித் தேவை எம்மிடையேயான உரையாடல். எமது விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கு முழுமுதற் காரணம் சந்தேகத்தினால் நிரப்பப்பட்ட இடைவெளியும் அதன் விளைபொருளாகிய காட்டிக் கொடுப்பும் தான். இவ்விடைவெளியைப் பரஸ்பர புரிந்துணர்வினால் நிரப்பிய பின்னரே நாம் அடுத்த நிலைபற்றிச் சிந்திக்க வேண்டும். அதை இந்தப் பத்திரிகை செய்ய வேணடுமென்று எதிர் பார்க்கிறேன்.

ஓஹோ ..இவரும் வெளிக்கிட்டிட்டார் உலகத்தைத் திருத்த என்று நீங்கள் நினைக்கலாம். அதுதான் சொன்னேனே ‘என்னைத் திருத்துவது மட்டும்தான் என் வேலை’ என்று! மாற்றுக் களங்களினிடையேயான உரையாடல் வெளியில் சஞ்சரிப்பவர்களில் நானும் ஒருவன். கருத்துக்கள் இருதிசைப் பரிமாற்றம் அடையுமாயின் அது எல்லோருக்குமே வெற்றி.
லியோ ரோல்ஸ்ரோய் சொன்னதுபோல நான் என்னை மாற்றிக்கொண்டிருக்கிறேன்.

அக்டோபர் 02, 2012