Columns

உரத்து யோசித்தல்: ரணிலா? அனுரகுமாரவா?

தலைப்பு தலைகளைச் சுற்றுவதற்கு முதல் ஒரு விளக்கம். “இதென்னடா உரத்து யோசித்தல் என்று புது மொழிப் பிரயோகம்?” என்று குழம்பலாம். அது வேறொன்றுமல்ல ‘thinking out lout’ என்பதற்கு என் மூளை சொன்ன instant translation. மனத்தில் தோன்றும் சில யோசனைகளை (ideas) நணபர்கள், சகபாடிகள் மத்தியில் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு முறையென இதைக் கொள்ளலாம். அந்த வகையில் இலங்கையில் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாகக் களமிறங்கவிருப்பவர்கள் ரணிலும், அனுரகுமார திசநாயக்காவும், ஏறத்தாள தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்ற அனுமானத்தோடு தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற யோசனையைக் கொஞ்சம் ‘உரத்து யோசிக்க’ எடுத்த முடிவினால் வந்த வினை இது.

Disclaimer: தமிழ் மக்கள் எப்படி வாக்களிக்க வேண்டுமென இங்கு நான் ‘பிரகடனப்’ படுத்த வரவில்லை. இதைச் சொல்வதற்கு நீ யார் / நீங்கள் யார் / நாங்கள் யார் / இவர் யார் / யாருனக்கு இந்த உரிமையைத் தந்தது என்று உங்களில் சிலர் ‘உரத்து யோசிப்பதும்’ கேட்கிறது. அஞ்சற்க! இது பசுபிக் சமுத்திரத்தின் அடியில் கூடி எடுத்த முடிவுமல்ல. சும்மா ஒரு கலாட்டாவுக்காகத் தான்.

முன்னெப்போதுமில்லாத வகையில் பிராந்திய வல்லரசுகளின் (இதில் இந்தியாவும் அடக்கம்) ஆடுகளமாக இலங்கை ஆகிவிட்ட நிலையில் இலங்கையின் ஆட்சியாளரைத் தீர்மானிக்கும் பொறுப்பு வெளிநாடுகளால் எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது. ‘அரகாலயா’ இதற்கு ஆதாரம். ஆனானப்பட்ட போர்க்கள நாயகனான கோதாபயவே வாலைச் சுருட்டிக்கொண்டு மாலதீவுக்கு ஓடியது இந்த ‘அரகாலயா’ வினால் தான். இதில் இந்தியாவுக்கு இரட்டைக் கடமைகள் இருந்தன. அது தனது நலனுக்காகவும் அமெரிக்காவின் நலனுக்கான proxy ஆகவும் செயற்பட்டிருந்தது. இரண்டு நாடுகளும் இங்கு ஒரு வகையில் தொட்டில் / பிள்ளை ஆட்டத்தையே ஆடியிருந்தன. அமெரிக்கா பிள்ளையை நுள்ளி அழ வைக்க இந்தியா தொட்டிலை ஆட்டி / $4.5 பில்லியனை ஊட்டி நல்ல அம்மாவாக நடித்துக்கொண்டது. அப்போ அமெரிக்காவின் IMF கடனை எப்படிப் பார்ப்பது? அது உதவி செய்யவில்லையா எனக் கேட்கலாம். IMF கடன் என்பது கிட்டத்தட்ட ஒரு சூப்பி மாதிரி. அது நித்திரை கொள்வதற்கு மட்டுமே கொடுக்கப்பட்ட ஒன்று. குழந்தை இன்னும் தூக்கத்திலிருந்து எழும்பவில்லை. அது எழும்பியதும் உண்மையான பாலுக்காக அழும். பிரச்சினை இனிமேல் தான் ஆரம்பமாகும்.

மார்ச் 23 ம் திகதி ஜே.வி.பி. / மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திசநாயக்கா கனடாவில் சிவப்புக் கம்பளத்தில் நடக்கவிருக்கிறார். அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா என்று பல முக்கியமான நாடுகள் அவருக்கு ஏற்கெனவே செங்கம்பள வரவேற்பைக் கொடுத்துவிட்டன. இந்திய விஸ்தரிப்புக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் எதிராகப் போர்க்கொடி தூக்கிய ஒரு தீவிரவாத அமைப்பிற்கு இது வரலாற்றுப் புகழ் தரும் ஒரு விடயம். ஆயுதங்களை ‘மெளனித்துவிட்டு’ ஜனநாயகத்துக்குத் திரும்பியவர்கள் இப்போது தான் சர்வதேச அரசியலைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் எனச் சிலர் சிலாகிக்கிறார்கள். அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பசுத்தோல் போர்த்திகொண்டு வருகிறார்கள் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்கள் எனச் சிலர் கூறுகிறார்கள். எப்படியாயினும் அவர்கள் புதிய ஆடுகளத்தைப் புரிந்துகொண்டு ஆட்டத்தை மாற்றியிருக்கிறார்கள். Too bad நாங்கள் அதைச் செய்யவில்லை.

ஜே.வி.பி. யைப் பொறுத்தமட்டில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் மனம் மாறியிருக்கின்றனவா, தடுமாறியிருக்கின்றனவா அல்லது திட்டமிட்டு அதன் பிரகாரம் நடந்துகொள்கின்றனவா என்பது விவாதத்திற்குரியது. சீனாவின் கைகளில் இலங்கை மீண்டும் விழுந்துவிடக்கூடாது என்பதில் இவ்விரு நாடுகளும் மிகவும் விழிப்பாக இருக்கின்றன. குறிப்பாக கடந்த நவம்பரில் மாலை தீவில் நடைபெற்ற ஆட்சி மாற்றம் இந்து சமுத்திரத்தில் சீனாவுக்கு ஆதரவான சூழலை உருவாக்கியிருக்கிறது. இந்து சமுத்திரத்தில் வலம் வரும் இரண்டு சீன ஆய்வுக்கப்பல்களில் ஒன்று இப்போது மாலைதீவில் நங்கூரமிட்டிருக்கிறது. மற்றது இலங்கை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்கிறார்கள். ஆனால் இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் சீன ஆய்வுக் கப்பல் இலங்கைத் துறைமுகத்தில் நங்கூரமிடுவதை இலங்கை ஒரு வருடத்திற்குத் தடை செய்திருக்கிறது. அப்படியிருந்தும் அடாத்தாக சீனக் கப்பல் இலங்கையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில் இலங்கையில் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியைத் தக்க வைப்பது இந்திய – அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும். ஆனால் அவருடைய வெற்றிக்கு ராஜபக்சக்களின் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஜன பலவேகய கட்சிகளின் ஆதரவு தேவை. சமீப கால மக்கள் சக்தியின் அதிகரித்துவரும் செல்வாக்கு காரணமாக சிங்கள மக்களின் வாக்குகள் பிரியுமானால் வெற்றியத் தீர்மானிக்கும் வாக்குகளாக தமிழரது வாக்குகளே அமையும். (தொடரும்)