Columnsமாயமான்

உரத்து யோசித்தல்: ரணிலா? அனுரகுமாரவா? – தொடர்ச்சி

சென்ற வார ‘உரத்து வாசித்தல்’ கட்டுரையின் தொடர்ச்சி இது. நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலா அனுரகுமார திசநாயக்காவா சரியான தேர்வு என்பது பற்றி அதில் அலசியிருந்தேன். இவர்கள் இருவரில் எவர் வந்தாலென்ன என்று தமிழர்கள் இருந்துவிடக்கூடாது குறிப்பாக இந்தியாவில் மோடி மூன்றாவது தடவையும் பிரதமராவது உறுதி என்பது ஏறத்தாழ தீர்மானிக்கப்பட்டதன் பிறகு இந்த இருவரில் எவர் என்பது பற்றி நாம் அவதானமாக முடிவுகளை எடுக்கவேண்டும்.

புதிய ஜனாதிபதி மொஹமெட் மியுசு தலைமையில் மாலை தீவு, தீவிர இஸ்லாமியச் சாய்வை எடுத்தது மட்டுமல்ல சீனாவுடன் மிக நெருக்கத்தையும் பேணத் தொடங்கி விட்டது. போதாததற்கு சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் செய்திருக்கிறது. இந்தியாவின் அயலுக்குள் இருப்பதுமல்லாது இதுவரை காலமும் இந்தியாவுடன் நல்லுறவையும் பேணி வந்த மாலை தீவின் இந்நகர்விற்கு மோடி அரசே முழுப் பொறுப்புமேற்க வேண்டும். உலகிலேயே மூன்றாவது அதிக முஸ்லிம்கள் வாழும் நாடான இந்தியாவில் இந்து மதவெறிகொண்ட அரசு முஸ்லிம் குடிமக்களை இரண்டாம்தரப் பிரஜைகளாக நடத்துவதன் எதிரொலியும் மாலைதீவின் இம் மாற்றத்திற்கொரு காரணம்.

இந்தியாவைப் பொறுத்தவரை மியுசுவின் நிலைப்பாடு முதலே தெரிந்த ஒன்று. அவர் துருக்கியுடனும், சீனாவுடனும் மிக நெருக்கமானவர். தான் பதவிக்கு வந்ததும் இந்தியா மாலதீவில் வைத்திருக்கும் தனது சிறிய படைப் பிரிவை (87 பேர்) அகற்ற வேண்டுமெனக் காலக்கெடு வித்தித்தார். இதன் காரணமாக மாலதீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள இலட்சத் தீவுகளில் ஒன்றான மினிகோய் தீவில் இந்தியா தனது புதிய கடற்படைத் தளமொன்றை நிறுவுகிறது. மாலைதீவில் தனது ஆதிக்கம் குறைக்கப்படுவதனால் எஞ்சியிருக்கும் அயலவரான இலங்கைத் தீவில் அதன் கவனம் இப்போது மும்முரமாகக் குவிக்கப்படுகிறது.

ராஜீவ் காந்தியின் பருப்பு பறப்பிற்குப் (1987) பின்னர் இலங்கை மீது இந்தியா காத்திரமான அதிகாரத்தை வெளிப்படுத்தவில்லை. வர்த்தக ரீதியாகவோ அல்லது மொழி, கலாச்சார ரீதியாகவோ அது தனது செல்வாக்கை அழுத்தமாகப் பிரயோகிக்காமையால் சீனா அவ்விடத்தை எடுத்துக்கொண்டுவிட்டது. இந்தியாவுக்கு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தையே மீண்டும் பறித்துக்கொள்ளுமளவுக்கு இந்தியா தனது ஆதிக்க பலத்தை இழந்திருந்தது. நல்ல காலத்திற்கு அரகாலயா வந்து அல்லது வரவழைக்கப்பட்டு இந்தியா தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட இரண்டாவது சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இந்த தடவை இந்தியா தமிழ்ச் சீட்டை விளையாடாது வர்த்தகச் சீட்டை மட்டுமே முன்வைக்கிறது. அதானி போன்றவர்களே அதன் முன்னணி ஆட்டக்காரர்கள். இந்தத் தடவை அமெரிக்காவையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு அது களமிறங்குகிறது. சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் ( International Development Finance Corporation) என்ற அமெரிக்க ‘தனியார்’ வங்கி மூலம் US$ 553 மில்லியன் கடனை அதானிக்குக் கொடுத்து கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது, மன்னாரில் 30 ஏக்கர் காணியில் காற்றாடி மின்னாலைகளை உருவாக்கும் ஒப்பந்தமொன்று 2021 இல் அதானி நிறுவனத்துடன் செய்யப்பட்டது. இவ்விடயங்களில் வெற்றியீட்டுவதற்காக இந்தியா தந்திரோபயமாக தமிழர் சீட்டைக் கைநழுவ விட்டது. இன்றுவரை நிலை இதுதான்.

இந்தியாவின் இத் திட்டத்தைச் செய்துமுடிக்க வேண்டுமானால் இலங்கை தொடர்ந்தும் அரகாலயா என்ற கோவிட்டினால் தாக்கப்பட்டு தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் long covid நிலையிலிருந்து மீளக்கூடாது என்பதுவே இந்தியாவின் விருப்பம். (ஜோன் றப்லி என்ற அரசியல்-பொருளாதார நிபுணர் நலிந்து போன பொருளாதாரத்தை long covid உடன் ஒப்பிடுவார். அதாவது long covid உபாதையிலுள்ள ஒருவர் நோயாளியுமல்ல அதே வேளை மிகவும் பலவீனமாகவும் இருப்பார் என்பதே). அரகாலயா என்ற கோவிட் நோய் பீடித்த இலங்கை இப்போதும் long covid நிலையில் தான் இருக்கிறது. இந்நிலையைச் சாதகமாகப் பாவிப்பதே இந்திய-அமெரிக்க கூட்டினது விருப்பம். இச்சதுரங்க விளையாட்டிலிருந்து சற்றே ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் சீனா மாலை தீவைத் தனது தளமாக மாற்றியிருக்கிறது.

இப்பின்னணியில் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் மிக முக்கியத்துவம் பெறும் ஒன்றாகிறது. ராஜபக்சக்கள் தமது வேட்பாளராக எவரையும் அறிவிக்காத பட்சத்தில் எஞ்சப்போவது ரணில் – சஜித் – அனுரகுமாரவிடையேயான மும்முனைப் போட்டி. சஜித் பிரேமதாசாவின் பலவீனமான தலைமை ரணிலுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் இரு அணிகளும் கூட்டணியொன்றை உருவாக்க முயலலாம். அல்லது சஜித்தின் கட்சியிலிருந்து பலரை ரணில் உருவிக்கொள்ளலாம். எப்படியானாலும் ரணிலே இவ்வணியின் தலைவர். இநிலைமையில் உருவாகும் இருமுனைப் போட்டியில் அனுரகுமார தரப்பு வெற்றியீடுவதற்கான கள நிலவரமும் இருக்கிறது.

அனுரகுமாரவின் தலைமையில் ஜே.வி.பி. / மக்கள் சக்தி இறுக்கமான இடதுசாரீயத்திலிருந்து சற்றே வலது பக்கம் நகர்ந்திருப்பதாகத் தோற்றுகிறது. அது உண்மையா அல்லது ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பாசாங்கு தானா என்பது தெரியாது. அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினாலும் திறந்த பொருளாதாரக் கொள்கை, அயலுறவு விடயங்களில் அது திளைத்துப் பிழைக்க வேண்டுமாகில் இம்மாற்றம் அவசியமானதும் நிரந்தரமானதுமாக இருக்க வேண்டும். ஆனாலும் அவர்கள் சிங்களவர்கள் என்பதும் அதனால் மகாவம்ச மனநிலையே அவர்களது பாதைகளையும் தீர்மானிக்கும் என்ற அனுமானத்தில் அவர்களது ‘இந்திய விஸ்தரிப்பு’ சித்தப்பிரமையில் (paranoid) எந்தவித மாற்றமும் ஏற்பட மாட்டாது என எதிர்பார்க்கலாம். ஆனாலும் வெற்றியீட்டும் பட்சத்தில் அவர்களது ஆட்சி – இந்திய உறவு ஒரு marriage of convenience ஆகவே இருக்க முடியும். தற்போதைய கள நிலவரத்தில் அதையும் ஏற்க இந்தியா தயார். அனுகுமாரவின் சமீபத்திய இந்திய அழைப்பும் செங்கம்பள வரவேற்பும் இந்தியாவின் இந்த Plan B திட்டதின் வடிவமெனவே நான் பார்க்கிறேன்.

அப்போ Plan A என்னவென நீங்கள் கேட்கலாம். அது ரணில் தான். ரணில் ஒரு known devil. அவரது பாதைகள் அறியப்பட்டவை. இருமுனைப் போட்டியில் அவரை வெல்ல வைக்கப் போவது தமிழரின் வாக்குகள் என்பது நன்றாகவே தெரிந்த ஒன்று. அவரிடம் பேரம் பேச எதுவுமில்லை. செங்கம்பளம் போன்ற ‘சோடனை’ அரசியல்களைக் கண்டு களைத்துப்போன ஒரு பனம்காட்டு நரி அது. அவருக்கும் இந்தியாவுக்கும் இடையில் அமெரிக்க அனுசரணையுடன் பின்கதவு உறவாடல்கள் இருக்காது என நிச்சயமாகக் கூறமுடியாது. தற்போதைய பொருளாதாரச் சிக்கலிலிருந்து இலங்கையைத் தற்காலிகமாக மீட்டெடுப்பதற்கு அவரால் மட்டுமே முடியும். அதை நிரந்தரமாக மீட்டெடுப்பதற்குத் தேவையான ஊழலொளிப்பு, இறுக்கமான அரச செலவீனக் கட்டுப்பாடு, கல்வியறிவுள்ள அரசியல்வாதிகள் போன்றவற்றை அவரால் தரமுடியாத அளவுக்கு அவர் அதில் ஊறிப்போன ஒருவர். ஆனால் புதிய தும்புக்கட்டையான ஜே.வி.பி. சிலவேளை அதைச் சாத்தியமாக்கலாம். ஆனால் இந்தியாவுக்கு, தனது வர்த்தக ஆதிக்கத்தை நிலைநிறுத்த ஊழல் பழகிப்போன ரணில் போன்ற அரசியல்வாதியே தேவை. அதற்காகவேனும் ரணிலின் ஆட்சியே அதன் முதல் நோக்கம் (Plan A). ஆனால் இந்தியா அதை வெளிப்படையாக காட்ட முயற்சிக்காது.

தேர்தல் இருமுனைக் களமொன்றைத் தோற்றுவிக்குமானால் தமிழரின் வாக்குகள் அதி பலமுள்ளவையாகக் கணிக்கப்படும். தமிழர்களுக்கு இந்த அந்தஸ்து போவது சிங்கள தேசியக் கடுப்பாளர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதனால் அவர்கள் (ராஜபக்ச அணி), தமது வேட்பாளர் இல்லாதவரைக்கும், ரணில் தரப்புக்கே விசுவாசமாக இருக்கும். புலம் பெயர்ந்த தமிழர்கள் குறிவைக்கப்படுவர். ஏற்கெனவே கோதாபயவின் கையைப் பிடித்து எழுதப்பட்ட நூலொன்றில் ராஜபக்சக்களின் அவல நிலைக்கு புலம் பெயர்ந்த தமிழர்களே காரணம் என்று புலம்பி எழுதப்பட்டிருக்கிறது. இளவரசர் நாமல் முடிசூடுவதற்குத் தயாராகுமட்டும் அவர்களது முடியைப் பக்குவமாகப் பாதுகாக்கக் கூடியவர் ரணில் என்பது அவர்களது நம்பிக்கை. ஜே.வி.பி. கைகளில் முடி போனால் திரும்பி வராது என்பது உறுதி என்பதனால் அவர்கள் ரணில் பக்கமே சாய்வார்கள். இந்நிலையில் தமிழர்களும் அமைதியாகவும், தீர்க்கமாகவும் தங்களது பங்களிப்பைச் செய்யவேண்டும். தேர்தல் பகிஷ்கரிப்பு என்பது இங்கு ஆகாது.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு பற்றி ஜே.வி.பி. / மக்கள் சக்தி இதுவரை காத்திரமான ‘பிரகடனம்’ ஒன்றையும் செய்யவில்லை. செய்தால் அதை ராஜபக்சக்கள் தூக்கிக்கொண்டு தெருத் தெருவாக பானர் கட்டி முட்டை எறிவார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். எனவே துணிச்சலுள்ள ஒரு தமிழரமைப்பு முன்வந்து அனுரகுமார தரப்புடன் பின்கதவுப் பேச்சுவார்த்தைகளை நிகழ்த்தினால் நல்லது. சமீபத்தில் அனுரகுமார கிளிநொச்சியில் ஒரு பகிரங்கக் கூட்டமொன்றில் சிங்களத்தில் ஏதோ சொல்லியிருந்தார். ஆனால் பாவம் அது lost in translation ஆகப் போய்விட்டது. எதிர்வரும் மார்ச் 23 அன்று அவர் ரொறோண்டோவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுவார் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் அரசியல் தீர்வொன்று அவர்களிடம் இருக்கிறதா என்பது தெரியாத நிலையில், அதைப் பகிரங்கமாக அவர் கூற முடியாத நிலையில் தமிழர்களது நிலை திரிசங்கு சொர்க்கமாகவே இருக்கும்.

சமீபத்தில் வடக்கின் சில பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிக்கொண்டிருக்கிறார்களென செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. 1986 இல் இருந்த எல்லைகள் வரை காணிகள் விடுவிக்கப்படுமென ரணில் விகிரமசிங்க முன்னர் சொல்லியிருந்தார். இப்படியான விடயங்கள் தேர்தலுக்கு வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சிகளென்றோ அல்லது சர்வதேச நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கென்றோ கூறிக் கடந்துபோக முடியாது. இவற்றை நல்லெண்ண முயற்சிகளாக வரவேற்று மேலும் நிலங்களை விடுவிக்க முயற்சி எடுக்கவேண்டும். இந்தியாவில் மோடி மூன்றாவது தடவையாக பிரதமராக வருவது உறுதியாகிவிட்ட நிலையில் அந்நாட்டின் உறவு சிங்கள இலங்கையைக் குறிவைத்த ஒன்றாகவே இருக்கும். இதனால் தமிழர்களும் ஒரு வகையில் தந்திரோபாய நகர்வுகளை எடுக்கவேண்டும். இரண்டு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நிலங்களை விடுவித்து மீள்குடியேற்றங்களை ஊக்குவித்து சனத்தொகையை அதிகரித்தால் மட்டுமே தமிழீழத்துக்கான புதிய மொட்டு அரும்பும். அது தேசமா அல்லது நாடா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை.