உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன் புலனாய்வு அதிகாரிகள் சாஹ்ரானைச் சந்தித்தனர் – சாஹ்ரானின் மனைவி


உடைகிறது குட்டு….

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடைபெறுவதற்கு முன்னர் NTJ தலைவர் சாஹ்ரான் ஹாஷிமை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சந்தித்ததாக சாஹ்ரானின் மனைவி வாக்குமூலமளித்திருந்ததாக சமாகி ஜன பலவேகய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் ஃபெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐயமேதுமிருந்தால், சாஹ்ரானின் மனைவி பாராளுமன்ற விசாரணைக்குழுவுக்கு அளித்த வாக்குமூலத்தின் பிரதியொன்றைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி பொதுப் பாதுகாப்பு அமைச்சர் வீரசேகரவுக்கு ஹரின் ஃபெர்ணாண்டோ சவால் விடுத்துள்ளார்.

“சாஹ்ரானின் மனைவி உயிரோடு உள்ளாரா என்பது எமக்குத் தெரியாது ஆனால் அவர் அளித்த வாக்குமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி நாம் அமைச்சர் வீரசேகரவைக் கேட்டுக்கொள்கிறோம். ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு முன்னர் சாஹ்ரான் புலனாய்வு அதிகாரிகளைச் சந்தித்ததற்கான ஆதாரங்கள் எம்முடன் உள்ளன, அத் சாஹ்ரானின் மனைவியும் உறுதி செய்துள்ளார்” என ஃபெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

தாக்குதல்கள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், தென் கடுகதி நெடுஞ்சாலையின் கெளனிகம வெளியேற்றப் பாதையில் வைத்து இரண்டு கனரக வண்டிகள் பொலிசாரால் நிறுத்தப்பட்டதெனவும் ஏப்ரல் 04, 2019 இல்,அவ்விரண்டு வாகனங்களும், பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரால் விடுவிக்கப்ப்ட்டுவிட்டன எனவும் பா.உ. ஹரைன் ஃபெர்ணாண்டோ தெர்வித்துள்ளார். ஏப்ரல் 21 அன்று, இந்த பொலிஸ் அதிகாரி பிரபல ‘மாலு மாலு’ உல்லாசப் போக்கிடமொன்றில் காணப்பட்டார் எனவும், இரண்டு வாகனங்கள் பற்றிய விடயங்களை அறிந்த சாட்சிகள் அவைபற்றி பேராயர் மல்கம் ரஞ்சித்திடம் கூறியுள்ளார்கள் எனவும் ஃபெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலே குறிப்பிட்ட இரண்டு வாகனங்களிலும் வெடிபொருட்கள் இருந்ததாக, சமாகி ஜன பலவேகய கட்சியின் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரான மனுஷா நாணயக்காரவும் தெரிவித்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட பொலிஸ் உயரதிகாரி, வாகனங்களை விடுவிப்பதற்காக ஐயாயிரம் ரூபாய் தாளை உள்ளடக்கிய பணப் பொதியை இலஞ்சமாகப் பெற்றிருந்தார் எனவும், பின்னர் வேறு பல அதிகாரிகளுடன் இணைந்து மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து தமக்காகப் பேசும்படி கேட்டுக்கொண்டதாவும் நாணயக்கார தெரிவித்துள்ளார்.