“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினால் அரசியல் இலாபம் பெற்று, தொடர்ந்தும் நீதியை மறுத்து வருபவர்கள் தண்டிக்கப்படுவாராக” -செ(ச)பிக்கிறார் பேராயர் மல்கம் ரஞ்சித்

“ஏப்ரல் 21, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட உயிர்க்கொலைகளின் மீது அரசியயல் இலாபங்களைப் பெற்றுக்கொண்டும், தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை மறுத்துக்கொண்டிருப்பவர்கள் கடவுளின் சட்டத்தினால் தண்டிக்கப்படுவார்கள்” என கத்தோலிக்க பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித், நேற்று (13), புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற வருடாந்த தொழுகையின்போது வேண்டிக்கொண்டார்.

“ஏப்ரல் 21, 2019 அன்று, கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியன் தேவாலயம் மற்றும் இதர உமது தேவாலயங்களில் கொல்லப்பட்டவர்களும், இச்சம்பவங்களினால் தீராத உடல், மனக் காயங்களுக்குள்ளாவர்களும் தமது வேதனைகளிலிருந்தும் விடுதலை செய்யும் பெரும் பொறுப்பை, ஆண்டவரே, நாம் உம்மிடம் ஒப்படைக்கிறோம். தீவிரவாதம் என்ற பெயரில் இந் நாதியற்ற மக்கள் மீது எழுந்தமானமாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இரத்தக்களரிக்குப் பொறுப்பானவர்களும், அதற்குத் துணைபோனவர்களும், தாம் இப்போது புனிதர்கள் எனப் புகழ்ந்துகொள்பவர்களும்,, இதையெல்லாம் நன்கறிந்திருந்தும் தமது அரசியல் இலாபங்களுக்காக அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதிருந்த அரசியல்வாதிகளும், குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டுவந்து தமது கடமைகளைச் செய்யாத அதிகாரிகளும், உமக்கு முன்னர் கொண்டுவரப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்படுவாராக. இது உமது பரிசுத்த பூமியில் சிந்தப்பட்ட உமது பக்தர்களின் குருதி. அன்புள்ள பரிசுத்த ஆண்டவரே, உங்கள் பக்தர்கள் நீதி கேட்டு யாசிக்கிறார்கள். ஆண்டவரின் பெயரால் நாம் தண்டனைகளை வழங்குமுன் நீவிர் தலையிட்டு உமது பக்தர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பீராக. ஆமென்” என பேராயர் தனது செபத்தின்போது கூறியிருந்தார்.