உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் | ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கும் தொடர்பு இருப்பதனாலேயே உண்மைகள் மறைக்கப்படுகின்றன – அருட்தந்தை சிறில் காமினி

32 மாதங்கள் கடந்த பின்னரும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னால் மறைந்துள்ள உண்மைகளை அரசாங்கம் தொடர்ந்தும் மறைத்துவருவதற்குக் காரணம் இச்சம்பவங்களுடன் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் தொடர்புகள் இருப்பதனாலா என பேராயர் இல்லத்தில் இன்று (21) நடைபெற்ற சந்திப்பின்போது அருட்தந்தை சிறில் காமினி சந்தேகம் தெரிவித்துள்ளார்.



இதுவரை உண்மைகளை வெளிக்கொணர்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்பதைக்கொண்டு ஊகிக்கப்படுவது ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இச் சம்பவங்களுடன் தொடர்புகள் இருக்கிறது என்பதையே என அவர் மேலும் தெரிவித்தார்.

இச் சமபவங்கள் தொடர்பாக இரண்டு விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் அரசாங்கத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன. இவ்வறிக்கைகளில் கூறப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதோடு அதில் கூறப்பட்டிருக்கும் கொலைகளுக்குப் பொறுப்பானவர்களின் பெயர்களைப் பகிரங்கப்படுத்தாவிட்டல், இதற்காகச் வீணாக்கப்பட்ட பொதுமக்களின் ஏராளமான பணத்துக்கு அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டால் இத் தாக்குதல்களின் பின்னால் மறைந்துள்ள உண்மை உலகத்துக்குத் தெரிந்துவிடும் என அருட்தந்தை காமினி தெரிவித்தார்.