NewsSri Lanka

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் | உண்மையைத் தேடுதலில் பாப்பரசர் பேராயர் மல்கம் ரஞ்சித்திற்கு ஆதரவு


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணி பற்றிய தகவல்களைப் பெறுவதில் இலங்கை அரசுக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்துவரும் இலங்கை கத்தோலிக்க சபையின் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களுக்கு தனது ஆதரவைத் தருவதாக பாப்பரசர் ஃபிரான்சிஸ் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த வார இறுதியில் மேற்கொண்ட இணையவழிக் கூட்டமொன்றின்போது, பாப்பரசரால் அனுப்பப்பட்ட கடிதம் பற்றி பேராயர் ரஞ்சித் குறிப்பிட்டார்.

“உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் என்னை மிகவும் வருத்துகின்றன. அது குறித்து நான் மேலும் தொழுகைகளை மேற்கொள்வேன் என உறுதிபூண்கிறேன். எது சரியான சந்தர்ப்பம் என நீங்கள் கருதுகிறீர்களோ அப்போது தேவையானதைச் செய்யக் காத்திருக்கிறேன். நாளை நான் வத்திக்கன் ராஜாங்கச் செயலாளரோடு இது பற்றிப் பேசுவேன். எனது உதவி மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். எமது தரப்பிலிருந்து எது தேவையெனப் படுகிறதோ அதைக் கேளுங்கள்” என பாப்பரசரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அக் கடிதத்தை முழுமையாகப் பிரசுரிக்கத் தான் விரும்பவில்லை என பேராயர் மல்கம் ரஞ்சித் அக்டோபர் 21 அன்று நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தெரிவித்தார்.