உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஒரு மாத அவகாசம் – பேராயர் மல்கம் ரஞ்சித் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கத்தோலிக்க திருச்சபை எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க அரசாங்கத்துக்கு ஒரு மாத அவகாசம் தருவதாக பேராயர் மல்கம் ரஞ்சித் உட்படப் பல கத்தோலிக்க ஆயர்களும் மதகுருமார்களும் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை ஜநாதிபதி ராஜபக்சவுக்கு அநுப்பி வைத்துள்ளனர்.

பேராயர் மல்கம் ரஞ்சித், கொழும்பு துணை ஆயர்கள் ஜே.டி. அந்தோனி ஜெயக்கொடி, அந்தோன் ரஞ்சித், மக்ஸ்வெல் சில்பா, சிலாப ஆயர் வேலன்ஸ் மெந்டிஸ், ஆயர் ஹரோல்ட் அந்தோனி பெரேரா, ஆயர் றேமண்ட் விக்கிரமசிங்க மற்றும் பல கத்தோலிக்க மத குருமார் கையெழுத்திட்டு அநுப்பிய இக் கடிதத்தில் தமது வேண்டுகோள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாற்று நடவடிக்கைகளில் இறங்கவேண்டி ஏற்படுமென அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

“மேலோட்டமாகச் செய்யப்பட்ட விசாரணைகள் நீதியையும் உண்மையையும் வெளிக்கொணரவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு மாதத்துக்குள் நம்பகத்தனமான விடைகள் தரப்படாவிட்டால் நாங்கள் மாற்று வழிகளில் கிளர்ச்சிப் போராட்டங்களில் இறங்கவேண்டி ஏற்படும்” என ஆயர்களும் மதகுருமாரும் தமது கடிதமூலம் ஜநாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன், றியாஜ் பதியுதீன், டாக்டர் முஹாமெட் சூல்யன் முஹாமெட் சாஃப்றாஸ், அஹமெட் தலித், சட்டமா அதிபர் அலுவலகத்தில் பணிபுரிந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் எம்.ஏ.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் மீது பலவித குற்றச்சாட்டுக்களை விசாரணை ஆணையம் முன்வைத்திருந்தது எனவும் அவை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் ஜனாதிபதியைக் கேட்டுள்ளனர்.

அத்தோடு, இந்தியாவுக்குத் தப்பியோடிவிட்டார் எனக் கூறபப்டும் முக்கிய சாட்சியான சேரா பற்றியும், ஜமீல் எனப்படும் தாஜ் சமுத்திரா ஓட்டல் குண்டுதாரியை தெஹிவளையில் வைத்து தொடர்புகொண்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரி யார் என்பது பற்றியும் புதிய விசாரணைகளை அரசு ஆரம்பிக்கவேண்டுமெனவும் அக் கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது.