News & AnalysisSri Lanka

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் | “நாடு சபிக்கப்பட்டிருக்கிறது” – ஆட்சியாளரைச் சாடும் பேராயர் மல்கம் ரஞ்சித்

மர்மங்களை மூடி மறைக்க அரசுக்கு சஜித் பிரேமதாச உதவுகிறாரா?

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது, ஏப்ரல் 21, 2019 அன்று, கடைசியாகத் தற்கொலை செய்த குண்டுதாரிக்கும் இராணுவத்துக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருந்தமை பற்றிய விடயத்தை அரசாங்கம் விசாரிக்காதமை பற்றி இலங்கைக் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜபக்ச அரசாங்கத்தின் தீவிர ஆதரவாளரான அவர் புதனன்று (ஜூன் 2) ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின்போது, தற்போதைய ஆட்சியாளரைக் கடுமையாகச் சாடியது மட்டுமல்லாது, நாடு தற்போது அனுபவித்துவரும் துன்பத்திற்கு, உயிரிழந்த மக்களின் சாபம் காரணமாகவிருக்குமோ எனத் தான் ஐயுறுவதாகவும் தெரிவித்தார்.

“நாட்டைப் பாதுகாப்போமெனச் சபதமெடுத்துக்கொண்டு வந்தவர்களே நாட்டை அழிப்பதில் ஈடுபடுகிறார்கள். இயற்கையும்கூட ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னால் மாபெரும் மர்மம் ஒன்று இருக்கிறதென முந்நாள் சட்டமா அதிபர் கூறியிருந்தாலும் அது என்ன என்பது பற்றி அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். இத் தாக்குதல்களோடு தொடர்பான சில மூலங்கள் முறையாக விசாரிக்கப்படவில்லை. அரசியல்வாதிகள் சிலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றி விசாரிக்கப்படவில்லை. விசாரணைக் கமிசனில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களில் கூறப்பட்ட தகவல்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. தெஹிவளையில் கடைசியாகத் தற்கொலை செய்துகொண்ட ஜமீல் என்பவர் சந்தித்த ‘சோனிக்’ என்ற இராணுவத்தினர் யார் என்பது வெளிக்கொணரப்படவில்லை.

‘தெஹிவளை குண்டுதாரி’ எனப்படும் ஜமீல் குண்டு வெடித்துத் தற்கொலை செய்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் அவருக்கு இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு சென்றிருந்தது பற்றி அப்போதய பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர தெரிவித்திருந்தார். ஆனால் விசாரணைக் கமிசன் ஆணையாளர் இது பற்றி மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவிடவோ அல்லது தெஹிவளைக் குண்டுதாரியின் கைத்தொலைபேசி பதிவுகளை ஆராயவோ, ஜமீலுடன் தொடர்புகொண்ட அதிகாரி யாரென்பதை அறியவோ முயற்சிகளை எடுக்கவில்லை” என பேராயர் ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.

இருப்பினும், ஆட்சியாளரின் அழுத்தங்கள் காரணமாக, 24 மணித்தியாலங்களுக்குள் பேராயர் ரஞ்சித் தனது கருத்துக்களை மீளப்பெற்றுவிடுவார் என அவதானிகள் தெரிவித்ததாக ‘கொலொம்பொ ரெலிகிராஃப்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்விடயத்தில் அதிக அக்கறை கொண்டிருக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மர்மங்கள் துலக்கப்படாமல் இருப்பதற்காக அரசாங்கத்துடன் ஒத்துழைக்கிறாரா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. இவ் விடயங்கள் தொடர்பாக கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கு சஜித் பிரேமதாச இரண்டு தடவைகள் முயன்றிருந்தார் எனவும் இரண்டு தடவைகளிலும் அவர் வேறு காரணங்களைக் கூறி அச்சந்திப்பிலிருந்து பின்வாங்கிக்கொண்டார் எனவும் தெரிய வருகிறது. இரண்டாவது சந்தர்ப்பத்தில் இச் சந்திப்பு இராணுவப் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலிக்காக சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்ட சந்திப்பு எனவும் ஆயர்களை சுரேஷ் சாலி சந்திக்கும் சந்தர்ப்பத்தை பிரேமதாசாவே ஏற்படுத்திக் கொடுத்தார் எனவும் தகவல்கள் முன்னர் வெளிவந்திருந்தன..

புலனாய்வு அதிகாரியின் சந்திப்பிற்குப் பிறகு பேராயர் ரஞ்சித் தான் முன்னர் தெரிவித்த கருத்துக்களை மீளப்பெற்றோ அல்லது திரிபு படுத்தியோ ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாது, விசாரணைக் கமிசன் அறிக்கை வெளிவந்தவுடன் அதில் சில பக்கங்களைத் தவிர்த்து மீதியே சட்டமா அதிபருக்கு கொடுக்கப்பட்டன. இது தொடர்பாக அவர் முழுமையான அறிக்கையைக் கோரியபோது, சுரேஷ் சாலி சட்டமா அதிபரைச் சந்தித்து அது தொடர்பில் பேசியிருந்தார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களுடன் எந்தவித தொடர்புகளும் ‘இல்லாதிருந்தும்’, சுரேஷ் சாலியின் இந் நகர்வுகள் இதன் பின்னாலுள்ள மர்மங்களை மேலும் ஆழமாக்குகின்றன எனப் பேசப்படுகிறது.

இது குறித்து பாராளுமன்றத்தில் குரலெழுப்பிய ஹரின் பெர்ணாண்டோ, மனுஷா நாணயக்கார ஆகியோர்களும் பின்னர் மெளனமாகி விட்டார்கள். சஜித் பிரேமதாசாவே அவர்களது வாய்களையும் மூடிவிட்டார் என சந்தேகங்கள் அப்போது உலா வந்தன.