Spread the love

செப்டம்பர் 09, 2020: ஏப்ரல் 21, 2019, உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி தேசிய தவ்ஹீத் ஜமாட்டோ அல்லது அதன் தலைவர் சாஹ்ரான் ஹஷிமோ அல்ல. அவர்கள் ஐசிஸ் உடன் நேரடி தொடர்புகளைக் கொண்டவர்கள் அல்லர். நாட்டிற்குக் கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்காக வேறொரு அமைப்பினால் இது செய்யப்பட்டது என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராவுப் ஹக்கீம், ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளின்போது தெரிவித்தார்.

“அதை யார் செய்திருந்தாலும், அவர்கள் தமது நோக்கத்தை நிறைவேற்றி விட்டார்கள் – அது நாட்டைச் சீர்குலைப்பது. ஐசிஸ் பதாகை ஒரு கவசம் மட்டுமே. சாஹ்ரானும், தேசிய தவ்ஹீத் ஜமாட்டும் ஒரு குறிக்கப்பட்ட அமைப்பினால் ‘வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்கள்’. இது ஒரு தடவை மட்டும் நிறைவேற்றப்பட்ட சம்பவம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹக்கீமின் இந்த சாட்சியத்தைத் தொடர்ந்து “அந்த குறிப்பிட்ட அமைப்பை அடையாளம் காட்ட முடியுமா” என ஆணையாளர்கள் கேட்டதற்கு “ஊடகங்கள் இல்லாமலிருந்தால் சொல்ல முடியும்” என ஹக்கீம் பதிலளித்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் சாஹ்ரான் ஹாஷிமுக்குமிடையில் எந்தவித தொடர்புகளுமில்லை என விசாரணையின் ஆரம்பத்தில் ஹக்கிம் கூறியிருந்தார்.

2015 பொதுத் தேர்தல்களைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 21, 2015 இல் தேசிய தவ்ஹீத் ஜமாட் மசூதி ஒன்றுக்கு ஹக்கிம் சென்றது பற்றியும், அங்கு சாஹ்ரனின் சகோதரர் ரில்வான் ஹஷிமுடன் தர்க்கம் புரிந்தது பற்றியும் ஆணையாளர் கேட்டபோது, “நான் ஒரு அரசியல் தலைவர். நட்டிலுள்ள ஒவ்வொருவரையும் நான் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்று கட்டாயமில்லை” எனக் கூறினார்.

காத்தான்குடியில் நடைபெற்ற மோதல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தோரைப் பார்க்க அங்கு சென்றுவிட்டு, அம் மோதல் தொடர்பாக விசாரிக்க தேசிய தவ்ஹீத் ஜமாட்டின் மசூதிக்குச் சென்றதாகவும் அங்கு சாஹ்ரான் இருந்ததாகவும் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Related:  ஐ.நா. மனித உரிமைகள் சபை | இணைத் தலைமை நாடுகளின் காட்டமான அறிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் | குண்டுவெடிப்புகளின் பின்னால் இன்னுமொரு அமைப்பு – ஹக்கீம்
ராவுப் ஹக்கீம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் | குண்டுவெடிப்புகளின் பின்னால் இன்னுமொரு அமைப்பு – ஹக்கீம்