உயிர்த்த ஞாயிறு தக்குதல்களின் பின்னணியில் இந்தியா – முன்னாள் பா.உ. டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்தியா உள்ளதாக ஜே.வி.பி. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பி.பி.சி. சிங்கள சேவைக்கு வழங்கிய பேட்டியொன்றின்போது தெரிவித்தார்.
இத் தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவில் அங்கம் வகித்த ஒருவர் என்ற வகையில், தம்மால் அதைக் கூறமுடிகிறது என டாக்டர் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஆனால் “அது நலிந்த ஜயதிஸ்ஸவின் சொந்தக் கருத்து. தோற்றுப் போனவர்கள் எதையும் சொல்வார்கள். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் முடிவடைந்து அறிக்கையும் தயாரிக்கப்பட்டுவிட்டது. விரைவில் அது வெளியிடப்படும்போது உங்கள் சந்தேகங்களை அது தீர்க்கும்” என நலிந்த ஜயதிஸ்ஸவின் பேட்டி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இதே வேளை, குண்டுத்தாக்குதல்கள் பற்றிய பொலிஸ் தரப்பு விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை எனச் சட்டமா அதிபர் டப்புல டெலிவேரா தெரிவித்துள்ளதாகவும், விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரை அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையையையும் பெற்று அதில் கூறப்பட்டுள்ள விடயங்களையும் பரிசீலித்து 14 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அவர் பொலிஸ் மா அதிபரைப் பணித்துள்ளதாகத் தெரிகிறது.