உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகள் | யாரந்த ‘The Boss’? -அதிரும் பாராளுமன்றம்!
நாஞ்சில் பி.டி. சாமி அல்லது இயன் ஃப்ளெமிங் உயிரோடு இருந்தால் அவர்களது படைப்புகளுக்கு ஏற்ற நல்லதொரு கதை கைகளிலுண்டு. சொற்ப பணத்துக்கு இலங்கை புலனாய்வுப் பொலிசிடம் வாங்கிக் கொள்ளலாம்.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களின் பின்னால் அங்கொன்றும் அல் பக்டாடியோ, ஐசிஸோ இல்லை, அதன் ‘பொஸ்’ பூனையைத் தடவிக் கொடுத்தபடி உள்நாட்டில்தான் இருகிறார். பலர் பயத்தில் அடிக்கடி தமது சாரங்களையும், கழிசான்களையும் துவைக்கவேண்டி ஏற்பட்டாலும் சிலர் ‘பொஸ்’ சிற்குப் பயப்படாமல் துணிச்சலாக வெளியில் வந்து கதை சொல்கிறார்கள்.
இதற்கெல்லாம் நாம் வீரவன்ச மாத்தயாவிற்குத் தான் நன்றியைச் சொல்ல வேண்டும். பெரிய சூறாவளியின் சுழற்றியடிப்பு ஒரு வண்ணாத்திப்பூச்சியின் சிறகசைப்பில்தான் ஆரம்பமாகிறது என்பதுபோல், இலங்கையில் நிகழப்போகும் பெரிய சூறாவளியைத் தொடக்கி வைத்திருக்கிறார் வீரவன்ச.
****
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் அதன் சூத்திரதாரிகள் இன்னும் அதிகாரத்தில் இருந்துகொண்டு உண்மைகளை மறைக்க எத்தனிக்கிறார்கள். ஆனாலும் இந்த பூசணிக்காய் மிகப் பெரியது, எந்தச் சோற்றுக்குள்ளும் மறைக்க முடியாத அளவுக்கு மிக மிகப் பெரியதாக வளர்ந்துவிட்டது. சில துணிச்சலுள்ளவர்கள் அதைப் பாராளுமன்றத்தினுள் தூக்கி வந்திருக்கிறார்கள். ‘The Boss’ பயப்படும் ஆளில்லை ஆனால் ‘கோபம் வந்தால் கெட்ட மனிசன்’ என்று கூறும் ஒரு வகையானவர். எந்தக் கொலைக்கும் அவர் அஞ்சமாட்டார். அப்படியிருக்க இந்த ‘சிலர்’ பூசணிக்காயோடு அலைகிறார்கள். பாவம். ‘ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்’ கேஸ் தான்.
பாவம் பேராயர் மல்கம் ரஞ்சித்து. மனிசன் வைச்சுக்கொண்டு வஞ்சகம் பண்ணவில்லை. அந்தக் கதிரைக்கு அவர் இலாயக்குள்ளவரா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, அவர் ஒரு பச்சைத் தண்ணீர் என்பது மட்டும் தெரியும். மனிசன் ஊத்திற பாத்திரத்தின் வடிவத்தை எடுத்துவிடுபவர். அடிக்கடி அவர் மஹிந்தவின் பாத்திரத்தில் இருப்பார். சில வேளகளில் தேவாலயத்தின் பழரசக் கிண்ணத்தின் வடிவில் இருப்பார். சில வேளைகளில் எதிர்க்கட்சியினரின் கிளாஸ் வடிவத்தில் இருப்பார். ஆனால் எமக்கு அவரல்ல முக்கியம். அவரணிந்திருக்கும் ஆடையும், அவர் சுமக்கும் சிலுவையும்தான் முக்கியம். எனவே அவரை இப்போதைக்கு ஒரு ‘சைட் ஷோ’ வாக வைத்துக் கொள்வோம். கதை இனித்தான் ஆரம்பமாகின்றது.
*****
நேற்று இலங்கைப் பாராளுமன்றத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தன. முதலாவதை வெடித்தவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பா.உ. ஹரின் ஃபெர்ணாண்டோ மற்றது அதே கட்சியைச் சேர்ந்த மனுஷா நாணயக்கார. இதற்கு முன்னர் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமாரவும் ஒரு சிறு புகைக் குண்டை வெடித்திருந்தார்.
‘சோனிக் சோனிக்’
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு திட்டத்துக்கு ‘பொஸ்’ சும் அவரது குழுவும் இட்ட பெயர் ‘சோனிக் சோனிக்’. இதற்குப் பல அர்த்தங்கள் இருக்கலாம். குண்டு வெடிப்புகள் நிகழும்போது எழும் ஒலி அதிர்வை sonic boom என அழைப்பர். இங்கும் இதே அர்த்தத்தில் தான் பாவிக்கப்பட்டிருக்கலாம் என்பது அடியேனது ஐயம்.
இத் திட்டத்தை நிறைவேற்ற குறைந்தது நான்கு நாடுகளிலிருந்தாவது குழுக்கள் செயற்பட்டிருக்க வேண்டும். ‘The Boss’ இலங்கையில் தான் இருந்தார். மற்றய நாடுகள், மலேசியா, இந்தோனேசியா, மாலைதீவு. மேலும் நாடுகள் இருக்கலாம். இக்குழுக்களிடையே தகவல் தொடர்புக்கு ‘திரீமா’ என்றொரு செயலியைப் பாவித்தார்கள். இத்திட்டமிடலின் முக்கிய மூளையாக இருந்தவர் ஜனாதிபதி கோதாபயவுக்கு மிகவும் வேண்டிய ஒருவர். இறுதிப் போரை முடித்துவைப்பதற்கு முன்னர் விடுதலைப்புலிகளை நிலை தளம்பச் செய்த ‘ஆழ ஊடுருவும் அணியின்’ திட்டமிடும் பணியில் இருந்தவர். மூன்று மொழிகளிலும் மிகவும் சரளமாகப் பேசக்கூடிய அவர் விடுதலைப் புலிகளது பல இராணுவ இரகசியங்களை அகழ்ந்தெடுப்பதில் வல்லவராக இருந்தவர். போர் முடிந்த கையோடு அவருக்கு பதவி உயர்வுகள் கிடைத்தன. 2017-2019 காலப்பகுதியில் கோலாலம்பூரிலிருந்த இலங்கைத் தூதுவரகத்தில் பாதுகாப்பு இணைப்பதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
‘சோனிக் சோனிக்’ திட்டத்தின் சூத்திரதாரி இவராக இருக்கலாம் என்பதே, பாராளுமன்றத்தை இப்போது அதிர வைத்துக்கொண்டிருக்கும் ஹரின் மற்றும் மனுஷா ஆகியோர் கருதுவதும், ஆனால் சொல்ல மறுப்பதும்.
இதில் இன்னுமொரு விடயம், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிந்தும் தெரியாமலும் இத் திட்டத்தில் பங்காளியாக இருந்தார். பணம், பதவி, புகழ் போன்றவை இவரை இலகுவாக உசுப்பேத்தக் கூடியவை. சர்வ வல்லமை பொதிந்த அவரது பதவியைப் பாவித்து இந்த ‘சோனிக் சோனிக்’ தமது காரியங்களைச் சாதித்திருக்கிறது. இதே காலகட்டத்தில், கோதாபயவுக்கு மிக நெருக்கமான, முன்னாள் கொழும்பு மேயரான ஏ.ஜே.எம். முசாமில் என்பவரை சிறிசேன, அப்போதைய மலேசிய தூதுவராக நியமித்திருந்தார். அங்கிருந்து பணி புரிந்தவர்தான் நமது ‘சோனிக் சோனிக்’ நாயகன். காகமும் பனம்பழமும் எப்படி காலநேரங்களை ஒருங்கிணைத்துக்கொண்டன என்பது மர்மம் தான்.
*****
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களுடன் இலங்கை புலனாய்வுப் பிரிவிற்கு தொடர்புண்டு என்பது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஊடகங்கள், இதர பல அரசியல்வாதிகள் மத்தியில் பல காலமாகக் ‘கிசு கிசு’க்கப்பட்டு வந்த ஒன்று. சர்வதேச புலனாய்வு நிறுவனங்கள் ஆதாரங்களோடு வைத்திருக்கும் உண்மையை வெளிப்படுத்தும் துணிச்சல் இவர்களுக்கு இப்போதும் இல்லை. நல்லாட்சி ஆட்சியில் இதற்கான வெளியொன்று கிடைத்தபோது சில துணிச்சலான பொலிஸ் அதிகாரிகள் இவர்களை அடையாளம் கண்டு நீதிக்கு முன் கொண்டுவரப் பகீரத முயற்சிகளை எடுத்தார்கள். ஆனால் ரணில்-சிறிசேன குழு நீதியையும், நாட்டையும், மக்களையும், நீதிக்காகப் போராடும் தமது அதிகாரிகளையும் பாதுகாக்காமல், அவர்களது எதிரிகளான ராஜபக்சக்களையே பாதுகாத்தது. அதன் பொருட்டு ஷானி அபயசேகர உட்படப் பல அதிகாரிகளைக் களப்பலி கொடுத்தது. முதுகெலும்பற்ற இவர்களை நம்பி சர்வதேசங்களும் களமிறங்கத் தயாராக இருக்கவில்லை. ரணில் ஆட்சி இலங்கையைச் சர்வதேசங்களுக்கு விற்கப்போகிறது என்ற உடுக்குகளை ராஜபக்சக்களுக்காகப் பலர் அடித்தார்கள். அவர்களில் புத்த மகா சபைகளும், வீரவன்சக்களும், ஜே.வி.பிக்களும், தொழிற்சங்கங்களும் அடக்கம். அதை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் முதுகெலும்புள்ள மாற்று அணியினர் இல்லாமற் போனது ராஜபக்சக்களுக்கு வசதியாகப் போய்விட்டது.
இக் காரணங்களினால், ‘சோனிக் சோனிக்’ குழுவினரது ‘திரீமா’ மூலமான தொடர்பாடல்களை அறிந்து வைத்திருந்த அமெரிக்க எஃப்.பி.ஐ., மற்றும் இந்திய உளவு நிறுவனம் ஆகியன தகவலை மட்டும் கொடுத்துவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டன. இந்த முதுகெலும்பற்ற இரண்டு பிராணிகளும் தமக்குள் இருந்த ‘பிச்சுப் பிடுங்கல்’ களினால் கடுமையாக உழைத்த பொலிஸ் அதிகாரிகளையே அடித்து இருத்திவிட்டனர். விளைவு குண்டுகளின் வெடிப்பு.
சாஹ்ரான் II
இதற்கிடையில் ‘சோனிக் சோனிக்’ திட்டத்தின் இரண்டாம், மூன்றாம் படிநிலைத் தலவர்களில் ஒருவராக இருந்தவர் ‘இரண்டாம் சாஹ்ரான்’ அல்லது ‘சின்ன சாஹ்ரான்’. மாத்தளையிலிருந்த இவரோடு மலேசியாவிலிருந்த புலனாய்வு அதிகாரி ஒருவர் தொடர்புகளைப் பேணிவந்தமை பற்றிய தகவல்களை ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார ஏற்கெனவே சபையில் எழுப்பியிருந்தார். இந்த அதிகாரி யாரென்பதை ஹரின் ஃபெர்ணாண்டோவின் நேற்றய ‘குண்டு’ அதை -கிட்டத்தட்ட – வெளிக்கொணர்ந்து விட்டது. அதாவது பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவின் கீழ் இயங்கிய எஸ்.ஐ.எஸ். (State Intelligence Services (SIS)) பிரிவின் தலைவர் மேஜர் ஜெனெரல் சுரேஷ் சாலே என்பவரே மலேசியாவில் இருந்த புலனாய்வுப் பிரிவின் தலைவர் என ஹரின் ஃபெர்ணாண்டோ மறைமுகமாகத் தெரிவித்திருந்தார். (சுரேஷ் சாலேயின் பூர்விகம் மலே என்பதும் இன்னுமொரு கொசிறு).
‘மாத்தளை சாஹரான்’, அல்லது ‘சின்ன சாஹ்ரான்’ எனப் பல பெயர்களிலும் அழைக்கப்பட்ட இரண்டாம் சாஹ்ரான் புலனாய்வுப் பிரிவுடனும், குண்டுதாரிகளுடனும் மேற்கொண்ட தொடர்புகளையே அமெரிக்க உளவுநிறுவனம் ஒட்டுக்கேட்டிருந்தது. இத் தொடர்பாடல்களிலேயே ‘சோனிக் சோனிக்’ என்ற வார்த்தை பாவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஜனாதிபதி விசாரணைக்குழு சின்ன சாஹ்ரானிடமிருந்து எந்தவித வாக்குமூலங்களையும் பெறவில்லை.
அத்தோடு, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த மேஜர் ஜெனெரல் சுரேஷ் சாலே, கோதாபய ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் பொலிஸ் திணைக்களத்தின் குற்ற விசாரணைத் திணைக்களத்தின் (CID) – தற்போது SIS – தலைவராக்கப் படுகிறார். இராணுவத்தினர் ஒருவரைப் பொலிஸ் திணைக்களமொன்றுக்குத் தலைவராக்குவது வழமையல்ல என்பதையும், ஹரின் ஃபெர்ணாண்டோ சபையில் சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகளுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தில் 676 பேர் கைது செய்யப்பட்டும், 200 பேர் சிறைக்கனுப்பப்பட்டும், 66 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டும், 408 பேர் பிணையில் அனுப்பப்பட்டுமுள்ளனர். இவர்களுள் சிலரைக் குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் அரசாங்கம் இனம்கண்டு அவர்கள் மீது குற்றத்தைப் பதிசெய்யவேண்டுமென்று அரசாங்கம் முயல்கிறது. இவர்களில் ஓரிருவரை சகலகலா வல்லவர் சரத் வீரசேகரா ஏற்கெனவே அறிவித்துவிட்டார். இந்த 676 பேர்களில் அவர்களும் அடங்குவர். சூத்திரதாரிகள் யார் என்பதை முதலில் சட்டமா அதிபர்தான் அறிவிப்பது வழக்கம். ஆனால் அமைச்சர் வீரசேகாரா அவர்கள் யாரென்பதைத் தன்பாட்டுக்குத் தீர்மானித்து விட்டர். இத்தனைக்கும் அவர்கள் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படவோ அல்லது ஜனாதிபதி ஆணைகுழுவில் சாட்சியமளிக்கக் கொண்டுவரப்பட்டதோ இல்லை. இவர்களையே குற்றவாளிகளெனப் பிரகடனப்படுத்தும்படி மேஜர் ஜெனெரல் சுரேஷ் சாலே சட்டமா அதிபர் தப்புல டெலிவீரவின் அலுவலகத்தில் தவம் கிடக்கிறார்.
இப்பின்னணியில்தான் “குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரி யாரென்று கண்டுபிடிக்க விரும்புகிறீர்களா. இவர் தான் அவர்” எனப் பெயர் சொல்லாமல் கூறுகிறார் ஹரின் ஃபெர்ணாண்டோ.
ஐசிஸ்
குண்டு வெடிப்புக்களுக்கும் மலேசியாவுக்கும் தொடர்புகள் இருப்பது போன்ற கிசு கிசுக்கள் பாராளுமன்றத்தில் அவ்வப்போது அனுரகுமார திசநாயக்கா போன்றவர்களால் முன்வைக்கப்பட்டாலும் ஹரின், மனுசா போன்றவர்களது போல் அவரது குரலுக்கு பலம் இருந்ததில்லை. அவர் ஒரு தலைமை வாத்தியார் மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம். அவரது கிசு கிசுக்களில் முக்கியமான ஒன்று இது.
குண்டு வெடிப்புகள் முடிந்ததும் அவற்றுக்கும் வெளிநாடுகளிலுள்ள ஐசிஸ் அமைப்புக்கும் தொடர்புள்ளது எனக் காட்டவேண்டியது ‘சோனிக் சோனிக்’ குழுவின் நோக்கம். இதற்காக ஐசிஸ் தலைவர் அல் பக்டாடியிடமிருந்து நடந்த சம்பவங்களுக்கு உரிமை கோருவது போன்ற ஒரு தகவலைப் பெற்றாக வேண்டும். இச் செய்தி உத்தியோகபூர்வமாக ஏதோ ஒரு வழியில் சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படவேண்டும். இதற்காக மலேசிய கைத்தொலைபேசி ஒன்றின் இலக்கத்திற்கு ‘சர்வதேச பயங்கரவாத உறுப்பினர் ஒருவரிடமிருந்து’ உறுதி செய்யும் ஒரு செய்தி கிடைக்கிறது. இந்த தொலைபேசி இலக்கம் யாருடையது என அனுர குமார பாராளுமன்றத்தில் வினவியிருந்தார். அதற்கு மேல் அவர் அகழ்ந்தெடுக்கவில்லை.
ஷானி அபயசேகரா
நல்லாட்சி அரசாங்கத்தின்போது குற்ற விசாரணைத் திணைக்களத்தின் (CID) தலைவராக இருந்தவர் ஷானி அபயசேகரா. ரணில்-சிறிசேன கூட்டணி, ஓடும் ரயிலுக்குமுன் தள்ளிவிட்ட பல நேர்மையான மனிதர்களுள் ஷானியும் ஒருவர்.
‘சோனிக் சோனிக்’ திட்டத்த்தின் கையாளாக குற்றப் பிரிவுத் திணைக்களத்தில் பணியாற்றிய ஒரு அதிகாரியின் கணனித் தொடர்பு முகவரியை (IP Address) ஷானி கிண்டியெடுத்துவிட்டார். அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குத் தயார்படுத்தப்படும்போது திடீரென இராணுவ புலனாய்வுப் பிரிவு (Directorate of Military Intelligence (DMI)) அவரைத் தாம் விசாரணை செய்யப்போவதாகப் பறித்துக்கொண்டு சென்றுவிட்டது. ஷானியால் அவ்விசாரணையை மேற்கொண்டு செய்ய முடியவில்லை.
ஆனாலும் கணனி முகவரி மூலம் அவர் பெற்றிருந்த தகவல்களின்படி, சந்தேக நபரான இப் புலனாய்வு அதிகாரி, குண்டுவெடிப்புகளின் தொடர்புடைய ஒருவருடன் தொடர்புகொண்டிருந்த விடயம் தெரியவந்திருந்தது. இவ் விடயங்களைக் கண்டுபிடித்தவர் குற்றவிசாரணைப் பிரிவின் டிஜிட்டல் தடயவியல் ஆய்வுகூடத்தின் பணிப்பாளரும் தலைமை இன்ஸ்பெக்டருமான சம்பத் குமார சேனாரத்ன. சந்தேக நபரான, குறிக்கப்பட்ட புலனாய்வு அதிகாரியின் குண்டுதாரியுடனான தொடர்பு முதல், இராணுவ புலனாய்வுப் பிரிவு அவரைப் பறித்துக்கொண்டு போனதுவரையான தகவலகள் அனைத்தையும் சேனாரத்ன ஜனாதிபதி விசாரணைப் பிரிவின் முன் வாக்குமூலமாகக் கொடுத்திருந்தார். ஆனால் அது எதுவும் விசாரணையின் இறுதி அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.
ஜனாதிபதி விசாரணை ஆணையம்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகள மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி ஜானக் டி சில்வா தலைமையிலான விசாரணை ஆணையம் ஒன்றை மைத்திரிபால சிறிசேனா அமைத்திருந்தார். 9/11 விசாரணை ஆணையத்துக்கு இணையான இதற்கு பலதரப்பட்ட அதிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தன. அப்படியிருந்தும், சேனாரத்னவின் வாக்குமூலத்தை அறிக்கையிலிருந்து நீக்கியமையும், அவரது வாக்குமூலத்தின் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தாமையும் இவ்வாணையத்தின் நம்பகத்தன்மை மீது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
வாக்குமூலங்கள்
சாஹ்ரானின் மனைவி: இக் குண்டுத் தாக்குதல்களுக்கான முக்கிய சாட்சியாக குண்டுதாரியும் தலைவருமான சாஹ்ரானின் மனைவி இருந்தார். அவரது ஒளிப்பதிவு செய்யப்பட்ட சாட்சியம் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. அவரது சாட்சியத்தின்படி அவரை இயக்கியது அரச பாதுகாப்புப் பிரிவென்றும், சாஹ்ரானது பணத் தேவைகளையும் அதுவே பார்த்துக்கொண்டது எனவும் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர: தாஜ் சமுத்ரா ஓட்டலில் தாக்குதல்களை மேற்கொண்ட குழுவில் தப்பிய ஒரே ஒருவர், பின்னர் பொலிஸ் தேடுதலின்போது, தெஹிவளையில் தற்கொலை அங்கியை வெடித்துத் தற்கொலை செய்துகொண்டார். தாக்குதல்களை மேற்கொள்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் புலனாய்வுப் பிரிவுடன் அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டிருக்கிறார் என்ற விடயம் புஜித் ஜயசுந்தரவினால் ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணை ஆணையம் மேற்கொண்டு விசாரணைகள் எதையும் மேற்கொள்ளவில்லை.
சர்வ வல்லமை பொருந்திய இந்த ஆணையம் இத் தொலைபேசி அழைப்பு தொடர்பான பதிவுகளை ஏன் பெற்றுக்கொள்ளவில்லை? இது பற்றிய தகவல்களை புஜித் ஜயசுந்தரா கொடுத்த பின்னரும் சம்பந்தப்பட்ட புலனாய்வ அதிகாரி யார் என்பதை விசாரிக்கவோ அவரிடமிருந்து வாக்குமூலத்தைப் பெறவோ ஆணையம் ஏன் தவறியது?. இத் தொலைபேசி அழைப்பு தொடர்பாக ஆணையம் புலனாய்வு மேலதிகாரிகளுடன் தொடர்புகொண்டு விசாரித்ததா? ஆன்னால் புஜித் ஜயசுந்தரவின் வாக்குமூலம் தொடர்பாக மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் இணைக்கப்படவில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
பாராளுமன்றம்
விராரணை ஆணையத்தின் அறிக்கையில் மறைக்கப்பட்ட பல விடயங்களைப் பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கும் நிரந்தர பதிவுகளாகப் பேணப்படுவதற்கும் சிறந்த இடம் பாராளுமன்றம். அதையே தான் ஹரின் ஃபெர்ணாண்டோ, அனுரகுமார, மனுஷா நாணயக்கார ஆகியோர் செய்கிறார்கள். ராஜபக்ச பரம்பரையினருக்கு ஆட்சி வாசல்கள் நிரந்தரமாகவே மூடப்படும் சாத்தியமும் இருக்கிறது. எனவே இயலுமானவரை ஹரின் போன்றவர்களைத் தடுத்து நிறுத்த ராஜபக்சக்களும் அவர்களது பாராளுமன்ற அடியாட்களும் சபையைக் குழப்புவதன் மூலம் முயற்சித்தார்கள். ஹரின் போன்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்தார்கள். அப்படியிருந்தும் பெரும்பாலான விடயங்களை இம் மூவரும் வெளிக்கொணர்ந்து விட்டார்கள். எல்லாமே பாராளுமன்றப் பதிவேட்டில் தற்போது உள்ளது.
“உயிர்த்த ஞாயிறு சம்பவங்களின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்துவிட்டோம் என அமைச்சர் சரத் வீரசேகரா போன்றவர்கள் பிரகடனம் செய்கிறார்கள். மெளலவி நோஃபேர் மற்றும் ரஷீத் அக்பர் ஆகியோரது பெயர்களை சூத்திரதாரிகளென அவர் தெரிவிக்கிறார். ஆனால் மெளலவி நோஃபேரை விசாரணை ஆணையத்தின் முன்னால் வாக்குமூலமே அளிக்கவில்லை. அப்படியிருக்க அவர் எப்படிக் குற்றவாளியாகக் காணப்பட முடியும்?
குற்ற விசாரணைப் பிரிவில் நான்கு பணிப்பாளர்களும், பல அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டனர். இவர்கள் எல்லோரும் எங்கே? ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று நான்கு நாட்களில் ஷானி அபயசேகரா இடம் மாற்றப்பட்டு ஒரு பியோன் வேலையில் அமர்த்தப்பட்டார். பின்னர் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். குண்டு வெடிப்பை விசாரித்த முதன்மை அதிகாரி சிறையில், இதர அதிகாரிகள் இடமாற்றம். அப்படியானால் அரசாங்கம் எதையோ மறைக்க முயல்கிறதா?
நான் கூறும் விடயங்களுக்கு நீங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பீர்களானால், உண்மை வெளிவருவதை நீங்கள் எதிர்க்கிறீர்கள் எனவே கருத வேண்டும்” எனக் கேள்வியெழுப்பினார் ஃபெர்ணாண்டோ.
குண்டுதாரிகள் இரண்டு குழுக்களாக செயற்பட்டனர்
ஹரின் ஃபெர்ணாண்டோ போட்ட குண்டு வெடித்து சலசலப்புகள் ஓய்வதற்கு முன்னர் சமாகி ஜன பலவேகயவின் மற்றுமொரு பா.உ. மனுஷா நாணயக்கார தனது குண்டையும் போட்டார்.
“‘சோனிக் சோனிக்’ குழுவிற்கும் இதர வெளிநாட்டு ‘இயக்க காரர்களுக்கும்’ இடையில் நடைபெற்ற தொடர்பாடல்களை உருவியெடுத்த அமெரிக்க உளவு நிறுவனத்தின் பதிவுகளில் ‘The Boss’ பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. தாக்குதல்களை நடத்துவதில் தாமதம் ஏற்பட்ட போது “‘Boss’ அப்செட் ஆகிறார் எனவும் விரைவில் அவற்றை நிறைவேற்றும்படியும்” பதிவொன்றுள்ளதாகவும் அது யாராக இருக்கலாம்?
சாஹ்ரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னர் வாக்குமூலமளிக்கையில், அங்கு சமூகமளித்திருந்த அத்தனை ஊடகவியலாளர்களும் வெளியே அனுப்பப்பட்டிருந்தனர். அவரது வாக்குமூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. அந்த வாக்குமூலத்தில் என்ன இருந்தது? அதைப்பற்றி எத்தனையோ கேள்விகளுள்ளன.
‘திரீமா’ வலைத் தொடர்பு தகவல்களின்படி, குண்டுதாரிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து பாணந்துறையில் ஒரு வீட்டிலும், ஜா எலவில் ஒரு வீட்டிலும் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். குறிக்கப்பட்ட கால அட்டவணையின்படி தாக்குதல்கள் நடைபெறுவதற்குத் தாமதம் ஏற்பட்டபோது “தாமதம் குறித்து ‘பொஸ்ஸுக்கு’ மகிழ்ச்சியில்லை” என உரையாடல்கள் நடைபெற்றதாக திரீமா தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது அரசாங்கம் மக்களுக்குச் சொல்ல வேண்டியது, ‘யார் இந்த ‘பொஸ்’ என்பதனையே.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களினது கண்ணீர் நாட்டில் ஏற்படுத்திய அதிர்ச்சி அலையில் அள்ளுப்பட்டு ஆட்சிக்கு வந்த இலங்கை மக்கள் முன்னணிக் கட்சிக்கு, இத் தாக்குதல்களின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற விடயத்தை அறிந்து மக்களுக்குத் தெரிவிக்கும் கடப்பாடுள்ளது” எனத் தெரிவித்தார் மனுஷா நாணயக்கார.
பாராளுமன்றம் அதிர்ந்து கொண்டிருக்கிறது. போகிற போக்கில் மியன்மாரில் (பர்மா) போல இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
Related posts:
- உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் – சூத்திரதாரிகளை அம்பலமாக்கும் பேராயர் மல்கம் ரஞ்சித்
- பேராயர் மல்கம் ரஞ்சித் குத்துக்கரணம் – உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பில்லையாம்
- உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு | சூத்திரதாரிகள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவர் – ஹரின் ஃபெர்ணாண்டோ
- உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் பின்னால் ஒரு பாரிய சதித்திட்டம் இருக்கிறது, நெளஃபர் மெளலவி சூத்திரதாரி அல்ல – சட்டமா அதிபர்