News & AnalysisSri Lanka

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு | சூத்திரதாரிகள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவர் – ஹரின் ஃபெர்ணாண்டோ

2019 இல் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னாலிருந்தவர்கள் யாரென்பது ஷானி அபயசேகராவுகுத் தெரியும் எனவும் குண்டுதாரிகளுக்கும் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவருக்குமிடையில் இருந்த தொடர்புகளை கணனியின் தொடர்பு முகவரி (IP address) மூலம் அபயசேகரா அறிந்திருந்தார் எனவும், சமாகி ஜன பலவேகய கட்சி பா.உ. ஹரின் ஃபெர்ணாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இக்குறிப்பிட்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரி பின்னர் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதற்குத் த்யாராகவிருந்த வேளை இரானுவ புலனாய்வு அதிகாரிகளின் கட்டளையின் பேரில் இராணுவத்தின் தடுப்புக் காவலுக்கு மாற்றப்பட்டு விட்டார் எனவும் ஃபெர்ணாண்டோ தெரிவித்தார்.

அது மட்டுமல்லாது, இவ்விடயங்கள் எல்லாமே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னர் பகிரப்பட்டிருந்தன எனவும் ஆனால் இறுதி அறிக்கையில் அவை நீக்கப்பட்டுவிட்டன எனவும் ஃபெர்ணாண்டோ சபையில் தெரிவித்தார்.

இக் குண்டுத்தாக்குதல்கள் பற்றி விசாரணைகளை மேற்கொண்ட அனைத்து புலனாய்வு அதிகாரிகளும் இடமாற்றுப்பட்டு விட்டனர். ஷானி அபயசேகரா இடம் மாற்றப்பட்டு, நவம்பர் ஜனாதிபதி தேர்தலின் பின்னர்கைது செய்யப்பட்டார்.

ஹரிந் ஃபெர்ணாண்டோவின் இந்த தகவல்களினால் எரிச்சலடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் எனவும், பாராளுமன்றத்தையும், பொது மக்களையும் அவர் குழப்ப முயற்சிக்கிறார் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

தான் ஆதாரங்களோடும், பொறுப்புடனும் தான் பேசுகிறேன் எனவும் 2019 குண்டுத் தாக்குதல்கள் பற்றிய உண்மை விரைவில் மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் ஹரின் ஃபெர்ணாண்டோ தெரிவித்தார்.