News & AnalysisSri Lanka

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் – சூத்திரதாரிகளை அம்பலமாக்கும் பேராயர் மல்கம் ரஞ்சித்

“2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் இஸ்லாமிய மத தீவிரவாதிகளைக் கருவியாகப் பாவித்து அரசியல்வாதிகளால் ஏவப்பட்டவை. இஸ்லாமிய தீவிரவாதத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை” என பேராயர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

“ஏப்ரல் 21 அன்று மூன்று தேவலயங்களிலும், ஓட்டல்களிலும் குண்டுகளை வெடித்த தற்கொலைதாரிகள், அரசியல்வாதிகளால் தமது தேவைகளை முன்னெடுப்பதற்காக ஏவப்பட்ட வெறும் கருவிகள் மட்டுமே. எங்கள் சகோதர்கள் இஸ்லாமிய மத தீவிரவாதிகளால் கொல்லப்படவில்லை. சில அரசியல்வாதிகள் தமது அதிகாரத்தை மீட்டெடுக்க மேற்கொண்ட செயற்பாடுகளில் ஒன்றே அது” என பொரளை தகனக்கிரியைகள் செய்யுமிடத்தில் , இறந்தவர்களின் நினைவாக நிறுவப்பட்ட நினைவுச் சின்னத்தைத் திறந்துவைத்துப் பேசும்போது பேராயர் அதிர்ச்சி தரும் இத் தகவலை வெளியிட்டார்.

இந்த அரசியல்வாதிகளது பெயர்களை அவர் வெளியிடாவிடினும், 2015 இல் இழந்த ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ராஜபக்ச சகோதரர்கள் இக் குண்டுவெடிப்பு சம்பவங்களை அரங்கேற்றினார்கள் எனப் பல தரப்புகளாலும் முணுமுணுக்கப்பட்டு வருகின்றது.

ஸ்திரமற்ற நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்போது அதை வீழ்த்துவதற்காகாப்போது எதிர்க்கட்சியிலிருந்த, தற்போதைய ஆளும்கட்சி அரசியல்வாதிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குண்டுவெடிப்புக்களை ஆதரித்தார்கள் என தற்போதைய எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்து இரண்டு நாட்களில் கோதாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக அறிவிக்கிறார். அப்போது, ‘நாட்டின் தேசிய பாதுகாப்பை மீளவும் நிலைநிறுத்துவேன்’ என அப்போது அவர் முழக்கமிட்டிருந்தார். பின்னர் அதுவே அவரது தேர்தல் சுலோகமாகவும் தொடர்ந்தது.

தற்கொலைக் குண்டுதாரிகளின் தலைவர் சாஹ்ரான் ஹாஷிம் , ராஜபக்ச ஆடிச்யின்போது, இலங்கை புலனாய்வுச் சேவைகள் திணைக்களத்தினால் சம்பளம் கொடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்ட ஒருவர் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

ஏப்ரல் குண்டுபெடிப்புகளின்போது கொல்லப்பட்ட 279 பேர்களின் நினைவாகவும், பொரளை மற்றும் மாதம்பிட்டி தகனக்கிரிய நிலையங்களில் நிறுவப்பட்ட இரண்டு நினைவுச் சின்னங்களை பேராயர் மல்கம் ரஞ்சித், ஞாயிறன்று திறந்து வைத்தார்.

இச்சம்பவங்களின்போது உயிரிழந்தவர்களுக்காவும், காயமடந்தவர்களுக்காகவும் நீதி நிலைநாட்டுப்படவேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார். இக் குண்டுவெடிப்புக்களைத் தடுக்கவில்லை என்பதற்காக முந்தய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் முன்னர் பகிரங்கமாக அறிக்கயொந்றை விட்டிருந்தார்.

இக் குண்டுவெடிப்புகள் நடைபெறப் போகின்றன என இந்திய உளவு நிறுவனம் 17 நாட்களுக்கு முன்னரே தகவல்களைப் பரிமாறியிருந்தும் அப்போதைய ஜனாதிபதி சிறிசேன நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தார் எனவும் அதற்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக் குழு பரிந்துரைத்திருந்தது.

இக் குண்டுவெடிப்பு தொடர்பாக 200 பேருக்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.