உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு | துலங்காத மர்மங்கள்
நாட்டின் அதி பலமிக்க ஒருவர் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணகளைப் பலவீனமாக்குகிறார்
ஆர்ச் பிஷப் கார்டினல் மல்கம் ரஞ்சித்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பாக ஏபரல் மாதம் 7 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். முன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீனும் அந்த ஏழு பேரில் ஒருவர். ஹொட்டேல் ஷங்கிரிலாவில் வெடித்த தற்கொலைக் குண்டுதாரியான மொஹாம்மெட் இப்ராஹிம் இன்ஷாஃபுடன் தொடர்புகளைப் பேணியிருந்தார்கள் என இவர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
குற்ற விசாரணைப் பொலிசார் இக் கைதுகளுக்குக் காட்டும் ஆதாரம், இன்ஷாஃபிற்கும் இவர்களுக்குமிடையே நடந்ததாகக் கருதப்படும் தொலைபேசி உரையாடல்கள். ஆனால் அவ்வுரையாடல்களின் ஒலிப்பதிவுகள் என்று எதுவும் முன்வைக்கப்படவில்லை. வெறும், கைத்தொலைபேசியில் காட்டிய இலக்கங்களும், திகதி, நேரப்பதிவுகளும் மட்டுமே.
கீழே அப் பதிவுகள் தரப்பட்டுள்ளன:
(சந்தேகநபர் பெயர் / இன்ஷாஃபிற்கு வந்த அழைப்புகளின் எண்ணிக்கை / இன்ஷாஃபிடமிருந்து வெளியில் போன அழைப்புக்களின் எண்ணிக்கை)
மொஹாமெட் அனிஸ் / 5 / 0
மொஹாமெட் அமனுல்லா / 0 / 0
மொஹாமெட் முஹீன் /0 / 0
மொஹாமெட் அஸ்மி / 0 / 0
இஸ்மாயில் ஹாஜியார் / 260 / 311
மொஹாமெட் றியாஸ் / 5 / 0
ஹியாஸ் ஹிஸ்புல்லா / 142 / 48
மேற்கண்ட தரவுகளிலிருந்து ஹாஜியார் இன்ஷாஃபுடன் அதிக பட்சம் 571 தடவைகள் (260 + 311), தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்.
யாரிந்த ஹாஜியார்?
அது பெரிய இடத்துச் சங்கதி. அவரும் கைதுசெய்யப்பட்டு நான்கு மணித்தியாலங்களில் விடுதலையாகிவிட்டார். ஏனையவர்களைப் போல வாரக்கணக்கில் தடுப்புக்காவலில் வைக்கப்படவில்லை. அதி மேதகு கெளரவ கோதாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் இஸ்மாயில் ஹாஜியார் விடுதலை செய்யப்படுகிறார். காரணம் பணம். கோதாபயவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு 2,000 மில்லியன் ரூபாய்களை ஹாஜியார் கொடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சிறிசேனாக்களின் தொடர்பு
ஷாந்த பண்டார, முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் பொதுசனத் தொடர்பு அதிகாரி. இன்ஷாஃப் கொல்லப்படுவதற்கு முன் பல தடவைகள் பண்டார இன்ஷாஃபுடன் பேசியிருக்கிறார். சிறிசேனவின் சகோதரரும் (சிறீலங்கா ரெலிகொம் பணிப்பாளர்) இன்ஷாஃபுடன் பல தடவைகள் பேசியிருக்கிறார். வெல்லம்பிட்டியவிலுள்ள இன்ஷாஃபின் செப்பு உலோகத் தொழிற்சாலைக்கு செப்பு கம்பிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஷாந்த பண்டார கடிதம் கொடுத்து உதவியிருக்கிறார்.
இப் பின்னணியில், ஆர்ச் பிஷப் கார்டினல் மல்கம் ரஞ்சித் கூறும், விசாரணைகளைப் பலவீனமாக்கும் அந்த அதிபலமிக்கவர் யாரென்று சொல்ல வேண்டியதில்லை. கார்டினலுக்கும் அதை வெளிப்படையாகச் சொல்லத் துணிச்சலில்லை.
பாம்பிருக்கும் புற்றுக்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன.
-கருப்புக் கண்ணாடி