உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் | சர்வதேச விசாரணை தேவை – சுமந்திரன்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி சாஹ்ரான் ஹாசிம் அல்ல - சுமந்திரன்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னாலுள்ள சூத்திரதாரி சாஹ்ரான் ஹாசிம் என்பதைக் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்தே ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி விசார்ணை ஆணையத்தின் அறிக்கை தொடர்பாகப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது த.தே.கூ. பா.உ. எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

“நல்லது செய்பவர்களை வாழ்த்துவதற்கும் கெட்டது செய்பவர்களைத் தண்டிப்பதற்குமே அரசாங்கங்கள் தெரிவுசெய்யப்படுகின்றன. ஆனால், தொடர்ச்சியாக வரும் அரசாங்கங்கள் அதைச் செய்யத் தவறிவிட்டன. இன்று காலை இச்சபையில் நடைபெற்றதைப்போல குற்றச்சாட்டுகளை வீசுவதில் எனக்கு உவப்பில்லை. அது இத் தாக்குதல்களின்போது கொல்லப்பட்டவர்களௌம், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எந்தவித நீதியையும் வழங்கப்போவதில்லை” என அவர் தெரிவித்தார்.

“இத் தாக்குதல்களுகளின் சூத்திரதாரி சாக்ரான் ஹாசிமே என மஹிந்தானந்த அளுத்கமே உட்படப் பல அமைச்சர்கள் சபையில் கூறியிருந்தார்கள், ஆனல் அதை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆர்ச்பிஷப் மல்கம் ரஞ்சித் அவர்கள்கூட அதை ஏற்றுக்கொள்ளவில்லை” என சுமந்திரன் தனது பேச்சின்போது தெரிவித்தார்.

இவ்வறிக்கை முழுமையானது எனக் கூறப்பட்டாலும், குண்டுத்தாக்குதல்களை யார் ஒருங்கிணைத்தார்கள், எவருடைய நிகழ்ச்சிநிரலில் இவை மேற்கொள்ளப்பட்டவை என்பது இவ்வறிக்கையில் குறிப்பிடப்படவில்லை எனவும், சர்வதேச விசாரணை ஒன்று வேண்டும் என மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்குத் தான் ஆதரவளைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதே வேளை, குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி நெளஃபார் மெளலவி அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரா நேற்று (10) தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.