‘உயிருள்ளவரை நான் அரசியலில் இருப்பேன்’ – கமல் ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பல மூத்த தலைவர்கள் விலகிக் கொண்டதை அடுத்து அக் கட்சியின் தலைவரும், ஸ்தாபகருமான நடிகர் கமல் ஹாசன் காணொளி ஒன்றின் மூலம் தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருக்கிறார்.
அதில் தனது உயிர் இருக்கும்வரை தான் அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவேன் எனவும், கட்சி விரைவில் பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
கட்சியில் ஜனநாயகமில்லை, சர்வாதிகாரம் கோலோச்சுகிறது எனக் கட்சியிலிருந்து விலகியவர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு “அவர்கள் யாத்திரிகர்கள், நாடோடிகள்” எனச் சாடிய அவர், அவர்கள் திரும்பி வந்தால் கட்சி அவர்களை ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார். “வெற்றிக்காக, தோல்விகளை ஆராய்வதும், பாடங்களைக் கற்றுக்கொள்வதும் கட்சியின் வரலாறாக இருந்து வருகிறது. முன்னர் அறியப்படாதவர்களுக்கும், பிரபலமற்றவர்களுக்கும் கட்சியில் முன்னணிப் பதவிகள் கொடுக்கப்படுவதை சர்வாதிகாரம் எனச் சிலர் கூறுகிறார்கள். அதே வேளை கட்சியில் இணையும்போது அவரவர் திறமைகளுக்கேற்ப பதவிகள் வழங்கப்பட்டபோது ‘இது ஜனநாயகத்தின் உச்சி’ எனப் புகழ்ந்திருந்தார்கள். ” என அக் காணொளியில் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் தொகுதிப் பங்கீடு செய்யும் விடயத்தில் கமல் ஹாசன் தன்னிச்சையாக நடந்துகொண்டார் எனப் பல விமர்சனங்கள் எழுந்திருந்தன. இவ்விடயத்தில் தான் வெளிப்படைத்தன்மையாக நடந்துகொண்டிருந்ததாகவும், செயற்பாட்டாளர்களுக்கு ஜனநாயக முறையில் பணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன எனவும் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தோல்வியைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் எம்.முருகாநந்தம், உதவி தலைவர் ஆர்.மகேந்திரன், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு, மாநிலச் செயலாளர் பத்ம பிரியா ஆகியோர் கட்சியிலிருந்து விலகியுள்ளார்கள். கட்சித் தலைவர் கமல் ஹாசன் தனது கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் பாஜக கட்சியின் பிரதிநிதி வானதி சிறீனிவாசநால் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.
தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நடிகர் சரத் குமாரின் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது.
“என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்” pic.twitter.com/RwAa9ykS71
— Kamal Haasan (@ikamalhaasan) May 24, 2021
Related posts:
- தமிழ் மொழிக்குத் தனியான அமைச்சு வேண்டும் – கமல் ஹாசன் முதலமைச்சருக்குக் கடிதம்
- இந்தியன் 2 | லைகா, சங்கர் பிணக்கைப் பேசித் தீர்த்துக்கொள்ளும்படி உயர்நீதிமன்றம் உத்தரவு
- தமிழ்நாடு | முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு சிவகுமார், சூர்யா, கார்த்தி 1 கோடி ரூ. நன்கொடை
- இலங்கை, சீனாவுக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசு களமிறங்கலாம் – தமிழ்நாடு பொலிசாரரை உசார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை-‘தி இந்து’