Sports

உதைபந்தாட்ட வீரர் டியெகோ மரடோனா மரணம்!


ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த உலகின் தலைசிறந்த உதைபந்தாட்ட வீரர் டியெகோ மரடோனா இன்று மாரடைப்பால் மரணமானார். இறக்கும்போது அவருக்கு வயது 60.

அவரது மரணத்தை நினைவுகூர, மூன்று நாட்களைத் தேசிய துக்க தினங்களாக அந்நாட்டின் ஜனாதிபதி அல்பேர்ட்டோ ஃபெர்ணாண்டேஸ் அறிவித்துள்ளார்.

“நீங்கள் எங்களை இவ்வுலகின் உச்சிக்கு எடுத்துச் சென்று எங்களுக்கு அளவிலா ஆனந்தத்தைத் தந்தீர்கள்” என மரடோனாவின் மரணம் குறித்த செய்தியைத் தனது ருவீட் மூலம் ஃபெர்ணாண்டேஸ் அறிவித்திருக்கிறார்.

1986 இல் ஆர்ஜென்ரீனாவுக்காக உலகக் கிண்ணத்தை பெறுகிறார்

மூளையில் இரத்தக் கட்டி உருவாகியதற்காக இந்த மாத ஆரம்பத்தில் அவர் மூளையில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருந்தார்.

உதைபந்தாட்ட விளையாட்டில் உலகில் பல சாதனைகள் மூலம் தனக்கெனத் தனியான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தவர் மரடோனா. 1986ல் ஆர்ஜென்ரீனாவுக்கு உலக கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தவர். 2001 இல் உலக உதைபந்தாட்டுச் சங்கம் மரடோனாவை, உதைபந்தாட்ட வரலாற்றில் இரு தலைசிறந்த வீரர்களில் ஒருவர் எனக் கூறிக் கெளரவித்திருந்தது.

மரடோனா தனது 16 வயதில், 1977 ம் ஆண்டு, ஹங்கேரி நாட்டுக்கெதிராக விளையாடியதன் மூலம் சர்வதேச விளையாட்டரங்கில் காலடி எடுத்து வைத்தார். ஒய்வு பெறுவதற்கு முதல் அவர் ஸ்பெயின் நாட்டின் செவில்லா விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடிக்கொண்டிருந்தார். 1992 இல் அவரது போதை வஸ்து பாவனை தெரியவந்ததிலிருந்து அவரது பெயர் களங்கப்படத் தொடங்கியிருந்தது.



இரண்டு தசாப்தங்களுக்குத் தன் அபார திறமைகளின் மூலம் உதைபந்தாட்ட உலகை அசத்திய மரடோனா இறக்கும்போது அவரது சொத்து $ 100,000 எனப்படுகிறது. UNICEFF உள்ளிட்ட பல தர்மஸ்தாபனங்களுக்கு அவர் தாராளமாக உதவிசெய்துவந்தார் எனவும் கூறப்படுகிறது.

அவரது இழப்பு உலகம் முழுவதிலுமுள்ள உதைபந்தாட்ட வீரர்கள், ரசிகர்கள், விளையட்டுக் கழகங்கள், அரசுகள் எனப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“ஒரு குத்துச் சண்டை வீரர் வீழ்த்தப்பட்டதைப் போல நாங்கள் அதிச்சியால் உறைந்துபோயிருக்கிறோம்” என அவரது முந்நாள் விளையாட்டுக் கழகமான நாப்பொலியின் பேச்சாளர் நிக்கோலா லொம்பார்டோ தெரிவித்துள்ளார்.