உண்மை தேடும் பொறிமுறை: சுமந்திரன், ஹக்கீமிடையே முரண்பாடு
இறுதிப் போரின்போது நடைபெற்ற இனவொழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரித்து உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை உருவாக்கும் விடயத்தில் தமிழ்-முஸ்லிம் கட்சிகளிடையே கருத்து முரண்பாடு இருப்பதாக அறியப்படுகிறது.
ஐ.நா. மற்றும் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிக்க இலங்கை அரசினால் முன்வைக்கப்பட்ட தென்னாபிரிக்காவில் கையாளப்பட்டதைப் போல உண்மையைக் கண்டறியும் பொறிமுறை மீதான உரையாடலின்போது கூட்டமைப்பின் பிரதிநிதி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பிரதான எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சியின் பிரதிநிதியான ராவுஃப் ஹக்கீம் ஆகியோர் முரண்பாடான அபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளனர்.
இவ்வுண்மை தேடும் பொறிமுறையில் சர்வதேசங்களின் பங்கு அவசியம் என சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட கருத்தை மறுதலித்த ஹக்கீம், “வெளிநாட்டார் தலையீடு இருப்பின் அவர்களுள் கடும்போக்காளர்கள் புகுந்துவிடுவார்கள். அவர்கள் இங்கு வந்து முழு செயற்பாடுகளையும் குழப்பி விடுவார்கள். அவர்களில் நம்பத்தகுந்தவர்கள் என ஒருவருமில்லை. ஒவ்வொருவரும் தமது உள்நோக்கங்களுடனேயே வருவார்கள். அவர்கள் வேண்டுமானால் உதவியாளர்களாக இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் மத்தியஸ்தம் வகிப்பவர்களாக இருக்க முடியாது. இப் பேச்சுவார்த்தைகளை ஒழுங்கு செய்துதருபவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். தமது தீர்ப்புகளை வழங்குபவர்களாக அவர்கள் இங்கு வர முடியாது. இந்த உண்மையைத் தேடும் பொறிமுறை தாமாக முன்வந்து கூறப்படுமொன்று. அதில் எவர் மீதும் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
அதே வேளை இது தொடர்பாகச் சுமந்திரனின் கருத்து மாறுபாடாக இருக்கிறது. “இப்பொறிமுறை சுயாதீனமானதாக இருப்பின் அதை நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனால் நிலைமை அப்படையல்ல. குற்றம் சாட்டப்படும் அரசாங்கமே இப் பொறிமுறையைத் தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கிறது. தென்னாபிரிக்காவில் நடைபெற்றதைப் போன்ற உள்ளகப் பொறிமுறையல்ல இங்கு ஏற்பாடு செய்யப்படுவது. அங்கு பாதிக்கப்பட்ட பகுதியினர் பெரும்பான்மையாகவும் அரசாங்கத்தை அமைப்பவர்களாகவும் இருந்தார்கள். இங்கு அப்படியல்ல. உண்மையைத் தீர்மானிக்கும் பொறிமுறை முற்றிலும் சுயாதீனமானதாகவும் பக்கசார்பற்றதாகவும் இருக்கவேண்டும். காரணம் மோதல் இங்கு அரசாங்கத்துக்கும் கிளர்ச்சிக் குழுவுக்குமிடையிலானது. அதிகாரத்திலுருக்கும் ஒரு தரப்பு இப்பொறிமுறையைக் கட்டியாளும் நிலைமையில் இருத்தலாகாது. எனவே உள்ளகப் பொறிமுறை இங்கு செயற்பட முடியாது. சர்வதேச தலையீடு அவசியம்” என சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
போர்க்காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மீதான உண்மையைக் கண்டறிய நியமிக்கப்பட்ட முன்னாள் ஆணையங்களினதும் குழுக்களினதும் அறிக்கைகளைப் பரிசீலித்து அவற்றில் சர்வதேச மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளனவா எனக் கண்டறியும் பொருட்டு ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் முன்னால் சாட்சியமளித்த இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் எஸ்.ஈ.ஷோல்க் “தென்னாபிரிக்காவில் செயற்பட்டதைப் போன்ற உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையம் ஒன்று இங்கும் அவசியம் ஆனால் அது இரு தரப்பினாலும் ஏற்றுக்கொள்ளப்படுமொன்றாகவும் இருத்தல் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் அறிக்கையின்படி மார்ச் 2023 அளவில் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்று செயற்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார். (தி மோர்ணிங்)