EntertainmentIndia

உண்மைச் செய்தி – ரஜினிகாந்த் கட்சி தை 2021 இல் ஆரம்பமாகிறது!


வருகின்ற புத்தாண்டு ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு நல்ல காலத்தைக் கொண்டுவரப் போகிறது.

இந்த நல்ல செய்தியை ரஜினி நேரே குடுகுடுப்பையாக வந்து அறிவித்திருக்கிறார்; எனவே இந்தத் தடவை அதை நம்பலாம். 1990 களிலிருந்து “கட்சி ஆரம்பிப்பது பற்றி, அது பற்றி யோசிப்பது பற்றி, ரசிகர்களுடன் கலந்தாலோசித்து எப்போ அறிவிக்கலாம் என்பது பற்றி சிந்தித்து வருவது பற்றி அறிவித்து வந்தார். இப்போது அவற்றையெல்லாம் உறுதிப்படுத்துவது பற்றி இன்று (வியாழன்) ருவீட் மூலம் அறிவித்திருக்கிறார். டிசம்பர் 31 ம் திகதி இது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

“மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், வருகின்ற சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, நேர்மையான, சரியான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதியற்ற, மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும். ஆச்சரியம், அற்புதம் நிகழப் போகிறது” என அவர் தனது ருவீட் செய்தியில் தெரிவித்துள்ளார்.

புதுவருடத்தில் (2021) சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் பட்டாசுகளைக் கொழுத்தி அட்டகாசம் செய்யப் போகிறார்கள்.

இவ்வறிவிப்பு, ரஜினி மக்கள் மன்ற ரசிகர்களுக்கு தேர்தல் ஒழுங்குகளைச் செய்வதற்கு போதிய கால அவகாசத்தைக் கொடுக்கும். தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல்கள் மே 2021 இல் நடக்கவுள்ளன.திங்களன்று மூடிய அறைக்குள் நடைபெற்ற கூட்டமொன்றில் ரஜினி, மாவட்டச் செயலாளர்கள் உட்பட, ரஜினி மக்கள் மன்றத்தின் 32 தலைபர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். அதில் சிலர் ரஜினியின் உடல்நிலை குறித்து தமது ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தாலும் அவர் கட்சியைத் தொடங்கியேயாகவேண்டுமென வற்புறுத்தியதாக அக் கூட்டத்தில் கலந்துகொண்ட தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

“எனது அரசியற் பிரவேசம் உறுதியாகி விட்டது. அது காலத்தின் கட்டாயம். வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் நான் எனது அரசியற் கட்சியைத் தோற்றுவித்து தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்” என 2017 டிசம்பர் 31 இல் ரஜினி அறிவித்திருந்தார். ஆனால் இன்றுவரை அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

கட்சியின் சார்பில் முதலமைச்சராக வரும் எண்ணம் தனக்கில்லை என, மார்ச் 2020 இல் அவர் தெரிவித்திருந்தார். “சட்டசபையில் அமர்ந்திருந்து நடைமுறைகளை அவதானிப்பதைப் பற்றி என்னால் சிந்திக்கக்கூட முடியவில்லை. நான் கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன். படித்த, தூரநோக்குள்ள ஒருவரே முதலமைச்சராக இருப்பார். அப்படியானவரால் தான் ஆட்சியை நடத்த முடியும். தவறாக எதுவும் நடப்பின் நாங்கள் தான் முதலில் கேள்வி கேட்பவர்களாக இருப்போம். ஆட்சியில் நாங்கள் தலையிட மாட்டோம். அங்கு இரண்டு அதிகார மையங்கள் இருக்காது” என அவர் தெரிவித்திருந்தார்.

கொள்கையளவில் ரஜினி பா.ஜ.க. தரப்புடந் இணைந்து போவதற்கு வாய்ப்புண்டு. ராம் சேது திட்டம், நதிகள் இணைப்பு போந்ற விடயங்களில் அவர் பா.ஜ.க. ஆதரவாளாராக இருப்பது போல் தெரிகிறது. 2008 இல் எல்.கே. அத்வானி, பின்னர் 2014 இல் நரேந்திர மோடி ஆகியோர் அவரைத் தமது கட்சியில் இணைக்க முஅற்சித்துப் பார்த்தனர். ஆனாலும் ரஜினி எப்பக்கமும் சாரவில்லை. கடந்த சில நாட்களில் ரஜினியை, அவரது கலையுலக நண்பரான மக்கள் நீதி மன்றத் தலைவர் கமல் ஹாசன் சந்தித்துப் பேசியிருந்தார். அதன் பின் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. சில வேளைகளில் இரண்டு கட்சிகளும் த்குதிப் பங்கீடுகளையும் செய்துகொள்ளலாம். யார் கண்டது?

-மாயமான்