Health

உடல் பக்கவாட்டுக்கு வளர்கிறதா? – இதை வாசியுங்கள்!

உடற் பருமனைக் குறைக்க வழி செய்கிறோம் என பல நிறுவனங்கள் ‘மாடல்கள்’ மூலம் மேடைகளில் அன்ன நடை காட்டிவிட்டு மில்லியன்களைக் கறந்து கொண்டு ஓடிவிடுகிறார்கள். பிரபலங்களும் இந்த ஓடியவர்களில் அடக்கம். பாவம் உடற்பருமனால் பாதிக்கப்படுபவர்கள், அறிவியலாளர்களை நம்பினால், அவர்கள் ஒருவகையில் emotionally challenged வகையினர் தான். பணத்தை இழக்கவென்றே உழைக்கும் வர்க்கமது.

கொஞ்ச காலமாக உடலெடை குறைக்கும் யாவாரத்தில் ஓசெம்பிக் என்றொரு மருந்து உலாவி வருகிறது. பார்மசூட்டிக்கல் நிறுவனங்களின் manufactured hype சாகசங்களில் இதுவுமொன்று. சர்க்கரை வியாதிக்காரருக்கென்று கண்டுபிடித்த இம்மருந்தை உடலெடைக் குறைப்பு நிறுவனங்கள் திருடிக் குறைந்த காலத்தில் பெருத்த இலாபத்தை அடைந்தன. இதனால் உண்மையான சர்க்கரை வியாதிக்காரர் எறும்புகளின் தொல்லையால் சிரமப்படவேண்டி வந்தது என யாரோ ஒரு ‘நீ-குழாய்’ காரர் பதிவிட்டிருந்தார். ஆனால் உண்மை எறும்பைவிட வேகமாகச் சென்று ஓசெம்பிக் வியாபாரிகளைக் கடித்துவிட்டது. ஓசெம்பிக் மருந்தின், இதுவரை தெரிந்த, பக்க விளைவுகளின் பட்டியல்: மயக்கம், களைப்பு, ஒவ்வாமை, ஏப்பம், குருதியில் சர்க்கரை குறைதல், கண் பார்வை மங்குதல், மலச்சிக்கல், குமட்டல், வயிற்றோட்டம் என்று பல.

ஆனால் இடுக்கண் வருங்கால் நஃக என்பதற்கமையை இந்த ஓசாம்பிக் பெயரைத் திருடி, சிறிது மாற்றத்துடன் சமூகவலைப் போராளிகள் தமது பிராண்டான ‘ஓட்செம்பிக்’ என்றொரு மருந்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ‘ரிக் ரொக்’ வாகனத்தில் புழுதியெழுப்பும் இந்த ‘மருந்தும்’ எடைக்குறைப்புக்குத் தான். ஆனால் இதற்காக நீங்கள் உங்கள் மருத்துவரிடம் பிறிஸ்கிறிப்ஷன் கேட்டுக் கெஞ்சவோ அல்லது மருந்தகத்தில் தூங்கவோ தேவையில்லை. இம்மருந்தை இலகுவாகவும், மலிவாகவும் (இதுவரை) நமது ஏழைகளின் தோழன் ‘No Frills’ இல் வாங்கிக்கொள்ளலாம். அதற்குப் பெயர் oatmeal.

Oatzembic Challenge என்ற சுலோகத்துடன் போட்டி வடிவத்தில் Tik Tok இல் வைரலாக வலம் வரும் இச்செய்தியில் ஓட் மீல் உணவுகள், பானங்கள் போன்றவற்றை அருந்துபவர்கள் விரைவாக எடையைக் குறைக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. இச்செய்தியில் உண்மை இருக்கிறதா இல்லையா என இதுவரை விஞ்ஞான விண்ணர்கள் எவரும் பதில் கூறவில்லையாகினும் இதை அருந்துவதால் உடலுக்குப் பாதிப்பு எதுவுமில்லையென்பதாலும், இதானால் பாதிக்கப்படப் போவது பார்மசூட்டிக்கல் நிறுவனங்கள் என்பதாலும் இதற்கு 5 நட்சத்திரங்களை அள்ளிக் கொடுத்து ஆராதிப்பதில் எனக்கும் மகிழ்ச்சி தான்.

Tik Tok இல் வலம் வரும் செய்தி என்னவென்றால் ஓட்மீல் உணவை உட்கொண்டதால் ஒருவர் இரண்டு மாதங்களில் 40 இறாத்தல் எடையைக் குறைத்து விட்டார் என்பதே. ஓட்ஸ், நீர் மற்றும் தேசிக்காய்ப் புளி ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட ஸ்மூதியை மட்டுமே தான் இரண்டு மாதங்களாக அருந்தியதாக அவர் கூறியிருக்கிறார். அவருடைய இந்த அறிவுரையைக் கேட்ட பலரும் இந்நடைமுறையைப் பின்பற்றித் தாமும் எடையைக் குறைத்திருப்பதாகக் கொழுத்திப் போடுகிறார்கள். இச்செய்தி இப்போது காட்டுத் தீ போல் பரவி வருகிறது. ஒரு ரிக் ரொக்கெரது பதிவு மட்டும் 2.7 மில்லியன் பார்வைகளைக் கைப்பற்றியிருக்கிறது. இதைப் பார்த்த ஒரு உடலப்பியாச வல்லுனி “இது ஆச்சரியம் தரும் செய்தியாக இருப்பினும் உடலுக்குத் தீங்கேதும் விளைவிக்காது என்பதனால் அதை உண்பதில் தவறில்லை. ” எனக்கூறியிருக்கிறார். பின்னர் அவரே இதைப் பயிற்சித்துப் பார்த்ததாகவும் இவ்வுணவு தனது பசியை வெகுவாகக் குறைத்துவிட்டது எனவும் ஒத்துக்கொண்டிருக்கிறார்.

ஓட்மீல் உணவு எடையைக் குறைக்கிறதா என மசச்சூசட்ஸிலுள்ள மருத்துவர் ரொம்மி மார்ட்டினிடம் கேட்டபோது “இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ ஓட்மீல் ஒரு மிகச்சிறந்த சுகாதாரம் மிக்க உணவு. காலை உணவாக அதை உண்பதற்கு இப்படியான போட்டிகள் உதவிசெய்யுமானால் அதை நான் வரவேற்கிறேன்” எனக்கூறியதாக நியூ யோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஓட்மீல் ஒரு வகைத் தானியத்திலிருந்து செய்யப்படும் இயற்கை உணவு. எந்த நார்ச்சத்துள்ள உணவும் சமைபாடடைய அதிக நேரம் தேவைப்படுவதால் அது வயிற்றை நிரப்பி பசியைக் குறைப்பது அதன் ஒரு குணாதிசயம். அதே வேளை மலத்தைத் தேங்கவிடாது உடனேயே வெளியேற்றி விடுவதால் உடலுக்கு இரட்டிப்பு நன்மை கிடைக்கிறது. இதுவே உடற் பருமன் குறைவதற்குக் காரணம் அந்த மருத்துவர் கூறியிருக்கிறார்.

எனக்கிருக்கும் பயம் கிளிநொச்சியிருந்து தவிடு சாப்பிட்டு மெலிந்து நிற்கும் ஒரு மாட்டை ஒரு ‘நீ குழாயர்’ வீடியோ எடுத்து ‘தவிட்டு சலெஞ்’ என்று பதிவேற்றி விடுவாரோ என்பது தான். (Photo by Margarita Zueva on Unsplash)