• Post category:SRILANKA / WORLD
  • Post published:December 31, 2020
Spread the love

கட்டாய தகனக் கொள்கை தொடர்பாக, பிரித்தானியாவின் மிகப் பெரிய முஸ்லிம் அமைப்பான பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளது.

இது தொடர்பாக பிரித்தானிய முஸ்லிம் கவுன்சிலின் உதவி செயலாளர் நாயகமான ஸாரா மொஹாமெட், பிரித்தானியாவில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள், மருத்துவ நிபுணர்கள், மூத்த தலைவர்கள் ஆகியோரைக் கொண்ட செயற்குழுவொன்றை ஸ்தாபித்துள்ளார்.

கவுன்சிலின் முதல் நடவடிக்கையாக, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது திணிக்கப்பட்டிருக்கும் கட்டாய தகனக் கொள்கையை மீளப்பெறும்படி இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளும்படி பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் மற்றும் இலங்கைக்கான தூதுவர் ஆகியோருக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

“இலங்கையில் இறந்த முஸ்லிம்களின் உடல்களைக் கட்டாயப்படுத்தித் தகனம் செய்விப்பது ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் மத சுதந்திரத்தை மறுக்கும் ஒரு மோசமான செயல். சரியான காரணமின்றி, ஒரு குடும்ப உறுப்பினரின் உடலைக் குறிப்பிட்ட காலக் கிரமத்தினுள் புதைப்பதற்கான அனுமதியை மறுப்பது சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு செயல். இவ் விடயத்தில் இலங்கை அரசு, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இறந்த உடல்களைக் கையாளும் முறைகளுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் சிபார்சுகளை மீறிச் செயற்பட்டு வருகிறது. அத்தோடு, இறந்த உறவினரின் உடற் தகனம் தொடர்பாக, குடும்பத்தினர் இலங்கை உச்சநீதிமன்றத்தில் செய்த முறைப்பாட்டை அந்நீதிமன்றம் தகுந்த விசாரணைகளின்றி அவசரமாக நிராகரித்தமையானது அங்குள்ள முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தின்மீது மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறைகளுக்கு உள்நாட்டு நீதிபரிபாலனத்தினால் தகுந்த தீர்வு வழங்கப்படமுடியாது என்பதையும் காட்டுகிறது. எனவே, இவ் விடயத்தை ஐ.நா.மனித உரிமைகள் சபையின் உடனடிக் கவனத்துக்கு எடுத்துச் செல்வதற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்” என பிரித்தானியாவின் பிரபல சட்ட அலுவலகமான பைண்ட்மான்ஸ் எல் எல் பி யைச் சேர்ந்த ரயாப் அலி தெரிவித்துள்ளார்.

“அரசியலமைப்புக்கு எதிரான தனது கட்டாயத் தகனக் கொள்கையை இலங்கை அரசு உடனடியாக மீளப்பெறச் செய்வது தற்போது சர்வதேச சமூகத்தின் பொறுப்பாக மாறியுள்ளது. இந்த மனித உரிமை மீறல்களிலிருந்து இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தினருக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்து அவர்கள் தமது இறந்த உறவினரின் உடல்களைப் புதைத்து கண்ணியமாகத் தமது சடங்குகளைச் செய்வதற்கு வழிசெய்வதற்கான தயாரிப்புகளில் பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில் இறங்கியுள்ளது” என கவுன்சிலின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Print Friendly, PDF & Email