Spread the love

நமது உடல் – பாகம் 4

வைத்தியன்

எமது உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலின் ஒரு கூறை SARS-CoV-2 வைரஸ் தனது தேவைக்காக எமக்கு எதிராகத் திருப்பி விடுகிறதா என ஆராய்ச்சியாளர் சந்தேகிப்பதாக புதிய ஆய்வொன்று கூறுகிறது.

தன் இனப்பெருக்கத்துக்காக, வைரஸ் மனிதக் கலங்களிலுள்ள ACE2 வாங்கிகளைச் ‘சாவி’ களாகப் பாவித்து கலங்களுக்கு உள்ளே புகுந்து கொள்கின்றன என முந்திய கட்டுரைகள் மூலம் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.

கலத்தின் சுவரைத் திறந்து உள்ளே வைரஸ் தனது ‘வயிற்றிலிருக்கும்’ RNA எனப்படும் ஏற்கெனவே புரோகிராம் செய்யப்பட்ட கட்டளைக் கோவையை உள்ளே தள்ளி விடுகிறது. இதுவே மனிதக் கலத்தினுள் இருக்கும் இனப்பெருக்கத்தை நிர்வகிக்கும் நிறமூர்த்தத்துடன் ‘டீல்’ செய்து அதன் ‘மண்டையைக் கழுவி’ த் தன்னைத் தானே பெருக்கிக் கொள்கிறது. இதுவே விசித்திரமாக இருக்கிறதா? இன்னும் இருக்கிறது, வாருங்கள்.

சரி ஒரு கலத்துக்குள் புகுவதற்குப் பாவித்த சாவி ACE2 போல இன்னும் பல்லாயிரக் கணக்கான பிரதிகளை செய்வதுவே அதன் அடுத்த திட்டம். அது ஒரு தனிக் கதை.

Interferon

உடலில் ஒரு எதிரி (pathogen) புகுந்தவுடன் அங்குள்ள பாதுகாப்புத் துறையிடமிருக்கும் தகவற் பிரிவு (first responders) இண்டெர்ஃபெறோன் (interferon) எனப்படும் ஒரு புரதமாகும். உடலின் நோயெதிர்ப்பு அமைச்சினால் அனுப்பப்படும் இதன் வேலை அபாயச் சங்கை ஊதி உடலின் பாதுகாப்புப் படைகள் எல்லோரையும் எச்சரிக்கை செய்வது.

இந்த interferon இனது தொழிற்பாட்டை அறிந்து வைத்திருக்கும் வைரஸ், அதை மடக்கித் தனக்கு வேலை செய்யும்படி மாற்றிவிடுகிறது. (போர்க் காலத்தில் முதலில் கைப்பற்றுவது ஊடகங்களை என்பது போல) இப்படிக் கட்சி மாறிய தகவற் பிரிவின் அடுத்த அறிவிப்பு “இன்னும் தொகையான ACE 2 அவசரமாகத் தேவைபடுகின்றன” என்பதாக இருக்கும். இப்படி கோடிக்கணக்கான ACE2 வாங்கிகள் கலங்களின் வெளிச் சுவரில் நீட்டிக்கொண்டு நிற்க அவற்றைச் சாவிகளாகப் பாவித்து வைரஸ் கலங்களுக்குள் புகுந்து விடுகிறது.

இதில் விடயமென்னவென்றால், இதே தொழிற்பாட்டைத் தான் நமது இரத்த அழுத்த மருந்துகளும் செய்கின்றன. ACE inhibitors / blockers எனப்படும் மருந்துகள் இந்த ACE 2 எண்ணிக்கையைக் கூட்டும் வேலையத்தான் செய்கின்றன. இரத்தக் குழாய்களின் சுவர்களின் கடினத்தைத் தளர்த்துவதன் மூலம் உள்ளே அதிகரிக்கும் அமுக்கத்தைக் குறைப்பதுவே அதன் வேலை. வைரஸ் இதன் நுணுக்கத்தை எப்படியோ அறிந்து விட்டிருக்கலாம். கோவிட்-19 தொற்றின் ஆரம்ப காலங்களில் மருத்துவ சமூகம் சொல்லி வந்த ‘underlying conditions’ என்பது ACE2 வாங்கிகளை அதிகம் கொண்டிருக்கக்கூடிய நோயாளிகளை இந்த குரூப்பில் சேர்த்திருந்தார்கள்.

Related:  புதிய கோவிட் வைரஸிலிருந்து மக்களை எமது மருந்து பாதுகாக்கும் - அஸ்ட்றாசெனிக்கா முதன்மை நிர்வாகி

இந்த ACE2 வாங்கிகளின் செயற்பாடுகள் பற்றிப் பல விஞ்ஞானிகள் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். உடலுக்குப் பல நன்மைகளைச் செய்துவரும் இந்த முக்கியமான புரதத்தை வைரஸ்கள் எப்படித் தமக்கு சாதகமாகப் பாவிக்கின்றன என்பது பற்றிய ஆராய்ச்சியே இப்போது முன்னணியில் இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சியின் இணை விஞ்ஞானியான ஹோசே ஓர்டோவாஸ்-மொன்ரானேஸ் பொஸ்டன் குழந்தைகள் மருத்துவ மனையில் பணி புரிவதோடு, ஹார்வார்ட் மருத்துவப் பள்ளியிலும் குழந்தை மருத்துவம் பற்றிப் போதித்து வருபவர்.

அவரது ஆய்வின்படி, ACE2 வாங்கிகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, இரத்தக் குழாய்களில் கசிவு ஏற்படும்போது அதைச் செப்பனிடுவதிலும் பங்கு வகிக்கின்றன எனவும் நம்புகிறார். இருப்பினும் அது பற்றிய மேலும் ஆராய்ச்சிகள் தேவை என்பதையும் ஒப்புக் கொள்கிறார்.

அவரது இன்னுமொரு கருதுகோள் இது. அதாவது, வைரஸ் கலங்களில் தம்மை இணைத்துக் கொள்வதற்கு மட்டுமே ACE2 வாங்கிகளைப் பாவிக்கின்றன. கலங்களுக்குள் புகுவதற்கு முன்னர் அது தனது வயிற்றைக் கிழிப்பதற்கு ஒரு கருவி தேவைப்படுகிறது. ஒரு கத்தி என்று வைத்துக்கொள்வோம். இதையும் வைரஸ் கொண்டு வருவதில்லை, கலம் தான் கொடுக்கவேண்டி இருக்கிறது. இது ஒரு TMPRSS2 எனப் பெயரிடப்பட்ட நொதியம் (enzyme). இது வைரஸின் உடலைக் (spike protein) கிழித்து அதன் RNA ஐ காலத்துக்குள் செல்ல ஏற்பாடு செய்கிறது என்கிறார் ஓர்டோவாஸ்-மொன்ரானெஸ்.

“மூக்குக்கால்வாய், சுவாசப் பைகள், குடல் ஆகியவற்றில் எந்தெந்தக் கலங்களை இவ் வைரஸ்கள் குறிவைக்கின்றன என்பதை அறிவதற்கு எங்களால் முடியும். இக் கலங்களில் பிணைத்துக்கொண்டு தனது RNA ஜக் கலத்துக்குள் புகுத்தாத வரைக்கும் வைரஸ் செயலற்றுப்போன ஒன்றுதான். இந்த இரண்டு செயற்பாடுகள் பற்றியும் அறிவது எங்களுக்கு முக்கியமாகிறது” என்கிறார் அவர்.

இது ஓர்டோவாஸ்-மொன்ரானெசெய்யும் அவரது குழுவினரையும் மேலும் சிந்திப்பதற்கு வழி காட்டியது. அதாவது இந்த இரண்டு நடைமுறைகளும் நடைபெறுவதற்கு ACE2 வாங்கியும் TMPRSS2 நொதியமும் ஒரே இடத்தில் இருந்தால் தான் இது சாத்தியமாகும். அப்படியான உறுப்புகள் / இழையங்கள் எவை என அவர்கள் ஆராய்ந்தார்கள்.

இப்படி இரண்டு செயற்பாடுகளையும் ஒருங்கே கொண்டுள்ள கலங்கள் உடம்பில் 10% தானுள்ளன.

 

இக் கலங்களைக் கண்டறிவதற்கு அவர்கள் single cell sequencing என்ற முறையைப் பாவித்தார்கள். அதன் படி, இக் கலங்கள் மூன்று இடங்களில் இருப்பதை அறிந்தார்கள். 1) goblet cells – மூக்கு கால்வாயில் இருக்கும் இக் கலங்கள் சளியை உற்பத்தி செய்பவை. 2) type II pneumocytes – இவை சுவாசப் பைகளில் ஒக்சிசனை பரிமாறுவதற்குப் பொறுப்பானவை 3) ileal absorptive enterocytes – இவை பெருங்குடல், சிறுகுடல் போன்றவற்றின் உட்சுவர்களைப் பாதுகாக்கும் அதேவேளை உணவை உடல் உறிஞ்சுவதற்கும் காரணமானவை.

Related:  கோவிட் தொற்று விசாரணைகளை மேற்கொள்ள உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் சீனா சென்றடைந்தனர்

இதே போன்ற பரிசோதனையை அவர்கள் குரங்குகளிலும் செய்து தமது கண்டுபிடிப்பை உறுதி செய்துகொண்டார்கள்.

இந்த மூன்று கல வகைகளையும் அடையாளம் கண்ட பின்னர், அவர்கள் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். இவை மூன்றுக்கும் ஒரு பொதுமை இருந்தது. இக் கலங்களில் இருந்த சில மரபணுக்கள் (genes), interferon சமிக்ஞை கொடுக்கும்போதெல்லாம் விழிப்படைந்தன . இம் மரபணுக்கள் சில ACE 2 விற்குரியவையாக இருக்கலாமோ என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்தது. அது உண்மையானால் ஒவ்வொரு தடவையும் interferon சமிக்ஞை அனுப்பும்போது அங்கு புதிய ACE 2 கலங்கள் உருவாகும். இது தான் வைரஸ் எதிர்பார்ப்பது.

துரதிர்ஷ்டவசமாக இக் கருதுகோளை ஆதரிக்கும் வகையில் பாடப் புத்தகங்களில் எதுவித தகவல்களுக்குமில்லை.

நம்பிக்கையைத் தளர விடாமல் அவர்கள் மேலும் தொடர்ந்தார்கள். இரத்தத்தில் interferon அளவைச் செயற்கையாக அதிகரித்தார்கள். இப் பகுதிகளில் ACE 2 வின் பிரசன்னம் (expression) அதிகரித்தது.

அனுமானம்

இப் பரிசோதனை மூலம் அவர்களது கருதுகோள் நிறுவப்பட்டுள்ளது. அதாவது, 1) கலங்களுக்குள் புகுவதற்கு வைரஸ் ACE 2 சாவியைப் (receptor) பாவிக்கிறது. 2) அச் சாவிகளை பிரதி பண்ணுவதற்கு உடலின் தகவற் தொடர்புக்குப் பொறுப்பான interferon ஐப் பாவிக்கிறது. இதனால் பல கலங்களை ஏககாலத்தில் திறந்து உள்ளே போவதற்கு வழி செய்கிறது.

அடுத்த கட்டமாக அவர்களது ஆராய்ச்சி கலங்களுக்கு உள்ளே போகும் வைரஸ்கள் அங்கே என்ன செய்கின்றன என்பதை ஆராய்வதாக இருக்கும் எனக் கூறுகிறார்கள்.

Print Friendly, PDF & Email