HealthScience & Technology

உங்கள் செவிகளுக்கு எத்தனை வயது? – பரிசோதியுங்கள்!

வைத்தியன் – நமது உடல் 5

ஐம்புலன்களில் ஒன்றான செவியின் செயற்பாடுகள் வயது போகப் போகக் குறைந்துகொண்டு போகின்றன எனப்படுகிறது. இதற்கான காரணங்கள் பலவாக இருப்பினும், நமது செவிகளின் உள்ளுறுப்புகளின் இயக்கம் தேவையற்றுத் துஷ்பிரயோகம் செய்யப்படாமலிருக்கவேண்டும் என்பதும் அவற்றில் ஒன்று. இதைப் புரிந்துகொள்வதற்கு, மேலே உள்ள காணொளி ஓரளவு உதவி செய்யலாம்.

ஒலி என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி. அதன் பாதையில் ஏதாவது துணிக்கைகள் இருந்தாலே தவிர அதனால் பயணம் செய்ய முடியாது. இதை எளிதாக விளக்க, ஒரு உதாரணத்தைக் கூறலாம். கொறோனா ஒழிக்கப்பட்ட மறுநாள் சாராயத் தவறணையில் (டாஸ்மார்க், தமிழ்நாட்டு வாசகர்களுக்கு) ஒரு பெரிய வரிசையில் நிற்கிறார்கள். முண்டியடிக்கவேண்டுமென்று அவர்களுக்குச் சொல்லித் தரத் தேவையில்லை. ஒரு மைல் தூர வரிசையில் கடைசியில் நிற்பவர் தனக்கு முன்னுக்கு நிற்பவரைத் தள்ளிவிட்டால், சில செக்கண்டுகளில் வரிசையில் முதலில் நிற்பவர் விழாவிட்டாலும் நிச்சயமாக ஆட்டம் காணுவார்.

ஒலியும் இப்படித்தான் பயணம் செய்கிறது. மனிதர்களுக்குப் பதிலாக, காற்றிலுள்ள துணிக்கைகள் ஒன்றையொன்று தள்ளுப்படுகின்றன. ஒரு அசைவு அதன் தொடக்கத்திலிருந்து முடிவுக்குப் போகிறது. துணிக்கைகள் இல்லாதபோது இது நடைபெற முடியாது. வெற்றிடத்தில் ஒலி பயணம் செய்யாது என்பதற்கு இதுவேதான் காரணம்.செவியைப் பொறுத்தவரையில் இரண்டு ஊடகங்கள் பங்குபெறுகின்றன. முதலாவது காற்று. செவியின் சவ்வு எனப்படும் செவிப்பறையில் காற்றிலுள்ள துணிக்கைகள் மோதுவதால் அதில் வித்தியாசமான அசைவுகளை ஏற்படுத்துகின்றன. இதை ஆங்கிலத்தில் modulation என்பார்கள்.

இதன் தொடர் தாக்கமாக ஒரு அறைக்குள் சிறைப்பட்டிருக்கும் திரவம் (இரண்டாவது ஊடகம்) முந்திய அசைவுகளின் அதிர்வுக்கேற்ப அதிர்கிறது. இது வரைக்கும் இவ்வதிர்வுகள் ஒலி என்ற பெயரிலேயே அழைக்கப்படும்.

ஆனால் மூளையைப் பொறுத்தவரையில் அதற்கு ‘ஒலி’ என்ற சக்தியைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லை. அதற்குத் தெரிந்ததெல்லாம் மின்சக்தி ஒன்றுதான். நரம்புக்கலங்களினால் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் மூளையின் தொடர்பு சாதனத்தின் ஒரே மொழி மின்சக்திதான். எனவே காதுக்குள் நுழைந்த ஒலியை மின்சக்தியாக மாற்றிக்கொடுக்க வேண்டும். இது நடக்கும் இடம் உட்காதின் நத்தைபோல் சுருண்டிருக்கும் (cochlea) எனப்படும் உறுப்பு. ஒலியிலிருந்து மின்சக்தியாக மாற்றம்பெற்ற அதிர்வு செவிநரம்புகளின் (auditory nerve) மூலம் மூளைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பகுப்பாய்வு செய்யப்படுகிறது.

அதிர்வெண் (frequency)

ஒருவரது செவி 3 Hz – 20,000 Hz (20 KHz) வரையிலான அதிர்வெண்களை மட்டுமே கேட்கக்கூடியாதாக அமைக்கப்பட்டுள்ளது. சங்கு ஊதும்போது ஏற்படும் சத்தம் குறைந்த அதிர்வெண் பிரதேசத்திலும், இரண்டு உருக்குலோகங்கள் உராயும்போது எழும் காதைப் பிளக்கும் கீச்சல் உயர் அதிர்வெண் பிரதேசத்திலும் இருக்கும். சில மிருகங்கள், பறவைகள் எழுப்பும் ஒலி இந்த ஒலிக்கற்றைப் பிரதேசத்துக்கு (3-20KHz) வெளியில் இருபதால் எம்மால் கேட்கமுடியாது. ஆனால் அவற்றை வேறு மிருகங்கள் கேட்கக்கூடியாதாக இருக்கும்.உங்கள் கேட்கும் ஆற்றலைப் பரிசோதியுங்கள்

மனிதரில் வயது போகப்போக கேட்கும் சக்தி குறைந்துகொண்டு போகின்றது. கீழே இனைக்கப்பட்டிருக்கும் காணொளி உங்கள் கேட்கும் ஆற்றலைப் பரிசோதிக்கிறது. பார்த்தும் கேட்டும் உங்கள் வயதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

  • 30+ வயதுள்ளவர்களது கேட்குக் அதிர்வெல்லை 15,000 Hz
  • 40+ வயதுள்ளவர்களது கேட்குக் அதிர்வெல்லை 10,000 Hz
  • 60+ வயதுள்ளவர்களது கேட்குக் அதிர்வெல்லை 8,000 Hz
  • 70+ வயதுள்ளவர்களது கேட்குக் அதிர்வெல்லை 6,000 Hz

நீங்கள் ஒரு heavy metal band member ஆகவோ அல்லது உரத்த சத்தம் போடும் தொழிற்சாலையில் பணிபுரிபவராகவோ, அல்லது தவில் வித்துவானாகவோ இருப்பின் உங்களுக்கு இப்பரிசோதனை பலனளிக்கும். இது ஒரு மருத்துவப் பரிசோதனை அல்ல. ஆனால் அதைச் செய்துகொள்வதற்கு இது தூண்ட இடமுண்டு.

ஒலி உங்கள் மூளையை அடையும் படிமுறைகள் (விரிவாக)

Diagram of the inner ear
The auditory system
(Source: NIH/NIDCD)
  1. வெளிக்காதை அடையும் ஒலி காதுக் கால்வாய் மூலமாக செவிப்பறையை அடைகிறது.
  2. உள்வந்த ஒலிக்கற்றையினால் அதிரும் செவிப்பறை நடுக்காதினுள் இருக்கும் malleus, incus, stapes ஆகிய மூன்று எலும்புகளை அதிரவைக்கிறது.
  3. இந்த மூன்று எலும்புகளும் தாம் வாங்கிய ஒலிக்கற்றைகளை உட்காதில் இருக்கும் cochlea எனப்படும் திரவத்திடம் கையளிக்கின்றன.
  4. இத் திரவத்தில் மிதந்துகொண்டிருக்கும் சேலை போன்ற ஒரு சவ்வின் மேற்பகுதியில் நரம்பு முடிச்சுகள் உள்ளன.
  5. நடுக்காதின் மூலம் வந்த ஒலி திரவத்தில் எழுப்பிய அலைகள் இந்நரம்பு முடிச்சுகளை அல்லாட வைக்கும்போது அவ்வதிர்வுகளுக்கேற்ப பிறப்பிக்கப்படும் மின்சக்தி ஒலிநரம்பின் மூலம் மூளையைச் சென்றடைகிறது.

நன்றி: இச்செயற்பாட்டை விளக்கும் காணொளி National Institute on Deafness and Other Communication Disorders இனால் தயாரிக்கப்பட்டது