EntertainmentIndia

ஈ.மா.யோ. (2018) | தவிர்க்கக்கூடாத மலையாளத் திரைப்படம்


மாயமான்

இப் படத்தைப் பார்க்கும்படி வட்சப் மூலம் லண்டனிலிருந்து எனது மைத்துனர் செய்தியனுப்பியிருந்தார். பொதுவாக மலையாளப் படங்கள் மிகைப் படுத்தப்படாத இயல்பான வாழ்க்கையை, இயல்பான நடிப்பின் மூலமாக இயல்பான சூழலைப் பின்னணியாகக்கொண்டு தயாரிக்கப்படுபவை என்ற முற்சாய்வுடன் ஈ.மா.யோ. வைப் பார்த்தேன்.

Holy moly. என்ன படம் இது. ஒரு திரைப்பட மாணவன் கற்றுக்கொள்ள வேண்டிய பல்கலைக்கழகம் இது. கொச்சியிலுள்ள செல்லாணம் கடற்கரைக் கிராமத்தில் படமாக்கப்பட்ட இப் படத்தில் செம்பன் வினோத் ஜோஸ், விநாயகன், டிலீஷ் போதன், கைனாகரி தங்கராஜ், போலி வால்சன், ஆர்யா K.S., கிருஷ்ணா பத்மகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். மரண வீடொன்றில் நடக்கும் நிகழ்வுகளைச் சுற்றி சுழல்கிறது கமரா. காட்சிகள் முதல் ஓசைகள் வரை இயற்கையான ஆழங்களையும் அளவுகளையும் மீறாமல், ஒரு இலங்கைத் தமிழ்க் கிராமத்தில் சாதாரணமாக நிகழும் சம்பவங்களை ஒரு candid camera வினால் படம் பிடித்தது போல. சமூகத்தின் பல தரப்பட்ட பழக்கவழக்கங்களை, மனிதர்களை நையாண்டி செய்யும் படம்.

கேரளத்துக்கு இயற்கை அளித்த வனப்பை, அந்த நீலக்கடலை, தோணிகளை, கடற்காற்றுக்குத் தலைகளால் தாளம் போடும் தென்னைகளை, கடலோரக் கிராமத்தைக் காணக் கண்ணாயிரம் வேண்டும்.

புனையப்படாத கதை. ஒரு கிராமத்து மேஸ்திரி, மனைவி, மகன், மருமகள், மகள், கடற்கரையை அண்டிய ஒரு சிறிய வீடு, அதை உள்ளடக்கிய -எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும் – கிராமம். தந்தையின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றத் துடிக்கும் வசதியற்ற மகன்.

இயற்கையான பாத்திரத் தெரிவு. மேக்கப் செலவுகள் எதுவுமில்லாது, இயக்கப்படாமல் இயல்பாக நடித்திருக்கும் பிரதான நடிகர்கள் முதல், துணை நடிகர்கள் வரை.ஒளிப்பதிவு, ஓசைப்பதிவு இரண்டும் (இசையமைப்பு என்று ஒன்றுக்கான தேவை இங்கு இருக்கவேயில்லை) வர்ணிப்புக்கு அப்பாற்பட்டவை. கிட்டிய, தூரத்து ஓசைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் weighted amplitudes, ஒவ்வொரு நிகழ்வுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இயக்குனரின் விசாலத்தையும் ஆழத்தையும் காட்டுகிறது.

மரண வீட்டில் இயல்பாக உறவுகள், சுற்றங்களின் உண்மையான அக்கறை கலந்த உதவிகளையும், விடுப்புகளையும், எதிர்பாராது வந்து முண்டியடித்துக்கொண்டு பிரேதத்தின் மீது விழுந்து கதறியழும் பாத்திரங்களும் சம்பவங்களும் நம்மில் பலருக்கு அந்நியமானவை அல்ல. குறிப்பாக யாழ்ப்பாண மரணச்சடங்குகளில் யாழ்தேவியில் பிந்தி வருபவர்கள் உள்ளே வரும்போது வானுயரும் கதறல்கள் எமக்குப் பரிச்சயமானவை.

மரணம் நிகழ்ந்தவுடன் முதலில் வீட்டுக்கு வந்து உதவிகளைச் செய்யும் நன்பர்கள், அயலவர்களுடன் நிற்கும் ஒருவர் மட்டும் நீண்ட முடியுடன், மேற்சட்டை அணியாது காரியங்களைச் செய்கிறார். பண்பாட்டு, பாரம்பரிய நடைமுறைகளைத் தெரிந்தவராக இருக்கும் இப் பாத்திரத்துக்கு இயக்குனர் கொடுத்திருக்கும் முக்கியத்துவம், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

ஜல்லிக்கட்டு (2019) படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிஸ்ஸெரி தான் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். City of God (2011), நாயகன் (2010), அங்காமலி டயறீஸ் (2018) ஆமென் (2013) ஆகியன இவரது இதர படங்கள். அநேகமாக எல்லாமே மலையாள மொழியில் எடுக்கப்பட்டவை. 2010 இலிருந்து இயக்குனராகப் பணியாற்றுகிறார்.

குறிப்பிடக்கூடிய மற்றவர்கள் திரைக்கதை: P.F.மத்தியூஸ், தொகுப்பு: தீபு ஜோசெப், இசை: பிரஷாந்த் பிள்ளை, ரெங்கநாத் ரவீ. நடிகர்கள்: செம்பன் வினோத், விநாயகன்.

அதிகம் புகழ விரும்பவில்லை. தவறாமற் பார்க்கவேண்டிய ஒரு படம்.