ஈ-சிகரட் சுவாசப்பை நோய்களுக்குக் காரணமாகலாம்! -

ஈ-சிகரட் சுவாசப்பை நோய்களுக்குக் காரணமாகலாம்!

அமெரிக்க பொது சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

பதின்ம வயதினரில் இருமல், மூச்சுத் திணறல், களைப்பு அறிகுறிகள்

14 மாநிலங்களில், ஈ-சிகரட்டுடன் தொடர்புடையதெனக் கருதப்படும் சுவாசப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் பற்றி முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மையம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இந் நோய்களுக்கு தொற்றுக் கிருமிகள் காரணமல்ல என்பதை உறுதிப்படுத்திய நோய்க் கட்டுப்பாடு மையம், ‘வேப்பிங் ‘ (vaping) எனப்படும் ஈ-சிகரட் புகைத்தலே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அதை நிரூபிக்க மேலும் ஆய்வுகள் செய்யப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 28 முதல் பல மாநிலங்களிலிருந்தும் 94 ‘வேப்பிங்’ தொடர்புடைய மோசமான சுவாசப் பை நோயாளிகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலோனோர் பதின்ம, வாலிப வயதினராவர். இதில் 30 பேர் விஸ்கோன்சின் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்நோயாளிகள், இருமல், மூச்சுத் திணறல், களைப்பு போன்ற உபாதைகளைக் கொண்டிருப்பதாக முறையிட்டுள்ளனர். சிலர் சுவாசிப்பதற்கே சிரமப்பட்டமையால் கருவிச் சுவாசம் கொடுக்கவேண்டி நேரிட்டது.

கடந்த வாரம் 16-18 வயதுகளுடைய நான்கு பேருக்கு மினெசோட்டா குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ‘அண்டிபயோட்டிக்ஸ்’ எனப்படும் கிருமி மருந்துகள் எதுவும் பலனளிக்கவில்லை எனவும் அவர்களின் சுவாசப்பைகள் காயப்பட்டுப் படிபடியாகத் தொழிற்பாட்டை இழந்துபோனதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

” பெரும்பாலானோர் மிக நீண்ட காலமாக வேப்பிங் செய்துவருகிறார்கள். அப்படியிருக்க இப்போது மட்டும் ஏன் இப்படியான சுவாசப்பைக் காயங்கள் ஏற்படுகின்றன என குழந்தை சுவாசநோய் மருத்துவர் ஆன் கிறிபித்ஸ் ஆச்சரியப்படுகிறார். எனது சந்தேகம் என்னவென்றால், இந்த நோய்கள் முன்பிருந்தே இருந்து வந்துள்ளன ஆனால் நாங்கள் தான் அவற்றைத் தொற்று நோய்கள் என்று நினைத்துச் சிகிச்சை அளித்து வந்துள்ளோம்” என்றார் அவர்.

ஒப்பீட்டளவில் ஈ சிகரட் பொதுவாகப் பாதுகாப்பானவை. உண்மையான சிகரட்டுகள் புகைப்பவர்களில் 50 வீதமானோர் இறந்துபோகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *