Sri Lanka

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள்: பழைய அறிக்கைகள் நிராகரிப்பு, புதியதொரு விசாரணைக்கு அனுர அரசு கட்டளை?

ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைய அறிக்கைகளை முடிந்தால் மூன்றௌ நாட்களுக்குள் பகிரங்கப்படுத்துமாறு அமைச்சர் விஜித ஹேரத் முன்னாள் பா.உ. உதய கம்மன்பிலவுக்கு சில நாட்களுக்கு முன் விடுத்த சவாலை ஏற்று அவர் அவ்வறிக்கைகளிலுள்ள பல விடயங்களைப் பகிரங்கப்படுத்தியது மட்டுமல்லாது அவ்வறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரான, தற்போதய பொதுப்பாதுகாப்பு அமச்ச்சின் செயலாளரும் முன்னாள் பொலிஸ் பணிப்பாளருமான ரவி செனிவிரத்னாவைப் பதவி நீக்கம் செய்யவேண்டுமெனவும் கேட்டிருக்கிறார்.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடைபெறுவதற்கு 12 நாட்களுக்கு முன்னரே (ஏப்ரல் 09) குண்டு வெடிப்புகள் நடக்கவிருக்கின்றன என எச்சரிக்கும் கடிதமொன்று அப்போதைய பொலிஸ் பணிப்பாளர் ரவி செனிவிரத்னாவுக்கு அனுப்பப்பட்டிருந்ததாகவும் ஆனால் அப்போது அவர் வெளிநாடு சென்றிருந்தமையால் அவ்வெச்சரிக்கை கவனத்துக்கு எடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதைத் தெரிந்துகொண்டிருந்தும் தேசிய மக்கள் சக்தி அரசு ரவி செனிவிரத்னாவை பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலளாராக நியமித்தது தவறு எனவும் அவரை உடனே பதவி விலக்கம் செய்யவேண்டுமெனவும் கம்மன்பில அமைச்சர் விஜித ஹேரத்தைக் கோரியிருக்கிறார்.


நீதிபதிகள் ஏ.என்.ஜே டி அல்விஸ் மற்றும் சயீட் இமாம் ஆகியவர்களால் விசாரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை பகிரங்கப்படுத்தும்படி புதிய அமைச்சர் ஹேரத்திடம் கம்மன்பில கோரியிருந்தும் அதை வெளியிட அமைச்சர் மறுத்து வருகிறார். நீதிபதி டி அல்விஸின் அறிக்கையின் 40 ஆவது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சாஹ்ரான் ஹாசிம் தலைமையில் இயங்கிய தெளஹீட் ஜமாத் அமைப்பினால் குண்டுவெடிப்புகள் நடத்தப்படவுள்ளன என்ற தகவல் ஏப்ரல் 09, 2029 அன்றே அப்போதைய புலன் விசாரணைப் பிரிவின் தலைவர் செனிவிரட்ணவுக்கு புலனாய்வுப் பிரிவினால் அனுப்பப்பட்டிருந்தது என இரண்டு நீதிபதிகளின் அறிக்கைகளும் தெரிவிக்கின்றன.

“குண்டுவெடிப்புகளைத் தவிர்க்கத் தவறியது மட்டுமல்லாது விடயம் தெரியவந்ததும் தான் கைதுசெய்யப்பட்டு விடக்கூடாது என்பதற்காக செனிவிரத்ன உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றையும் பதிவு செய்திருந்தார். அது மட்டுமல்லாது ஏபரல் 9 முதல் 16 வரை அவர் இக் கடிதத்தை அவரது பதிலதிகாரி பி.ஆர்.எஸ்.ஆர். நாககமுல்லவிற்கு அனுப்பிவைக்கவில்லை. இதன் காரணமாக இவ்வெச்ஶ்ரீஐக்கைக் கடிதம் 12 நாட்களாகத் திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. ” என கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

இக்கடிதம் ஏன் திறக்கப்படவில்லை என விசாரணையின்போது கேட்டதற்கு ” தனது பெயரில் வந்த கடிதமெதையும் எவரும் திறக்கக்கூடாது” என செனிவிரத்ன உத்தரவிட்டிருந்ததாக பொலிஸ் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“சாஹ்ரானின் குழு தொடர்பாக ஜனவரி முதல் ஏப்ரல், 2019 வரை13 அறிக்கைகள் கிடைக்கப்பெற்றிருந்தும் தாக்குதல்களை நிறுத்த செனிவிரத்ன எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆணைய அறிக்கையின் 41 ஆவது பக்கத்தில் செனிவிரத்ன மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டிருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதோடு த்ற்போது அவரே ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றி விசாரணைகளை மேற்கொள்ளப் போகிறார்” என கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

இது இப்படியிருக்க ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டு நடைபெற்று முடிந்த விசாரணை ஆணைய அறிக்கைகள் நம்ப முடியாதை எனக்கூறி புதிய விசாரணை ஒன்றுக்கு ஆணையிடப்போவதாக அமைச்சர் ஹேரத் அறிவித்துள்ளார்.