World

ஈழம்: தமிழ் மக்கள் பிரிந்து போவதற்கான கருதுக்கணிப்பொன்று அவசியம் – அமெரிக்க பேரவையில் பிரேரணை முன்வைப்பு

தென் சூடான், மொண்டிநீக்ரோ, கிழக்குத் தீமோர், பொஸ்னியா, எரித்திரியா, கொசோவோ போன்ற நாடுகளில் நடைபெற்றதைப் போல தமிழ் ஈழ மக்கள் பிரிந்து போவதற்கான மக்கள் கருத்தை அறியும் கருத்துக்கணிப்பொன்று நடத்தப்படவேண்டுமென பேரவை உறுப்பினர் விலி நிக்கெல் அமெரிக்க பேரவையில் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். பேரவையில் முதல் தடவையாக சமர்ப்பிக்கப்பட்ட இத் தீர்மானத்தில் தமிழ் இனப்படுகொலை உடபட்ட வன்முறைகள் இன்னுமொரு தடவை நிகழாதிருக்க தமிழ் மக்கள் அமைதியாகப் பிரிந்துபோவதற்கான அங்கீகாரத்தை வழங்கும் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்படவேண்டுமென பேரவை உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பை நினைவுகூரும் வகையில் உலகம் பூராவும் வாழும் தமிழர்கள் மே 18 ஆம் திகதியை ‘இனப்படுகொலை நாளாக’ நினைவுகூர்ந்து வருகிறார்கள். இந்நாளில் வட கறோலினாவைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஜனநாயகக் கட்சியின் பேரவை உறுப்பினர் விலி நிக்கெல் சமர்ப்பித்த இப்பிரேரணைக்கு கட்சி பேதமின்றி இருகட்சி உறுப்பினர்கள் பலரது ஆதரவும் கிடைத்திருக்கிறது. இப் பிரேரணையின் இணை முன்மொழிவாளர்களாக சூசன் வைல்ட், டநி கே.டேவிஸ், நிக்கோல் மல்லியோராக்கிஸ், மைக் கரீ, டொனால்ட் ஜி.டேவிஸ், சமர் எல்.லீ மற்றும் ஜெஃப் ஜாக்ஸன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட நாடுகளில் காணப்பட்ட இதே போன்ற பிரச்சினைகள் அமைதியாகவும், ஜனநாயக ரீதியிலும், சட்டபூர்வமாகவும் தீர்த்துக்கொள்ளப்பட்டதற்கு முன்னர் அங்கு வாழும் மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பே அடிப்படைக் காரணம் எனக்கூறி அப்படியொரு கருத்துக்கணிப்பே ஈழத் தமிழ் மக்களிடமும் மேற்கொள்ளப்படவேண்டும் என இப்பிரேரணையில் குறிக்கப்பட்டுள்ளது.

இப்பிரேரணையில் குறிக்கப்பட்டுள்ள விடயங்கள்:

(1). ஐக்கிய அமெரிக்கா ஈழத்தமிழருடன் ராஜரீகத் தொடர்புகளைப் பலப்படுத்தி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் தென்னாசிய பகுதியில் அமைதியும் உறுதியும் செழிக்க வகை செய்ய வேண்டுமென இப்பிரேரணை கேட்டுக்கொள்கிறது.

(2). ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகச் செயற்படும் அதே வேளை சர்வதேசங்களினால் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன கருத்துக்கணிப்பொன்றை செயற்படுத்துவதன் மூலம் ஈழத் தமிழ் மக்கள் தமது சுயாட்சியை ஜனநாயக ரீதியிலும் அமைதியான வழிகளிலும் பெற்றுத்தர ஐக்கிய அமெரிக்கா இதர சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படவேண்டுமென இப்பிரேரணை கேட்டுக்கொள்கிறது.

(3). ஈழத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கும்படி இப்பிரேரணை கேட்டுக்கொள்கிறது.