ஈழம்: இடித்தழிக்கப்படும் தமிழர் சின்னங்கள்; வலுத்துவரும் தமிழர் போராட்டம்
இந்தியாவின் தலையீட்டைக் கோரும் தமிழர் அமைப்புக்கள்
கடந்த சில வாரங்களாக தமிழ் ஈழத்தில் சிங்கள, பெளத்த வெறியர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழ் மரபழிப்பு நடவடிக்கைகள் மிக மோசமான நிலையை எட்டிக்கொண்டிருக்கின்றன எனவும் இதை எதிர்த்து தம்ழர் போராட்டங்களும் முனைப்பு பெற்று வருகின்றன எனவும் தமிழ் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் சமீப காலமாக இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பின் பேரில் தமிழர் நிலங்கள் பல ஆக்கிரமிக்கப்பட்டு வருவதும் இப்பகுதிகளிலுள்ள சைவக் கோவில்கள் பலவற்றில் தெய்வச் சின்னங்கள் பல இடித்தழிக்கப்பட்டு வருவதும் தினசரி நடைமுறையாக மாறியுள்ளது. இதைக் கண்டித்து அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்து ஏப்ரல் 25 அன்று மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை ஒழுங்குசெய்துள்ளன.
சைவக் கோவில்கள் சில் அமைந்துள்ள இடம் தொல்லியல் திணைக்களத்தின் வேலைகளுக்காக அரசாங்கத்தினால் மூடப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் இக்கோவில்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள வெடுக்குநாறிமலையில் அமைந்திருக்கும் சைவக் கோவிலில் பக்தர்களின் வழிபாடு தடுக்கப்பட்டிருந்தபோதும் அதை மீறி அங்கு வழிபடச் சென்ற ஒரு இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். இக்கோவிலிலுள்ள தெய்வச்சிலைகள் உடைக்கப்படதற்காக கடந்த மாதம் அங்கு பொதுமக்களின் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றிருந்தது.
அரச படைகளின் உதவியுடன் தமிழர் தொன்மங்களும், மரபுகளும் அழிக்கப்பட்டுவருவருவதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் சிலர் தெய்வச் சிலைகளைப் பொது இடங்களில் நிறுவியமையும் இவற்றை அகற்றுவதற்கு பொலிசார் நீதிமன்றத்தின் உதவிய நாடியபோது தமிழர் சார்பாக சில சட்டத்தரணி அரசியல்வாதிகள் நீதிமன்றம் சென்று வாதாடியதாகவும் செய்திகள் வந்திருந்தன.
இது சம்பந்தமாகக் கருத்துக்கூறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் “இவை வெறும் மதவழிப்புச் சம்பவங்கள் அல்ல; வட-கிழக்கைச் சிங்கள மயமாக மாற்றுவதற்கு சிங்கள ஏகாதிபத்தியம் மேற்கொண்டுவரும் திட்டமிடப்பட்ட செயற்பாடுகள். கடந்த 30 வருடங்களாகத் தடைப்பட்டிருந்த சிங்களமயமாக்கத்தைத் துரிதப்படுத்தும் முயற்சிகளே இவை” எனத் தெரிவித்துள்ளார்.
“ராஜபக்சக்களால் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரும் வித்தியாசமானவர்கள் அல்ல. 2018 இல் ஐ.தே.கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 1,000 விகாரைகளைக் கட்டுவோம் அவற்றில் பெரும்பான்மையானவை வடக்கு கிழக்கில் இருக்கும்” எனக்கூறியிருந்தது. இத்திட்டத்தை முன்னெடுக்கப்போகும் அமைச்சராக அப்போது சஜித் பிரேமதாசாவே இருந்தார். இந்த இனவழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து தமிழர் சமூகம் போராடி வருகின்றது. இப்படியொரு இயலா நிலைஏற்பட்டபோதுதான் வட-கிழக்கு மக்கள் ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தள்ளப்பட்டனர். தற்போது ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கபப்ட்ட நிலையில் தமிழர் இனவழிப்பு மீண்டும் தொடர்கிறது” என திரு பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்திருந்ததாக தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
முல்லைத்தீவில் இருக்கும் குருந்தூர் மலை ஐயனார் கோவிலில் நீதிமன்றத்தின் கட்டளையையும் மீறிக் கடந்த சில வருடங்களாகப் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகிறது. 2021 இல் ராஜாங்க அமைச்சர் ஒருவர் இராணுவத்தினர் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் சகிதம் இவ்விடத்தில் வைபவரீதியாக இங்கு ஒரு புத்தர் சிலையை நிறுவியிருந்தார். கிழக்கிலும் பலவிடங்களில் இதே போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சம்பவங்கள் குறித்து சில கோவில் முகாமைத்துவர்கள் இந்திய தூதுவராலயத்தை நாடியுள்ளனர் எனவும் இவ்விடயத்தில் தலையிடும்படி இந்திய /பா.ஜ.க. கட்சியினரைச் சில தமிழர் அமைப்புகள் அணுகியுள்ளதாகவும் அறியப்படுகிறது. ஆனால் இது ஒரு ஆபத்தான அணுகுமுறை எனவும் பா.ஜ. க. ஒரு முற்போக்கு அமைப்பு அல்ல; அதற்கும் ராஜபக்சக்களுக்கும் எதுவித வித்தியாசமுமில்லை; அவர்களும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகளை மிகவும் கீழ்த்தரமாக நடத்துபவர்கள் எனவும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இவ் விடயத்தில் தமிழ்நாடு, இந்திய அரசாங்கங்களின் உதவியைக் கோருவதில் தவறில்லை, அது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது என திரு பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். (படம்: தி மோர்ணிங்)