Opinion

ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?

இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் சிங்கள ஆட்சியாளர்களுக்கும், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் இனத்திற்கும் இடையில் பகையும் போட்டியும் போராட்டமும் தொடர்கின்றன. சிங்கள ஆட்சியாளர் இலங்கையை தனிச் சிங்களப் பவுத்த நாடாக மாற்றுவதைக்    குறியாகக் கொண்டுள்ளனர். தமிழர் இனப்பாகுபாடின்றி தமது ஆட்சி தம்மிடம் இருக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். இதில் இதுவரை இந்த இரு பகுதியாரின் முன்னேற்றம் என்ன என்று பார்ப்போம்.

சிங்கள ஆட்சியாளர் சாதனை:

1. அண்ணளவாக கிழக்கு மாகாணத்தின் அரைப்பங்கைப் பிடித்திருக்கும் அம்பாறை சிங்கள மாவட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதனால் இனிமேல் கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஆட்சி அமைய முடியாது.

2. வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல இலட்சம் ஏக்கர் காணிகளை தமிழர்களிடமிருந்து  பறித்து விட்டனர். ஒரு உதாரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 14 வீதமான நிலம் மட்டுமே இப்போது தமிழர் கையில் உள்ளது.

3. நூற்றுக்கணக்கான தமிழர்களின் வரலாற்று வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு விட்டன. 

4. பல நூற்றுக்கணக்கான  புத்த விகாரைகள் தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டு அவற்றைச் சூழவுள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைப் பிடித்து சிங்கள மக்களை அக்காணிகளில்   குடியேற்றியுள்ளார்கள்.  

5. போரினால் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை நிர்மூலமாக்கிவிட்டனர். தொடர்ந்தும்  சில இலட்சம் படையினரை தமிழர் பகுதிகளில் நிறுத்தி தமிழரை அடக்கி அவர்களின் சுதந்திர வாழ்வையும் உரிமைகளையும் பிடுங்கியுள்ளனர். நினைவாஞ்சலிக்கும் தடை விதித்துள்ளனர்..  

6. போரினால் மக்களை அழித்தும் பிற நாடுகளுக்குப் புலம்பெயரச் செய்தும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வெட்டிக் குறைத்துள்ளனர். உதாரணமாக யாழ்மாவட்டம்  11ல் இருந்து  7 ஆகிவிட்டது 

7. தனிச் சிங்களப் பவுத்த நாட்டை உருவாக்குவதில் 65 வீதம் வெற்றி பெற்றுள்ளதோடு  இன்னும் சிலவருடங்களில் அதை பூர்த்தி செய்யக் காத்திருக்கின்றனர்.   

தமிழர் தரப்பின் சாதனை:    

1. ஆறுதற் பரிசான மாகாண சபைகளும்கூட  முழுமையாக நடைமுறைப்   படுத்தப்படாததோடு குற்றுயிராக இருந்த சபைககளுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தல் நடத்தப்படவில்லை. 

2. கடந்த 14 வருடமாக எமது ஒரே சாதனையாக, பொறுப்புக் கூறலுக்கு மட்டும் குரல் கொடுத்தும் அதில்கூட ஒரு அங்குலமேனும் முன்னேறவில்லை. கொண்டு வந்த ஜெனீவாத் தீர்மானத்தை வீதியில் போட்டு தீயிட்டோம்.  மனித உரிமைப் பேரவை, தீர்மானங்களை  நிறைவேற்றினாலும் அதை இலங்கையில் செயற்படுத்தும் சக்தி, அதிகாரம் அந்தப் பேரவையிடம்  இல்லவேயில்லை. 

3.தாயகத்தில் ஒற்றுமையாக இருந்த தமிழரின் அரசியற்கட்சியை மட்டும் துண்டு துண்டாக உடைப்பதில் வெற்றி கண்டுள்ளோம். 

4. ஈழத்தமிழர் மேன்மையான சந்தோசமான சுதந்திர சுயாதீன வாழ்வை அடைவதற்கு  எந்தவிதமான நடைமுறைச் சாத்தியமான முழுமையான திட்டமும் (road map) இல்லாமல் தாயகத் தமிழரைப்  பணம் படைத்த புலம்பெயர் தமிழர் சிலர் ஆ நினைக்கிறார்கள்.  

5. தாயகத் தமிழர் பிரியாணி சாப்பிட உரிமை உள்ளவர்கள். அது கிடைக்கும்வரை வேறு எதையுமே சாப்பிடக்கூடாது. பிரியாணி இல்லையென்றால் பட்டினி இருந்து செத்து மடியுங்கள். அப்போதுதான் உங்களுக்குப்  பிச்சைபோட்டு  உங்களை நாம் ஆளலாம், என்று தாயகத்தமிழருக்குப் போதனை செய்துகொண்டு புலம்பெயர் தமிழர் சிலர் வெளிநாடுகளில் உல்லாசக் கொண்டாட்டங்களில் திழைத்துள்ளார்கள்.  

6. தாயகத் தமிழருக்கு குறிப்பிட்ட சில புலம்பெயர் தமிழரைத் தவிர வேறு யாருமே எந்த நன்மையையும் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் அவர்களைக் காட்டிக் கொடுப்போர்  அல்லது புறமுதுகில் குத்தும் துரோகிகள் என்று தனிப்படக் கொத்திக் குதறுகிறார்கள்.

7.தாயகத்தில் எதையுமே செய்யாது செய்ய வக்கில்லாமல் வெளி நாடுகளில் மட்டும் கொடி பிடிப்பதிலும் கூக்குரல் இடுவதிலும் எந்தத் தமிழனையும் சிந்திக்க விடாமல் ஊடக பலத்தால் உண்மைகளை மறைத்து கோப குரோத  உணர்ச்சிகளை மட்டும் ஊட்டி உசுப்பேற்றி அவர்களின் நிம்மதியான  வாழ்வைக் கெடுத்து ஒரு கொதி நிலையில் வைத்துக் கொண்டு  இல்லாதவர்களை இருப்பதாகக்  காட்டி  சில புலம்பெயர் தமிழர் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டி பண வசூல் செய்வதில் வெற்றிபெற்றுள்ளனர்.

75 வருடமாக வேறு எதையும் சாதிக்கவில்லை.  

ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?. 

இப்போது நமக்குள்ள ஒரே மாற்றுவழி இராஜதந்திர போராட்டமே. அதற்கு நம்மிடமுள்ள  ஆயுதம் அந்தத்துறையில் நமக்கு இருக்கக்கூடிய மூளைபலம் மட்டுமே. அந்தந்தப் போரை அந்தந்த வல்லுனரிடம் விடுவதே  விவேகமாகும். எல்லாப் போரையும் நாமே செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால் விளைவு பேரழிவுதான். மருத்துவர் தொழிலை  பொறியியலாளர் செய்ய முடியாது. உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகளை மிக மிக நுணுக்கமாக அறிந்து நமது பலம் பலவீனங்களை உணர்ந்து சந்தர்ப்பங்களைத்  தவறவிடாது மிகச் சரியான காய் நகர்த்தலை மட்டுமே நம்மால் செய்ய முடியும்.  அதையே  செய்யவேண்டும். அதுவே இராஜதந்திரமாகும்.

எப்படிச் செய்யலாம்?

1. நமது அரசியல் மற்றும் அனைத்து உரிமைகளையும் பறித்து வைத்திருப்பது  தென்னிலங்கை அரசுதான். அது வேறு எவரிடமும் இல்லை. அதைப் பறித்து வைத்திருக்கும் சிங்கள அரசிடமிருந்துதான் அதைத் திரும்பப் பெற வேண்டும். பறிக்கப்பட்ட எமது உரிமைகள் சர்வதேசத்திடம் இல்லை என்பதால் இலங்கை அரசை விலக்கி வைத்துக்கொண்டு சர்வ தேசத்திடம் இருந்து அதை நாம் பெறமுடியாது. சர்வதேசம் மருத்துவிச்சிப் பணிதான் செய்ய முடியும்.

2. இவ்வுலகில் எந்தவொரு நாடோ, மக்களோ தமக்கு லாபம் இல்லாமல் வெறும் நீதி அநீதி, தர்மம் அதர்மம் பார்த்து செயற்படுவதில்லை. தமிழர்களாகிய நாமோ  குறிப்பாக எமது பலம் வாய்ந்த  புலம்பெயர் தமிழர் அமைப்புகளோ கூட இதற்கு விதிவிலக்கல்ல.  ரோஹிங்கிய முஸ்லிம்களை எந்த முஸ்லீம் நாடும் காப்பாற்றவில்லை. இப்போது பாலஸ்தீன மக்களைக்கூட எந்த நாடோ உலகமோ காப்பாற்றவில்லை. இந்த யதார்த்தத்தை நாம் உணரவேண்டும்.

சர்வதேசத்திடம் நாம் ஏமாந்துவிடாமல் எம்மால் அவர்களுக்கும் நன்மை உண்டு என்ற  நிலையை உருவாக்கி அவர்களின் உதவியைப் பெறவேண்டும். இலங்கையின் பூகோள அமைவிடமே எமது துருப்புச் சீட்டாகும். தமது நன்மைக்காக, எமக்கு உதவியாக இலங்கை அரசுக்கு  தமது  அழுத்தங்களை பயன்படுத்துவதைத் தவிர சர்வதேசத்தால் வேறு எதையும் செய்ய முடியாது, செய்யப் போவதுமில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். பிராந்திய வல்லரசு இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஐக்கிய நாடுகள் சபையும் இப்படியான உலகநாடுகளின் சங்கம்தான்.அது தர்மதேவதையின் நீதிமன்றமல்ல.     

3. அரசகட்சி, எதிர்க்கட்சி என்று ஆட்சியைப் பிடிக்கும் போட்டியில் இனவாதமே அவர்களின் மலிவான சந்தைப் பொருள். எமது கோரிக்கையைப் பரிசீலிக்க ஒரு கட்சி முன்வந்தாலும் மறுகட்சி இனவாதத்தால் தடுத்து விடும். ஆனால் இருகட்சிகளும் சேர்ந்து ரணில் மைத்திரி அரசு ஏற்பட்டபோது கிடைத்த சந்தற்பத்தைப் பயன்படுத்தி ஒரு தீர்வுக்கு முயற்சித்தோம். 75 வீதம் முன்நகர்ந்தாலும் பின்னர் ரணில் மைத்திரி பகைமையால் அதுவும் தடைப்பட்டது. 

4. இப்போது நாடளாவிய பொருளாதாரப் பிரச்சனை பூதாகாரமாக எழுந்துள்ளது. அதுவும் நமக்கு சாதகமான சந்தர்ப்பமே. நாட்டின் இனப்பிரச்சனைதான் பொருளாதாரப் பிரச்சனையாக உருவெடுத்திருப்பதை சிங்கள மக்கள் குறிப்பாக இளம் சந்ததியினர் உணரத் தொடங்கி விட்டார்கள். ஜனாதிபதியைத் துரத்தும் அளவுக்கு;  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை காலிமுகத் திடலில் அனுட்டிக்கும் அளவுக்கு அந்த அறகளயப்  போராட்டம் அமைந்தது. அதனால் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தோடு வந்த ரணில் இராசபக்சவின் மொட்டுக் கட்சியால் ஜனாதிபதியானார். சிங்கள இளையோர் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியை மீண்டும்  மழுங்கடித்து இனவாத அரசியலை முன்னெடுப் பதிலேயே ரணில் இராசபக்ச அரசு இப்போது ஈடுபட்டுள்ளது.  

அதைத் தடுத்து விழிப்புணர்வு கொண்ட சிங்கள மக்களையும் அறிவுபூர்வமான சிங்களச் சிந்தனையாளரையும் இணத்துக் கொண்டு இலங்கையை இனவாத அரசியலில் இருந்து மீட்டு; யாரும்  இனஅடிப்படையில் பாதிக்கப்படாமல்  அனைத்து இனமக்களும்  சமமாக வாழக்கூடிய அரசை உருவாக்குவதே  எமது இராசதந்திரமாக இருக்க வேண்டும். அந்த வழியைத் தவிர எமக்கு வேறு வழியே இல்லை. வெறும் பழிவாங்கும் எண்ணம் தற்கொலை முயற்சியே. எமது இலக்கை அடைய வேறு நடைமுறைச் சாத்தியமான முழுமையான வேலைத்திட்டம் இருந்தால் யாரவது முன்வைக்கலாமே. வெறும் வாய்வீரம் பேசி காலம் கடத்த வேண்டாம். 

5. சிங்கள அரசியல்வாதிகள் தமது இனவாத அரசியலுக்கு படையினரை மட்டுமன்றி பவுத்த மதத் துறவிகளையும்  பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்தப் பொருளாதாரப் பிரச்சனை பவுத்தத் துறவிகளையும் சிந்திக்க வைத்துள்ளது. தாம் பவுத்த மததர்மத்தைக்  கைவிட்டதால்த்தான்  இப்படி வந்துள்ளதோ என்றும் அவர்களைச் சிந்திக்க வைத்துள்ளது. பலர் தமது தர்மபதப் புத்தகத்தைப் புரட்டத் தொடங்கியுள்ளார்கள். இந்த வாய்ப்பையும் நாம் பயன்படுத்த வேண்டும். அறகளைய  போராட்டத்தில் கணிசமான பிக்குகளும் பங்குபற்றினர். பவுத்த துறவிகள் இலங்கை அரசியலிலும் சிங்கள மக்களிடமும் மிகுந்த செல்வாக்கு உள்ளவர்கள். அவர்கள் பலத்தை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதே எமது சாதுர்யமாகும். ஆனால் ஏமாறாமல் இருப்பதுதான் எமது வல்லமையாக, வீரமாக இருக்க வேண்டும். 

இந்த அடிப்படையிலான செயற்பாடுகள்:

தமிழர் தரப்பில் எந்த அரசியற் கட்சியோ, அமைப்புகளோ இந்த அடிப்படையிலான  இராசதந்திர நகர்வுகளை இதுவரை முன்னெடுக்க முடியவில்லை. அதனால் சிந்தனையுள்ள  ஒருசில பவுத்ததுறவிகளும் ஒரு புலம்பெயர் தமிழ் அமைப்பும் சேர்ந்து இதில் இறங்கி உள்ளார்கள். அது அனைத்து அரசியற் கட்சிகளினதும், அனைத்துப் பவுத்த மதபீடங்களதும்  அனைத்து மத அமைப்புகளதும்  சிவில் அமைப்புகளதும்  சர்வதேசத்தினதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

அத்தனை தரப்பினரும் பச்சைக்கொடி காட்டியுள்ள இத்திட்டத்திற்கு தம்மைத்தாமே புலம்பெயர் தமிழரின் பிரதிநிதிகள் என்று கூறும் சிலரும் அவர்களின் பணத்திற்குத் தாளம் போடும் சில தாயக உதிரிக் கட்சிகளும்  எதிர்ப்பைத் தெரிவிப்பதன் நோக்கம் என்ன?. தமது வியாபாரம் முடங்கிவிடும் என்ற பயத்தைத் தவிர வேறு காரணம் இல்லை. யார் குத்தினால் என்ன அரிசியானால்  சரிதானே. இவர் குத்தக் கூடாதென்று நாம் ஏன் குத்தி முறிய வேண்டும். உங்களிடம் சாத்தியமான எந்த வேலைத்திட்ட வரைபடமும் கிடையாது. நீங்களும் செய்யாமல் செய்பவனையும் ஒழித்துவிட வேண்டுமா?  உங்களிடம் வேலைத்திட்டம் இருந்தால் அதைச் செய்யலாம்தானே? செய்ய வேண்டாம் என்று யாரும் தடுத்தார்களா?. 

நாம் சுயநிர்ணயத்திற்காக, சமஷ்டிக்காக, தனியான தேசத்திற்காக  மட்டும்தான்  போராடவேண்டும், முதலில் பொறுப்புக் கூறல் மூலம் இராசபக்சாக்களை தூக்கில் இடவேண்டும் வேறு எதையும் ஏற்கக்கூடாது என்று உடனடிச் சாத்தியமற்றவற்றை 14 வருடங்களுக்கு மேலாக கூறிக்கொண்டு அங்குள்ள மக்களை ஏமாற்றிக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க,  பிரியாணி வந்தாலும் அதைச் சாப்பிட அங்கு எவரும் இருக்க மாட்டார்கள். நிலம் எல்லாம் பறிபோய் பலரும் புலம்பெயர்ந்து தாயகத்தில் மக்களும் இல்லாவிட்டால்;  அப்படித்தான் பொறுப்புக் கூறலில் முழுவெற்றிபெற்று  இராசபக்சாக்களைத்  தூக்கில் போட்டாலும் கூட யாருக்கு என்ன லாபம்.  இராசபக்சாக்களைத் தூக்கில் போட்டாலும் அப்போதும்கூட  தமிழருக்கு வேண்டிய உரிமையைத்  தென்னிலங்கை அரசிடம் இருந்துதானே  பெறவேண்டும். எஞ்சியுள்ள தமிழ் மக்களையும்  நிலத்தையும் ஆவது காப்பாற்ற  உடனடியாக என்ன செய்யலாம் என்பது பற்றி யாராவது சிந்திக்கிறோமா?.  அல்லது எமது சுயலாப வியாபாரங்களைக்  கருதி வீறாப்புப் பேசிக்கொண்டு இனஅழிப்பு,  போர்க்குற்றம், பொறுப்புக்கூறல் பற்றி தமிழ் மக்களுக்கு மட்டும் பாடம் எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த இனத்தையும் பூண்டோடு  அழிக்கப் போகின்றோமா?.  

இலங்கையில் இப்போது மூன்றாவது தடவையாக உருவாக்கப்பட்ட  அரசியல் அமைப்பில்  20 தடவைக்குமேல் திருத்தம் செய்தாயிற்று. காலத்திற்கேற்ப சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படும். இப்போது உள்ள நிலைமைக்கு ஏற்ப ஒரு அரசியல் அமைப்பை ஏற்படுத்தினால் நாட்டில் நிலைமை சீரடையும்போது அதைத் திருத்த முடியாதென்றோ  அல்லது இன்னொரு புதிய அரசமைப்பை உருவாக்க  முடியாதென்றோ சொல்வது மக்களை ஏமாற்றும் தந்திரமே. இருப்பதைச் சாப்பிட்டு அந்தப் பலத்தில்  நின்றுகொண்டு  பிரியாணிக்குப் போராடுவதே பகுத்தறிவான செயலாகும். முதலில் எஞ்சியுள்ள நிலத்தையும் மக்களையும் தக்கவைக்க உடனடியாகச்  செய்யக் கூடியத்தைச் செய்ய வேண்டும். பொறுப்புக்கூறல் மூலம் இராஜபக்சாக்களைத்  தூக்கிலிடும் உடனடிச் சாத்தியமற்ற விடயத்தைச்சொல்லிக் காலம்கடத்தினால் சிங்கள பவுத்த நாடு அமைந்துவிடும். அதை உடனடியாகத் தடுக்க வேண்டாமா?. 

இமாலய பிரகடனம்:

புரிந்துணர்வு உரையாடல்களை அனைத்து மத; இன மக்களும் சேர்ந்து முன்னெடுப் பதற்கான ஒரு அடிப்படை ஆரம்ப இணக்கப்பாடுதான் இந்த பிரகடனம். ஆறு  அம்சங்களைக் கொண்ட  இந்த “இமாலய பிரகடனத்தில்” 5 வது பரிந்துரையில்  பொறுப்புக்கூறலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதையும் நாங்கள் நிட்சயமாகத்  தொடருவோம். தொடர வேண்டும். சிங்கள அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுக்க உதவும். 

பூரணமான மாகாண அதிகாரப்பகிர்வு, இனவேறுபாடின்றி  சமஉரிமை, அனைவருக்கும் சமசந்தர்ப்பத்தை உறுதிப் படுத்தக்கூடிய புதிய அரசியல் அமைப்பு என்பன 3 வது பரிந்துரையில் வலியுறுத்தப் படுகின்றது. அதுவரை தற்போதுள்ள அதிகார பகிர்வினை  இதயசுத்தியோடு  முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும் எனறும்  உள்ளது. இனம் அல்லது மதம்  சார்ந்து எந்தப் பாகுபாடுமில்லாத மீளப்பெற முடியாத அரசியலமைப்பைத் தவிர வேறென்ன நமக்கு வேண்டும். சிங்கள மக்களையும் நாமே ஆளவேண்டுமா?.

இது ஒரு சிவில் சமூகச் செயற்பாடு. அரசியற் செயற்பாடு அல்ல. இருதரப்பிலும் உள்ள பயங்களை சந்தேகங்களை அகற்றி மக்களை ஒற்றுமையாக்கி  பிரச்சனையைத் தீர்ப்பதில் இருக்கும் தடைகளை நீக்குவதற்கான முயற்சியாகும். அவர்களின் வேலைத்திட்ட வரைபடத்தின் முதலாம் கட்டம் இது. இதனால் அதிகாரபீடம்  பிரச்சனையைத் தீர்க்க நிர்ப்பந்திக்கப்  படுவதோடு இனவாத சாக்கடை அரசியலிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவும் உதவும். இது பிரச்சனையின் ஆணிவேரைப்  பிடுங்கி எறியும் பொதுமக்கள் முயற்சியே அல்லாமல் அரசு செய்யவேண்டிய அரசியற் செயற்பாடு அல்ல. இறுதியில் மக்கள் பிரதிநிதிகள்தான் அதை அறுவடை செய்யவேண்டும். இது ஒரு தூரநோக்கோடு தமிழரின் பிரச்சனையைத் தீர்க்க போடப்பட்டுள்ள (Road Map)  வரைபடமாகும். தாயகமக்களின்  நலனில் சுயநலமற்ற உண்மையான  அக்கறை உள்ள தமிழ் மக்கள் இதை முற்றிலுமாக   ஆதரித்து தாயகத்தில் அவதிப்படும் மக்களை மீட்டெடுக்க முன்வர வேண்டும்.   

பிரகடன எதிர்ப்புகள்:

பொறுப்புக்கூறல் மழுங்கடிக்கப் படுவதாகச் சொல்வது வெறும் ஏமாற்று யுக்தி. அரசதலைவர் என்ற வகையில் மகிந்தவோடு நாம் பேசிவிட்டோம் என்பதற்காக அவர் செய்த குற்றங்கள் குற்றமில்லை என்று ஆகிவிடாது. இதை விளங்காத சர்வதேசம் இருக்க முடியாது. பொறுப்புக்  கூறல் தொடரும். ஒரு அளுத்தத்தைக் கொடுக்கவாவது அது தொடரப்பட வேண்டும். 

மற்றது மகிந்தவைச் சந்தித்து படமெடுத்த துரோகம்:-

இலங்கை அரசு என்றால் அது நாடாளுமன்றமே . இன்றய நாடாளுமன்றத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மொட்டுக் கட்சிதான். மொட்டுக்கட்சியின் தலைவர் மகிந்ததான். சிங்கள ஆட்சியாளரோடுதான் பேச வேண்டும் என்றால் இன்றய நிலையில் மகிந்தவோடுதான் பேசவேண்டும். நாட்டு அரசோடு பேசாமல் நாட்டு மக்களோடு  பேசமுடியாது. அதே மகிந்தவோடு   நாடாளுமன்றத்தில் அத்தனை தமிழ்ப் பிரதிநிதிகளும்  இருந்து பேசுகின்றார்கள்,பேசத்தான் வேண்டும். மகிந்த இருக்கிறார் என்பதற்காக நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்க முடியுமா?. மகிந்தவோடு சுரேன் பேசினால் மட்டும் தீட்டுப் பட்டு விட்டதா?. புலிகள்கூட மகிந்த அரசோடுதான் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சுயநல, பணபல, ஊடகபல, உணர்ச்சிவச செயற்பாடுகள் மூலம் பெரும்பாலான  தமிழரை  மூளைச்சலவை செய்து தமது இருப்பையும் பொருளீட்டலையும் பாதுகாத்துவந்த தரப்பினர் மண்ணெண்ணெய் பட்ட சாரைப்பாம்பு போல துடிக்கிறார்கள். தற்செயலாக இதன்மூலம் தமிழருக்கு ஏதாவது கிடைத்து விட்டால் தமது தொழில் படுத்து விடுமே என்ற பயத்தில் கன்னாபின்னா என்று அலறத் தொடங்கி விட்டார்கள். கருத்தை கருத்தால் எதிர் கொள்ளாமல் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தனிப்பட்ட முறையில் தாறுமாறாகத் தாக்கத் தொடங்கியுள்ளார்கள். வெறும் கற்பனையில் சோடித்து இது ரணிலின் திட்டம், மகிந்தவின் திட்டம், அமெரிக்காவின் திட்டம் என்றெல்லாம் எந்தவிதமான அடிப்படை உண்மையும் அறவே இல்லாமல் காட்டிக் கொடுக்கும் துரோகி, முதுகில் குத்துகின்றான்  என்று வெறும் கட்டுக்கதைகளைப்  புனைந்து ஏகபோக ஊடகபலத்தால் தமது பக்கக் கருத்துக்களையே பரப்பிக்  கொண்டிருப்பதால் உண்மை உணராத நல்ல தமிழரும் ஏதோ அநியாயம் நடந்து விட்டதோ, அபாயம் வருமோ என்று வருந்துகிறார்கள். அந்த நல்ல தமிழருக்காகவே இந்த விளக்கங்களைத்  தருகின்றோம்.

இக்கட்டுரை ஆசிரியர் வின் மகாலிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கனடா கிளையின் காப்பாளராவார்