ஈரோடு இடைத் தேர்தல்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராகிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 110,039 வாக்குகளைப் பெற்று 65,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டியிருக்கிறார். 77 வேட்பாளர்கள் போட்டியிட்ட இத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் 15 தடவைகள் திரும்பத் திரும்ப எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியின் வேட்பாளர் கே.எஸ். தென்னரசு 43,981 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராகைய மேனகா நவநீதன் 7,974 வாக்குகளைப் பெற்று மூன்றாமிடத்திலும் இருக்கிறார்கள். விகிதாசாரத்தில் தி.மு.க.-காங்கிரஸ் 65% வாக்குகளையும், அ.இ.அ.தி.மு.க. – பா.ஜ.க. 25.3 % வாக்குகளையும், நா.த.க. – 8.3% வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.
பெப்ரவரி 27 ஆரம்பித்த வாக்களிப்பு மின்னியக்க வாக்களிப்பு இயந்திரங்களின் உதவியுடன் நடைபெற்றது. 100 அதிகாரிகள் கொண்ட குழு வாக்குகளை எண்ணுவதற்காக நியமிக்கப்பட்டிருந்தது. வாக்குகள் என்ணும் நிலையத்தைப் பாதுகாப்பதற்காக 450 பாதுகாப்பு அதிகாரிகளும், 48 கண்காணிப்பு கமெராக்களும் பாவனையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன(ர்).
ஈரோடு கிழக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியும், தந்தை ஈ.வெ.ரா. பெரியாரின் பூட்டனுமான ஈ.திருமகன் ஈவெரா அவர்கள் ஜனவரி 4ம் திகதி அகால மரணமடைந்ததின் காரணமாக இத் தேர்தல் நடைபெறவேண்டி இருந்தது. அவ்வெற்றிடத்தை நிரப்புவதற்காக திருமகனின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் திருமகன் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியிட்டியிருந்தார். நடந்து முடிந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தனது ஆதரவை தி.மு.க. கூட்டணிக்கு வழங்கியிருந்தது.
இத் தேர்தல் ஆளும் கட்சியான தி.,மு.க. வின் நிலைப்பாட்டில் மாற்றம் எதையும் கொண்டுவரமாட்டாதென்றாலும் 2024 இல் நடைபெறவிருக்கும் இந்திய பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. – அ.இ.அ.தி.மு.க. கட்சிகளுக்கிடையேயான பலப்பரீட்சையில் இரு கட்சிகளின் நிலைப்பாடுகள் எப்படியிருக்குமென்பதற்கான ஒரு முற்பார்வையாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இது தி.மு.க. முன்வைத்துவரும் ‘திராவிட மாதிரி’ க்கு கிடைத்த மாபெரும் வெற்றியெனவும் மக்கள் அதை ஏற்றுக்கொண்டுள்ளதற்கான வெளிப்பாடே அதுவெனவும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் நாம் வெல்லப்போகிறோம் என்பதையே இது காட்டுகிறது எனவும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதே வேளை, தேர்தல் முடிவுகள் பற்றி தோற்றுப்போன நாம் தமிழர் கட்சி வேட்பாளார் மேனகா ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசியபோது இத் தேர்தலில் வேட்பாளருக்கான செலவு 39 இல்டசம் ரூபாய்கள் மட்டுமே என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருந்தும்கூட தி.மு.க. கூட்டணி 400 கோடி ரூபாய்கள் வரை செலவிட்டுள்ளார்கள் எனவும் வறுமைப்பட்ட மக்களுக்கு மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கென 5000 ரூபா டோக்கன்களை வழங்கியிருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் வெளிவந்த கருத்துக்கணிபொன்றில் இத் தேர்தலில் நா.த.க. 49.6% வாக்குகளைப் பெற்று வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது என உறுதிப்படுத்தப்படாத செய்தியொன்று வெளிவந்திருந்தது. பிரியாணிப் பார்சல்களும், டாஸ்மார்க், மளிகைக்கடை டோக்கன்களுமே தமிழ்நாடு தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கிறது என்ற குற்றச்சாட்டு மிக நீண்டகாலமாக இருந்துவருகிறது.
பெரும்பான்மையான தமிழ்நாடு மற்றும் இந்திய ஊடகங்கள் நா.த.க. பற்றியோ அதன் வேட்பாளர்களது பிரசாரங்கள் பற்றியோ எதையும் பிரசுரிப்பதில்லை என்பதும் இக் கட்சி தனது பிரசாரங்களுக்காக சமூக ஊடகங்களை மட்டுமே நம்பியிருக்கவேண்டிய நிலை உள்ளது என்பதும் குறிப்பிடப்படவேண்டியவை.