ஈரான்: பெண்களின் தலைக்கவசத்துக்கு எதிரான போராட்டம் – இதுவரை 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

அயத்தொல்லா அலி கமேனிக்கு மரணதண்டனை விதிக்குபடி போராட்டக்கார கோஷம்!

ஈரானின் ‘ஒழுக்கக் காவலர்களினால்’ (morality police) சமீப காலங்களில் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தி வருகின்றன. ‘ஹிஜாப்’ எனப்படும் தலைக்கவசத்தை அணியாமைக்காகக் கைதுசெய்யப்பட்ட 22 வயதான மஹாசா அமீனி என்ற பெண் தடுப்புக்காவலில் மரணமடைந்ததைத் தொடர்ந்து இப் போராட்டங்கள் ஆரம்பித்தன. 10 நாட்களாகத் தொடரும் இப் போராட்டம் ஈரானின் பல நகரங்களுக்கும் பரவிவருகிறதெனவும் காவல்துறையினருடனான மோதலில் இது வரை 75 பேர் வரையில் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

செப்டம்பர் 17 அன்று ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் தற்போது 46 நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறதெனவும் போராட்டக்காரரின் முக்கிய கோரிக்கையாக “அயத்தொல்லா கமேனிக்கு மரணம்’ என்ற கோஷம் முன்வைக்கப்பட்டு வருகிறதெனவும் கூறப்படுகிறது. இதுவரை 1200 போராட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 13 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினாலும் உண்மையான தொகை 75 க்கு மேலானது எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்போராட்டங்களின் பின்னால் அமெரிக்காவே இருக்கிறது எனவும் அமெரிக்க கூலிப்படைகள் இஸ்லாம் மதத்தை அழிக்கப் போராடுகிறார்கள் எனவும் ஈரானிய அரசு கூறிவருகிறது. இக்கருத்தை ஊக்குவிக்குமுகமாக அரசாங்கத்துக்குச் சார்பான ஊர்வலங்கள் ரெஹ்ரானிலும் வேறு பல நகரங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போராட்டக்காரர் இல்குவில் ஒன்றிணைய முடியாது த்டுக்க அரசு இன்ஸ்டாகிராம், லிங்ட்டின் மற்றும் வட்ஸப் ஆகிய சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்தியுள்ளது.

போராட்டங்களில் பெண்கள் தமது தலைமுடிகளை வெட்டுவதும், தலைக்கவசங்களுக்குத் தீமூட்டி எரிப்பதும் எனப் பலவழிகளில் தமது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் பாதுகாப்பு படையினர் மோட்டர் சைக்கிள்களில் வந்து ஆர்ப்பாட்டக்காரரைத் தாக்குவதும் சில்ர் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதும் காணொளிகளில் வெளிவந்திருக்கிறது.

சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் வாகனங்களைத் தாக்கி புரட்டிப்போடுவது, தீவைப்பது எனப் போராட்டம் வன்முறையை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. (Image Credit: AP)