ஈரான்|உதைபந்தாட்ட ரசிகை நீதிமன்றத்தின் முன் தீமூட்டித் தற்கொலை -

ஈரான்|உதைபந்தாட்ட ரசிகை நீதிமன்றத்தின் முன் தீமூட்டித் தற்கொலை

Spread the love
பெண் என்பதால் விளையாட்டரங்கினுள் அனுமதிக்கபடவில்லை.

ரெஹ்ரான், ஈரான் – உதைபந்தாட்ட ரசிகை ஒருவர் பெண் என்பதால் அரங்கத்தினுள் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் இதனால் அவள் ஆண் வேடமிட்டு நுழைய முற்பட்டபோது பிடிபட்டு நீதிமன்றத்துக்குக் கொண்டுபோகும் வேளையில் அதன் வாசலில் வைத்துத் தன்னைத் தானே தீமூட்டி எரித்துக்கொண்டதாகவும் அறியப்படுகிறது.

சஹார் கோதாயரி என்ற இப் பெண் கடந்த மார்ச் மாதம் அங்குள்ள அசாடி உதைபந்தாட்ட அரங்கினுள் அவள் விசுவாசிக்கும் குழு விளையாடியதைப் பார்ப்பதற்காக ஆண் வேடத்தில் நுழையா முற்பட்டிருக்கிறாள். துரதிர்ஸ்டவசமாக அவள் பிடிபட்டு ரெஹ்ரான் நீதிமன்றத்தில் ஆஜராகத் தயாராகும் போது தனக்கு 2 வருடம் சிறைத்தண்டனை கிடைக்கபோகிறது என்பதை அறிந்ததும் தன்னைத் தானே தீ மூட்டிக்கொண்டு விட்டதாக அறியப்படுகிறது. மருத்துவ மனைக்கு அவளை எடுத்துச் சென்ற போதிலும் அவளது உடம்பு 90 வீதம் எரிந்து விட்டதால் சிகிச்சை பலனளிக்காமல் திங்களன்று இறந்துவிட்டாள்.

29 வயதான கோதாயரி அசாடி அரங்கில் அவளது அபிமான விளையாட்டுக்குழுவான எஸ்ரெகியல் விளையாடுவதைப் பார்ப்பதற்காக ஆண் வேடமிட்டுச் சென்றிருக்கிறாள். விளையாட்டரங்குகளில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்பது சட்டத்துக்குப் புறம்பு என வரையறுக்கப்படவில்லையாயினும் அவள் பெண்ணாயிருந்துகொண்டு தலைக்கவசம் அணியவில்லை என்பதற்காகவே கைதுசெய்யப்பட்டாள் எனத் தெரியவருகின்றது.

அவளது பெற்றோர் அவளைப் பிணையிலெடுக்க முயற்சித்தனராயினும் சம்பவம் நடைபெற்றது ஒரு வார விடுமுறையாதலால் அவள் மூன்று நாட்கள் சிறையிலிருக்க நேரிட்டது.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களை விளையாட்டரங்குகளில் அனுமதிப்பதை மறுக்கும் சட்டத்துக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

“9 வயதுப் பெண் திருமணம் செய்யலாம் ஆனால் 20 வயதுப் பெண் விளையாட்டரங்கினுள் நுழைய அனுமதியில்லை” என ஒருவர் தனது ருவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். சமீபத்தில் 9 வயதுள்ள சிறுமிக்குத் திருமணம் செய்ய முற்பட்டபோது பலமான எதிர்ப்புக் கிழம்பியதால் திருமணம் கைவிடப்பட்டது என்பதை சார்ந்தே அவர் அப்படிச் செய்தியை அனுப்பினார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  Explainer: US Iran Conflict history explained | BBC Tamil