NewsNews & AnalysisWorld

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் செய்ய உடன்பட்டன!

வெள்ளி அதிகாலை 2:00 மணி முதல் அமுலுக்கு வரும்

11 நாட்களாக நடைபெற்றுவந்த போரை நிறுத்துவதற்கு உடன்படுவதாக இஸ்ரேலும் பாலஸ்தீன அமைப்புக்களும் உடன்படுவதாக அறிவித்துள்ளன.

எகிப்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இஸ்ரேல் தரப்பின் பாதுகாப்பு அமைசச்சரவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் நெட்டன்யாஹு வின் அலுவகத்தால் சற்று முன் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது. இதன் பிரகாரம் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் இணங்கியுள்ளர் எனத் தெரிகிறது.

பாலஸ்தீன நேரம் அதிகாலை 2:00 மணிக்கு வாடைமுறைக்கு வரும் இப் போர்நிறுத்தத்திற்கு பாலஸ்தீன அமைப்புக்களான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் ஆகியன இணங்குவதாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளன.

கடந்த 11 நாள் போரின்போது 65 குழந்தைகள் உட்பட 232 பாலஸ்தீனியர்களும், இரண்டு குழந்தைகள் உட்பட, 12 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 11 நாட் போரின்போது அழிக்கப்பட்ட காசா பிரதேசத்தை மீள்நிர்மாணம் செய்து தருவதாக எகிப்து, ஐ.நா.சபையின் பொதுச் சபை உறுப்பினர்களுக்கு உறுதி வழங்கியுள்ளது.

“இந்த தடவை அது (போர் நிறுத்தம்) தாக்குப்பிடிக்குமெனத் தாம் நம்புவதாக பாலஸ்தீனியரான மொஹமட் இட்ரிஸ் தெரிவித்தார்.

“நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், ஒரு உயிரைக் காப்பாற்றுமானால் கடைசி நிமிடம்வரை நாங்கள் அம்முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருப்போம்” என அவர் தெரிவித்தார்.

“அங்கம் இங்குமாக சில குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. அத்தோடு பல ட்றோண்கள் பறந்துகொண்டிருக்கின்றன. எனவே 2:00 மணிக்கு யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வருமெனவே எதிர்பார்க்கிறோம்” என மொஹாமெட் மேலும் தெரிவித்தார்.

90,000 பேர் இதுவரை இடம்பெயர்க்கப்பட்டுள்ளதாகவும், ஐ.நா. நிவாரண ஒருங்கிணைப்பு அதிகாரிகள் இடம்பெயர்க்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்துவருவதாகவும் தெரிய வருகிறது. இவர்களில் 66,000 பேர் ஐ.நா. பாடசாலைகளிலும், 25,000 பேர் இதர குடும்பங்களினால் அபயமளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.