World

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் போர் நடவடிக்கைகள் 1948 இல் கைச்சாத்திடப்பட்ட ஐ.நா. இனப்படுகொலை சாசனத்திற்கு முரணானவை எனக்கூறி இஸ்ரேல் மீது அவசரமான வழக்கொன்றை சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) தென்னாபிரிக்கா பதிவுசெய்துள்ளது.

உலக நீதிமன்றம் என அழைக்கப்படும் உலக நாடுகளுக்கிடையேயான பிணக்குகளைத் தீர்க்கும் ஐ.நா.சபையின் நீதிமன்றத்தில் பதியப்பட்ட குற்றச்சாட்டு ஆதாரமில்லாதது என இது குறித்து இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

1948 இல் ஜேர்மனியால் மேற்கொள்ளப்பட்ட யூதர்களின் மீதான படுகொலையை நிறுத்துவதற்காக ஐ.நா. சபையினால் உருவாக்கப்பட்ட இச்சாசனத்தில் “ஒரு இன மக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்க முற்படுவது இனப்படுகொலைக்குச் சமமானது” என வரைவு செய்யப்பட்டுள்ளது. இச்சாசனத்தில் கையெழுத்திட்ட நாடுகள் இப்படியான படுகொலைகளில் ஈடுபடுவது குற்றமாகும். 1951 இல் இஸ்ரேல் இச்சாசனத்தில் கையெழுத்திட்டது. இலங்கை உட்பட தற்போது மொத்தமாக 196 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன.

காசாவில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பபட்டுவரும் படுகொலைகளை நிறுத்துவதற்கு இந்நீதிமன்றம் தற்காலிக அல்லது குறுங்கால போர்நிறுத்தமொன்றை அறிவிக்கும்படி இஸ்ரேலை நிர்ப்பந்திக்க வேண்டுமெனவும் அதே வேளை பாலஸ்தீனிய மக்களின் உரிமைகளுக்கு ஆற்றமுடியாத தீங்குகளை அது இழைப்பதிலிருந்து அம்மக்களைக் காப்பாற்ற வேண்டுமெனவும் தென்னாபிரிக்கா உலக நீதிமன்றத்தில் வழக்கைப் பதிவு செய்துள்ளது. இவவழக்கின் மீதான விசாரணைக்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஹேக் நகரில் அமைந்திருக்கும் இந்நீதிமன்றத்தின் முடிவுகளை அதிகாரத்திலிருக்கும் நாடுகளும் அவற்றின் ஆதரவான நாடுகளும் உதாசீனம் செய்வது வழக்கம். மார்ச் 2022 இல் யூக்கிரெய்ன் தாக்குதல்களை உடனடியா நிறுத்துமாறு ரஸ்யா மீது இப்படியான ஒரு வழக்கு உலக நீதிமன்றத்தில் பதியப்பட்டிருந்தது.

இவ்வழக்கு தொடர்பாக பதிலளித்த இஸ்ரேலிய அரசு “பாலஸ்தீனிய மக்களை ஹமாஸ் மனிதக் கேடயங்களாகப் பாவித்தமையால் தான் தாம் தாக்கவேண்டி ஏற்பட்டது; பாலஸ்தீனிய மக்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை ஹமாஸ் போராளிகள் திருடுகிறார்கள்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளது. ஹமாஸ் போராளிகள் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்கள்.

இதே வேளை ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இஸ்ரேலுக்கு எதிராக தொடரப்பட்ட இன்னுமொரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. காசாவிலும் மேற்குக் கரையிலும் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலைகளை நிறுத்தும்படி பதியப்பட்ட இவ்வழக்கில் குற்றவாளிகளாக எவரும் குறிப்பிடப்படவில்லை. அதே வேளை இதற்கான ஐ.நா. சாசனத்தில் இஸ்ரேல் கையெழுத்திடவில்லை என்பதனால் அதன் தீர்மானங்களை இஸ்ரேல் நிராகரிக்க வாய்ப்புண்டு.

உலக நீதிமன்றத்தைப் பொறுத்தவரை பாலஸ்தீனம் ஒரு நாடு என்ற அந்தஸ்தில் இல்லையாயினும் “அவதான நாடு” (observer state) என்ற அந்தஸ்தில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும்.

பாலஸ்தீன-இஸ்ரேல் போர் தொடங்கிய காலத்திலிருந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகக் கடுமயாகாக் குரல் கொடுத்துவரும் ஒரு நாடு தென்னபிரிக்கா. பாலஸ்தீன மக்களின் தனி நாட்டிற்கான போராட்டத்தை அது மிக நீண்டகாலமாக ஆதரித்து வருகிறது. தற்போதய இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டித்து தென்னாபிரிக்காவிலுள்ள இஸ்ரேலிய தூதரகத்தை அது மூடிவிட்டதுடன் இஸ்ரேலுடனான ராஜரீகத் தொடர்புகளையும் அது துண்டித்திருக்கிறது.

அக்டோபர் 07 இல் ஹமாஸ் ஆரம்பித்த இப் போரின் காரணமாக இதுவரை 1200 இஸ்ரேலிய பொதுமக்கள் கொல்லப்பட்டும் 240 இஸ்ரேலியர் பணயக்கைதிகளாகக் கைதுசெய்யப்பட்டுமுள்ளனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்ட பதில் தாக்குதல்களினால் 21,000 பாலஸ்தீனியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளார்கள்.