World

இஸ்ரேலில் ‘அரகாலயா’: நெட்டன்யாஹு மாலைதீவிற்கு ஓடுவாரா?

சிவதாசன்

பல மாதங்கள் நடைபெற்ற தொடர்ச்சியான நாடுதழுவிய, மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேலிய அரசினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காமையால் அரசு கொண்டுவரவிருந்த பிரச்சினைக்குரிய சட்டமீளாய்வைப் பின்போடுவதாக பிரதமர் நெட்டன்யாஹு நேற்று அறிவித்திருக்கிறார்.

“ஒரு சிறிய தீவிரவாதக் குழு இந்நாட்டைத் துண்டு துண்டாக்க எடுக்கும் முயற்சி மக்கள் கலகமாக மாறக்கூடும். இருப்பினும் பேச்சுவார்த்தைகளுக்கு மேலுமொரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக நான் இதை அறிவிக்கிறேன்” என தனது அரசியல் கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் இஸ்ரேலிய பிரதமர் நெட்டன்யாஹு இப்படிக் கூறியிருக்கிறார்.

பின்னணி

இஸ்ரேலில் நடைபெற்றுவரும் இவார்ப்பாட்டங்கள் ஜனவரி 7ம் திகதி ஆரம்பமாகியிருந்தன. இஸ்ரேலின் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களைக் குறைத்து அமெரிக்காவிலுள்ளதைப் போல் அதன் நீதிபதிகளை ஆளும் அரசு நியமிக்கவேண்டும் என்பதுட்படப் பல சட்ட மாற்றங்களைக் கொண்டுவர நெட்டன்யாஹு தலைமையிலான தற்போதைய வலதுசாரி அரசு தீர்மானித்திருந்தது.

மேற்குலக ஜனநாயக நாடுகளில் அடிக்கடி ஆட்சி மாற்றம் நிகழும் ஒரு நாடாக இஸ்ரேலும் இருக்கிறது. 1949 இல் நாடு உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை குறைந்தது 25 பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தீவிர வலதுசாரிகள், மிதவாதக் கட்சிகள் எனப் பல அவ்வப்போது கூட்டமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டு ஆட்சிகளை அமைப்பதும் கொள்கை முரண்பாடுகளால் ஆட்சிகள் கவிழ்க்கப்படுவதும் வழக்கம். 2018 இல் அடிக்கடி நடைபெற்ற பல பாராளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து பெரும்பானமை கிடைக்காமையால் யார் ஆட்சியை அமைப்பது என்பது இழுபறியாக இருந்துவந்தது. இறுதியாக 2021 இல் ஒரு ஆசனப் பெரும்பான்மையுடன் யயர் லபிட் தலைமையில்,கூட்டமைப்பு அரசு ஒன்று ஆட்சிக்கு வந்தது. இருப்பினும் 2022 ஜூன் மாதத்தில் பெரும்பான்மையை இழந்ததால் அவ்வாட்சியும் கலைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நெட்டன்யாஹுவின் கட்சி தீவிர வலதுசாரி மதவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து டிசம்பர் 2022 இல் புதிய அரசாங்கத்தை அமைத்தது.

தொடர்ச்சியான ஆட்சி மாற்றங்களைத் தடுத்து நிறுத்தி நிலையானதும் ஸ்திரமானதுமான ஆட்சியை நிறுவுவதற்காக இக்கூட்டமைப்பு அரசு பல சட்ட மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டம் தீட்டியது. நீதியமைச்சர் யாரிவ் லெவின் அறிவித்த இச்சட்ட மாற்றத்தில் இதுவரை சுயாதீனமாக இயங்கிவந்த உச்சநீதிமன்றத்தைப் பாராளுமன்றத்தின் கீழ் கொண்டுவருவது முக்கியமான ஒன்று. (இலங்கையில் கோதாபய ஜனாதிபதியாக ஆட்சியேற்றதும் இதையேதான் செய்ய முயற்சித்தார்) அமெரிக்காவிலுள்ளதைப் போல உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் அப்போதைய அரசாங்கங்களுக்கு உண்டு. இதை எதிர்த்து ஜனவரி 7, 2023 அன்று ரெல் அவிவில் தெருப் போராட்டங்களை மக்கள் ஆரம்பித்தார்கள். இதர நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட் வார நாட்களில் சுழற்சி முறையில் போராட்டங்கள் விஸ்தரிக்கப்பட்டன. அரசின் இவ்வுத்தேச சட்ட மாற்றங்களுக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் (புலம் பெயர் யூத மக்களால்) பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. இஸ்ரேலின் அரகாலயா முளை கொண்டது. (Photo Credit:BBC)

அமைப்பாளர்களின் கருத்துப்படி முதலாவது ஆர்ப்பாட்ட நிகழ்வுகளில் மட்டும் 630,000 மக்கள் கலந்துகொண்டார்கள். இது இஸ்ரேலிய வரலாற்றிலேயே முதன்மையானதாகும். ரெல் அவிவ், ஹைஃபா, பீர்ஷேபா, ஜெருசலேம் எனப் பல நகரங்களிலும் ஒரே காலத்தில் பல ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளிலும் இந்த ‘அரகாலயா’ புகுந்துகொண்டது. இஸ்ரேலின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் வரலாமென்ற நிலை உருவாகியது. இதனால் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோயவ் கலண்ட் இவ்வுத்தேச சட்டமாற்றங்களைத் தற்காலிகமாக நிறுத்தும்படி கோரிக்கை விடுத்தார். இதனால் ஆத்திரம் கொண்ட நெட்டன்யாஹு அடுத்த நாளே பாதுகாப்பு அமைச்சரைப் பதவியிலிருந்து விலக்கினார். இதன் காரணமாக மேலும் பல்லாயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக் காரர்கள் 150 இடங்களில் தெரு மறியல்களைச் செய்தார்கள். பாதுகாப்பு அமைச்சரைப் பதவி நீக்கம் செய்தமையை எதிர்த்து நியூ யோர்க்கிலுள்ள இஸ்ரேலிய தூதரகப் பிரதிநிதி அசாஃப் சாமிர் தானும் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். இஸ்ரேலிய பல்கலைக்கழகங்கள் பணிமறுப்புச் செய்தன. 23 உள்ளூராட்சி உறுப்பினர்கள் பிரதமர் அலுவலகத்துக்கு முன்னால் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட இஸ்ரேலிய அரகாலயர்கள் அங்குள்ள பாதுகாப்பு அரண்களை உடைத்து முன்னேறினார்கள்.

மார்ச் 27 (நேற்று) இஸ்ரேலிய ஜனாதிபதி பிரதமர் நெட்டன்யாஹுவை அழைத்து சட்டமாற்ற முயற்சியை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். “இஸ்ரேல் நாட்டு மக்களின் ஒற்றுமையைப் பேணுவதற்காக இச்சட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுகொள்கிறேன். இதர கட்சிகளின் தலைவர்கள், எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் நனமைக்காக துணிச்சலுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ளும்படி நான் கேட்கிறேன்” என அவர் பொதுப்படக் கோரிக்கையொன்றை முன்வைத்தார். நாட்டின் தொழிற்சங்கங்கள் பணிமறுப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்தன. நாட்டின் பிரதானமான பென்கூரியன் விமான நிலையம் செயலிழந்தது. வரலாற்றில் முதல் தடவையாக இஸ்ரேலிய மருத்துவர் சங்கம் பணிமறுப்புச் செய்யப்போவதாக அறிவித்தது. எல்லாவற்றிலும் மேலாக அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலுமுள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் ஒரு நாட் கதவடைப்பை மேற்கொண்டன.

வேறு வழியில்லாமல் பிரதமர் நெட்டன்யாஹு சட்டமாற்ற உத்தேசத்தைப் பின்போடுவதாக அறிவித்தார்.

இஸ்ரேலிய அரகாலயாவும் தற்காலிக வெற்றியைக் கொண்டாடுகிறது. அதன் ‘கோதாபய’ இன்னும் நாட்டைவிட்டு ஓடவில்லை. இந்த அரகாலயா பிசு பிசுத்துப் போகாவிட்டால் இலங்கையில் அரகாலயா 3.0 முளைவிடுவதற்கு உத்வேகத்தைக் கொடுக்கலாம்.

பார்ப்போம்.