World

இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் குரூர, மனிதத்தன்மையற்ற ஈனச் செயல்களைப் புரிகிறார்கள் – ஐ.நா. விசேட குழு

பாலஸ்தீனிய மற்றும் 1967 போரின்போது கைப்பற்றப்பட்ட அரபு பிரதேசங்களில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடந்துகொள்ளும் முறை பற்றி விசாரிக்கவென ஐ.நா. பொதுச்சபையால் நியமிக்கப்பட்ட விசேட குழு தனது அறிக்கையை நேற்று (25) வெளியிட்டிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பாலஸ்தீனிய பொதுமக்கள் மீது அது புரியும் செயற்பாடுகள் குரூரமானதும், மனிதத்தன்மையற்றதும், மிகவும் கீழ்த்தரமாக அவமானப்படுத்தும் செயல்களாக இருக்கின்றன என இக்குழு தெரிவித்துள்ளது. அம்மான், ஜோர்தானில் அவர்கள் தமது விசாரணைகளை முடித்துக்கொண்டு வெளியேறும்போதே இக்குழு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பாலஸ்தீனிய பெண்களது அந்தரங்க விடயங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வதன் மூலம் அவர்களை அவமானப்படுத்துவது முதல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப்பாராது பாலியல் தொல்லை, வன்புணர்வு, பொருட்களால் பாலுறுப்புகளில் சித்திரவதை, நாய்களைக் கொண்டு மிரட்டுதல் போன்ற ஈனச்செயல்களைப் புரிகிறார்கள் என அக்குழு தெரிவித்திருக்கிறது.

காசாவிலுள்ள மருத்துவ வசதிகளை வேண்டுமென்றே முழுமையாக அழிப்பது மற்றும் மருத்துவ பணியாளர்களைக் கொல்வது மூலம் பாலஸ்தீனிய பெண்கள் கருச்சிதைவுக்குள்ளாகுவது பல மடங்குகள் உயர்ந்துள்ளது என அக்குழு விசனம் தெரிவித்துள்ளது.

சிறைகளிலும், தடுப்பு நிலையங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களிடம் இக்குழு தனது விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. “சர்வதேச நியமங்களுக்கிணைய இக்கைதிகள் தமது குடும்பங்களையோ, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரையோ அல்லது வழக்கறிஞர்களையோ சந்திக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டதன் மூலம் பாலஸ்தீனியர்களது அடிப்படைச் சுதந்திர மறுப்புக்கு இஸ்ரேல் தனது அரச அங்கீகாரம் வழங்கியுள்ளது” என இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு உள்ளே அப்கரிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்கள் மற்றும் சிரியாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கோலான் பிரதேசங்களில் வாழும் பாலஸ்தீனியர்களைச் சந்திக்க அனுமதி கேட்டிருந்தும் அதற்கு இஸ்ரேல் பதிலே அளிக்கவில்லை எனவும் இக்குழு தெரிவித்திருக்கிறது. அம்மானில் ஐ.நா. வினால் பராமரிக்கப்படும் காசா அகதிகள் முகாம்களில் இக்குழு நீண்ட காலம் தங்கியிருந்து இவ்விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. இதன் அடுத்த அறிக்கை ஒக்டோபர் 2024 இல் வெளிவரவிருக்கிறது.