‘இவ் வருடத்துக்கான பெண்’: பிரியா முருகப்பன்
பெருமைக்குரிய தமிழர்கள்

மறீ கிளெய்ர் எனப்படும் சர்வதேச புகழ் பெற்ற சஞ்சிகையினால், ‘இவ்வருடத்துக்கான பெண்களில்’ (Women of the Year) ஒருவராக அவுஸ்திரேலிய அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பெண்ணான பிரியா முருகப்பன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
பிரியா, அவரின் கணவர் நடேஸ் மற்றும் குழந்தைகள் கோபிகா, தர்ணிகா ஆகியோர் அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநிலத்தில் ‘சமூகத் தடுப்பு முகாமில்’ தற்போது வைக்கப்பட்டுள்ளனர். பிலோவிலா, குயீன்ஸ்லாந்திலுள்ள அவர்களது வீட்டிலிருந்து, 2018இல், அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளால் பலவந்தமாக இலங்கைக்கு நாடுகடத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் பல நல்லுள்ளம் கொண்ட தமிழ் மற்றும் அவுஸ்திரேலிய செயற்பாட்டாளர்களால் நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் நிரந்தர வசிப்பிடமின்றி இருக்கிறார்கள்.
இலங்கையிலிருந்து தனித் தனியாக அவுஸ்திரேலிய கரையில் வந்திறங்கிய பிரியா, நடேஸ் இருவரும் அங்கு புகலிடம் கோரியிருந்தார்கள். இக்காலத்தில் அவர்கள் திருமணம் செஉதுகொண்டு பிலோவிலாவில் வாழ்ந்தபோது இரண்டு குழந்தைகளும் பிறந்தார்கள். ஆனால் 2018 இல் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் குடிவரவு அதிகாரிகள் அவர்களைப் பலவந்தமாக விமானத்தில் ஏற்றி இலங்கைக்கு அனுப்ப முயற்சித்தபோது அவர்கள் சார்பில் போராடிய செயற்பாட்டாளர்களின் இறுதி முயற்சியின் பயனாக நீதி மன்றம் தலையிட்டு அவர்கள் சென்ற விமானம் திருப்பப்பட்டது. இருப்பினும் அவர்களுடைய புகலிடக் கோரிக்கை மீதான வழக்கு முடியும்வரை அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவர்களை 2019 முதல் கிறிஸ்துமஸ் தீவிலுல்ள அகதி முகாமொன்றில் தடுத்து வைத்திருந்தனர். பின்னர் குழந்தைகள் ஒருவருக்கு கடுமையான சுகவீனம் ஏற்பட்ட நிலையில் பிரியாவையும் குழந்தையையும் பேர்த்திலுள்ள மருத்துவமனையொன்றில் அனுமதித்து சிகிச்சையளித்ததைத் தொடர்ந்து அவர்கள் பேர்த்தில் ‘சமூகத் தடுப்பு முகாமொன்றில்’ தற்போது வசித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்து அவர்கள் வாழ்ந்த குயீன்ஸ்லாந்து மாநிலத்துக்கே அனுப்பிவிடும்படி செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் போராடி வருகிறார்கள்.

இந் நிலையில் பிரியாவையும், பிலோவிலாவைச் சேர்ந்த மேலும் எட்டுப் பெண்களையும், ‘துணிச்சலுடன் போராடி வெற்றிகளைத் தேடியது மட்டுமல்லாது ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தமைக்காக’ உலகின் ‘இந்த வருடத்துக்கான பெண்கள்’ எனத் தேர்ந்து கெளரவித்திருக்கிறது ‘மறீ கிளெய்ர்’ சஞ்சிகை.
இலங்கையில் பிரியாவைத் திருமணம் செய்யவிருந்தவர் அவர் கண் முன்னாலேயே எரிந்து இறந்துபோனது முதல், அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளால் பலவந்தமாக விமானத்தில் ஏற்ற முயற்சிக்கும்போது அவரது கையில் தசைநார் முறிவு ஏற்பட்டது; குழந்தை இறப்பின் தருணத்துக்குப் போனது என பிரியாவின் இன்னல்களுக்கு முகம் கொடுத்து தனது குடும்பத்தைக் காப்பாற்றத் துணிச்சலுடன் தொடர்ந்து போராடிவருவதை அவதானித்த ‘மறீ கிளெய்ர்’ அவருக்கு இந்த விருதைக் கொடுத்துக் கெளரவித்திருக்கிறது.
இலங்கையில் பிரியாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் தொடர்ந்து உயிரச்சுறுத்தல் இருக்கிறது என்பது தீர்க்கமற நிரூபிக்கப்பட்டதற்குப் பின்னரும் அவர்களது புகலிடக் கோரிக்கையை அவுஸ்திரேலிய அரசு தொடர்ந்தும் மறுத்து வருகிறது. ‘மறீ கிளெய்ரின்’ இக் கெளரவத்தைப் பெறும் பிரியாவும், பிலொவிலாவைச் சேர்ந்த இதர எட்டுப் பெண்களும், வேறும் பலரும் இழைக்கப்படும் அநீதிக்கெதிராக தொடர்ந்தும் போராடி வருகிறார்கள்.
மறீ கிளெய்ர்
மார்ச் 5, 1937 இல் பிரான்ஸில் ஆரம்பிக்கப்பட்ட இச் சஞ்சிகை பின்னர், 1941 இல், பிரித்தானியாவிலும் அச்சடிக்கப்பட்டது. ஃபிரான்ஸில் 420,000 பிரதிகளும், பிரித்தானியாவில் 230,000 பிரதிகளும் விற்பனையாகும் இச் சஞ்சிகை இப்போது உலக நாடுகள் பலவற்றிலும் பிரசுரமாகிறது. உலகம் முழுவதிலுமுள்ள பெண்கள் பற்றிய விடயங்களை முன்னெடுக்கும் இச் சஞ்சிகை தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு ‘இவ்வருடத்துக்கான பெண்கள்’ என்ற விருதை வருடா வருடம் வழங்கிக் கெளரவிக்கிறது.